சுதந்தர இந்தியாவில் இதுவரை 17 முறை மக்களவைத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. 14 பிரதமர்களை நாடு பார்த்துள்ளது.
18-வது மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
இதுவரை நடந்த பொதுத்தேர்தல்களில் ஆளுங்கட்சிக்குக் கிடைத்த தொகுதிகள், நம்மை ஆண்ட பிரதமர்கள், அவர்கள் ஆட்சிக்கு வந்த சூழல் உள்ளிட்ட விவரங்கள் குறித்த ஒரு பார்வை:
1951-ம் ஆண்டில், முதல் மக்களவைத் தேர்தல் நடந்தபோது, காங்கிரஸ் 364 தொகுதிகளிலும், 57-ம் ஆண்டு தேர்தலில் 371 தொகுதிகளிலும், 62-ம் ஆண்டு 361 இடங்களிலும் வென்றது. மூன்று முறையும் நேரு பிரதமராக இருந்தார். அந்தக் காலக் கட்டத்தில் எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் வேரூன்றி இருக்கவில்லை.
1964-ம் ஆண்டு நேரு மறைவுக்குப் பிறகு குல்சாரி லால் நந்தா பதினோரு நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்தார். அதன்பிறகு லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார். 66-ம் ஆண்டு சாஸ்திரி மரணம் அடைந்தார்.
இதனை தொடர்ந்து நேருவின் மகள் இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1967-ம் ஆண்டு இந்திரா தலைமையில், காங்கிரஸ் கட்சி பொதுத்தேர்தலை சந்தித்தது.
அந்தத் தேர்தலில் காங்கிரஸ் 283 இடங்களில் வென்றது. இந்திரா மீண்டும் பிரதமர் ஆனார்.
அப்போது கட்சியிலும், ஆட்சியிலும் அவர் சில சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். இதனால் இந்திராவுக்கும், மூத்தத் தலைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதன் உச்சக்கட்டமாக 1969-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து இந்திரா வெளியேற்றப்பட்டார். பெரும்பாலான எம்.பி.க்கள் அவர் பக்கம் நின்றார்கள்.
இதனால் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது.
காமராஜர் போன்ற தலைவர்கள் இருந்த, ஒரிஜினல் காங்கிரஸ் கட்சி, ‘ஸ்தாபன காங்கிரஸ்’ என அழைக்கப்பட்டது.
இந்திரா தலைமையில் உருவான புதிய காங்கிரசை, காங்கிரஸ் (ஆர்) என தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்ட நிலையில், 71-ம் ஆண்டு மக்களவைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்திரா மகத்தான வெற்றி பெற்றார். அவரது தலைமையிலான காங்கிரசுக்கு கிடைத்த இடங்கள்-352. மூன்றாம் முறையாக பிரதமர் ஆனார், இந்திராகாந்தி.
காங்கிரஸ் அல்லாத முதல் அரசு
காங்கிரஸ் கட்சியை வீழ்த்தவே முடியாது என்ற நிலையில், அவசர நிலை பிரகடனத்துக்குப் பிறகு, 1977-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.
அந்தத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததோடு, உத்தரபிரதேசத்தில் போட்டியிட்ட பிரதமர் இந்திராவும் தோற்கடிக்கப்பட்டார்.
எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கியிருந்த ஜனதாக் கட்சி 295 தொகுதிகளைக் கைப்பற்றி இருந்தது.
இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத அரசு, அப்போது தான் முதன்முறையாக அமைந்தது.
மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். கதம்ப கட்சிகளிடையே ஏற்பட்ட மோதலால், இரண்டே ஆண்டுகளில் தேசாய், பதவி விலக நேரிட்டது. அடுத்து பிரதமரான சரண்சிங் ஆட்சியும் 1980-ம் ஆண்டு கவிழ்ந்தது.
அதே ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், காங்கிரஸ் 353 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இந்திராகாந்தி மீண்டும் பிரதமர் ஆனார்.
அனுதாப அலை
1984-ம் ஆண்டு இந்திரா, தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதால், அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமர் ஆனார். உடனடியாக மக்களவைக்குத் தேர்தல் நடத்தினார்.
இந்திரா இறந்த அனுதாப அலையால், காங்கிரஸ் 404 தொகுதிகளில் வென்றது. சுதந்தர இந்தியாவில் ஆளுங்கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது இதுவே முதல் முறை.
ராஜீவ் காந்தி, காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, நிகழ்த்தப்பட்ட அந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.
அந்தத் தேர்தலில் பாஜக வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே ஜெயித்தது. 1989-ம் ஆண்டு காங்கிரசுக்கு சோதனையான காலம்.
போபார்ஸ் ஊழல், பஞ்சாப் தீவிரவாதம், இலங்கை தமிழர் விவகாரம் போன்ற பிரச்சினைகள் காங்கிரசை அந்தத் தேர்தலில் வீழ்த்தியது.
காங்கிரஸ் வெறும் 197 இடங்களில் வெல்ல, தேசிய முன்னணியின் தலைவராக இருந்த விபிசிங், பிரதமர் ஆனார். அவரது அணிக்கு அப்போது 143 இடங்கள் மட்டுமே கிடைத்தது.
வி.பி.சிங்கை இடதுசாரிகளும், பாஜகவும் வெளியில் இருந்து ஆதரித்தன. ஒரு வருடத்தில் அவரது ஆட்சிக் கவிழ, ஜனதாக் கட்சித் தலைவர் சந்திரசேகர், காங்கிரஸ் ஆதரவுடன் பிரதமர் ஆனார்.
கொஞ்ச நாட்களில், காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை விலக்கி கொண்டதால், அவரது ஆட்சி அற்ப ஆயுளில் முடிவுக்கு வந்தது.
1991-ம் ஆண்டு மக்களவைக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பிரச்சாரத்தின் போது, ராஜீவ் கொல்லப்பட்டார்.
எனினும் அந்தத் தேர்தலில் காங்கிரசுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. 232 இடங்களில் வென்ற காங்கிரஸ், நரசிம்மராவை பிரதமராக தேர்வு செய்தது. மெஜாரிட்டி இல்லாத நிலையிலும், அவர் 5 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.
1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரசுக்கு 140 இடங்கள் மட்டுமே, கிடைத்தது. 161 தொகுதிகளில் வென்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்த பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார், குடியரசுத் தலைவர்.
வாஜ்பாய் ஆட்சி அமைத்தார், பிரதமர் ஆனார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் அவரது ஆட்சி 13 நாட்களில் கவிழ்ந்தது.
இதனை தொடர்ந்து ஜனதா தளத்தைச் சேர்ந்த தேவகவுடா பிரதமர் ஆனார். அவரை, வெளியில் இருந்து காங்கிரஸ் ஆதரித்தது. கொஞ்ச நாட்களில் அவரது ஆட்சியைக் கவிழ்த்த காங்கிரஸ், ஐகே குஜ்ராலை பிரதமராக்கியது.
பின்னர் அவரையும் கவிழ்த்து விட, 1998-ம் ஆண்டு மீண்டும் மக்களவைக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் உருவானது.
அந்தத் தேர்தலில் பாஜக 181 இடங்களில் வென்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருந்தது.
126 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த 13 மாநில கட்சிகள் ஆதரவுடன், வாஜ்பாய் மீண்டும் பிரதமர் ஆனார். ஆதரவு அளித்த கட்சிகளில் ஒன்று ஜெயலலிதா தலைமையில் செயல்பட்ட அதிமுக. அதிமுக, அவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதால், வாஜ்பாய் ஆட்சி 13 மாதங்களில் கவிழ்ந்தது.
1999 ஆம் ஆண்டு மீண்டும் தேர்தல். பாஜக 182 இடங்களில் வென்றது. பிராந்திய கட்சிகள் ஆதரவோடு மூன்றாம் முறையாக வாஜ்பாய் பிரதமர் ஆனார்.
5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்து, முழு பதவிக்காலமும் ஆட்சியில் நீடித்த முதல் எதிர்க்கட்சி அரசாங்கம் எனும் பெருமையைப் பெற்றது பாஜக.
2004-ம் ஆண்டு காங்கிரஸ் 145 தொகுதிகளிலும், 2009-ம் ஆண்டு 206 தொகுதிகளிலும் வென்றது.
பெரும்பான்மை இல்லாவிட்டாலும் கூட, கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன், காங்கிரஸ் கட்சியின் மன்மோகன் சிங் 10 ஆண்டுகள் பிரதமர் பதவியில் நீடித்தார்.
2014-ம் ஆண்டு, தாமரை மலர தொடங்கிய ஆண்டு.
அந்தத் தேர்தலில், பாஜக 282 இடங்களில் வென்றது. கூட்டணிக் கட்சிகளை சேர்த்துக்கொண்டு ஆட்சி அமைத்து, முதன்முறையாக பிரதமரானார் மோடி.
2019-ம் ஆண்டு பாஜக 303 இடங்களைக் கைப்பற்றி இருந்தது. தனிப்பெரும்பான்மையுடன் மோடி இரண்டாம் முறையாக பிரதமர் ஆனார்.
ராஜீவ் சாதனையை மோடி முறியடிப்பாரா?
’வரும் தேர்தலில் பாஜக தனித்து 370 தொகுதிகளில் வெல்ல வேண்டும் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து 400 இடங்களைத் தாண்ட வேண்டும்’ என்பது மோடியின் இலக்காக உள்ளது.
அவரது திட்டம் நிறைவேறுமா?
1984 ஆம் ஆண்டு ராஜீவ் காந்திக்கு கிடைத்த 404 தொகுதிகளை காட்டிலும், மோடி கூடுதல் இடங்களில் வென்று சாதனை படைப்பாரா? ஜுன் 4 ஆம் தேதி தெரியும்.
(நாட்டில் முதல் பொதுத்தேர்தல் நடந்தபோது மொத்த தொகுதிகள் எண்ணிக்கை 489. மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது. இப்போது மொத்தம் 543 தொகுதிகள் உள்ளன)
– பி.எம்.எம்
#நேரு #குல்சாரி_லால்_நந்தா #லால்_பகதூர்_சாஸ்திரி #இந்திரா_காந்தி #மொரார்ஜி_தேசாய் #சரண்சிங் #ராஜீவ்_காந்தி #விபிசிங் #சந்திரசேகர் #நரசிம்மராவ் #வாஜ்பாய் #தேவகவுடா #ஐகே_குஜ்ரால் #மன்மோகன்_சிங் #மோடி #ஜெயலலிதா #அதிமுக #பாஜக #காங்கிரஸ் #காமராஜர் #Nehru #Gulsari_Lal_Nanda #Lal_Bahadur_Shastri #Indira_Gandhi #Morarji_Desai #Saransingh #Rajiv_Gandhi #VP_Singh #Chandrasekhar #Narasimha_rav #Vajpayee #Deva_Gowda #IK_Gujral #Manmohan_Singh #Modi #Jayalalithaa #ADMK #BJP #Congress #Kamarajar