ஊர் சுற்றிக் குறிப்புகள்:
அண்மையில் தமிழகத்தில் இரண்டு இளைஞர்கள் சலூனுக்குள் நுழைந்தபோது அனுமதி மறுக்கப்பட்டு, அந்தப் பிரச்சனை வெளிவந்து ஒரு பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டிருக்கிறது. காரணம், சாதிய ரீதியாக விதிக்கப்பட்டத் தடை என்று அதற்கு ஒரு காரணமும் சொல்லப்பட்டிருக்கிறது.
ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வார இதழ் ஒன்றுக்காக தென் தமிழகத்தில் உள்ள ஒரு முக்கியமான ஊருக்குச் சென்றிருந்தபோது, அந்த ஊரில் சாதி சார்ந்த விசேஷக் கட்டுப்பாடுகள் இருந்தது.
அதாவது தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் பிற்படுத்தப்பட்டவர்களில் ஒரு பிரிவினரும் சலூனுக்குள் நுழைவது தடுக்கப்பட்டிருந்தது.
அதையும் மீறி தடை விதிக்கப்பட்ட சாதியினருக்கு முடிவெட்டிய ஒரு சலூன் கடைக்காரரின் கை வெட்டப்பட்டிருக்கிறது.
அதே ஊரில் அந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் பிற்படுத்தப்பட்டவர்களில் ஒரு பிரிவினரும் உடைகளை அயர்ன் பண்ணி போடுவதற்குக் கூட தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.
இதைப் பற்றி எழுதுவதற்காக அந்த ஊருக்குச் சென்று இரண்டு தரப்பினரையும் சந்தித்தபோது, ஒரு தரப்பினரிடமிருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பி அந்த ஊரைவிட்டு கிளம்புவதற்குள் பலதரப்பட்ட சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.
அதன் பிறகு அந்தக் குறிப்பிட்ட பிரச்சினை ஒரு வார இதழில் வெளிவந்து, பரவலாக கவனம் பெற்றது நினைவில் இருக்கிறது.
தற்போது 40 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. அதே மாதிரி முடி வெட்டுவதில் கூட சாதிய பாரபட்சம் இன்றுவரை தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு சலூனில் கூட அனுமதி மறுப்பது இந்த நவீனயுகத்தில் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது.
தற்போதுவரை நடந்து கொண்டிருக்கும் இந்த மாதிரியான நவீன தீண்டாமைக்கு நாம் வெட்கப்பட வேண்டியிருக்கிறது.
– யூகி