நூல் அறிமுகம்: சி.வி.வேலுப்பிள்ளையின் ‘எல்லைப்புறம்’
யாழ்ப்பாணத்திலிருந்து மு.நித்தியானந்தன் அவர்கள் ‘வைகறை’ வெளியீட்டின் மூலம் தெளிவத்தை ஜோசப்பின் ‘நாமிருக்கும் நாடே’ (1979), என்.எஸ்.எம்.ராமையாவின் ‘ஒரு கூடைக்கொழுந்து’ (1980), சி.வி. வேலுப்பிள்ளையின் ‘வீடற்றவன்’ (1981) ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டிருந்தார்.
பின்னர் அதன் தொடர்ச்சியே போன்று அவரது தந்தையின் நினைவாக ‘கலைஒளி முத்தையா பிள்ளை நினைவுக்குழு’வின் மூலம் மலையக இலக்கிய வெளியீட்டுப் பணிகள் தொடர்ந்தன.
‘மாத்தளை முத்துமாரியம்மன் குறவஞ்சி’ (1993), ‘மலையகப் பரிசுக் கதைகள்’ (1994), ‘தமிழோவியன் கவிதைகள்’ (2000), ‘மலையக அரசியல்: தலைவர்களும் தளபதிகளும்’ (2022), ‘பெருநதியின் பேரோசை’ (2023), ‘வல்லமை தாராயோ?’ (2022). ‘கொலுஷா’ (2023), ‘தெளிவத்தை ஜோசப் கதைகள்’ (2023) ஆகிய நூல்களின் வரிசையில் அமரர் சி.வி. வேலுப்பிள்ளையின் ‘எல்லைப்புறம்’ என்ற நாவலை வெளியிட்டுவைப்பதில் பெருமகிழ்வடைகிறோம்.
சி.வி. அவர்களே மு.நித்தியானந்தனுக்கு தமிழகத்தின் பிரபல நாவலாசிரியர் அகிலன் அவர்களிடமிருந்து பெற்ற முன்னுரையோடு கூடிய ‘எல்லைப்புறம்’ நாவலின் தட்டச்சுப் பிரதியை அனுப்பி வைத்திருந்தார்.
எவ்வளவோ இடப்பெயர்வுகள், சிக்கல்களுக்கும் மத்தியில் அப்பிரதி பேணப்பட்டு நூல் வடிவம் பெற்றிருப்பது நம் பாக்கியமாகும்.
சென்னையிலிருந்து ஐலன்ட் அறக்கட்டளை வெளியீடாக 1987-ல் வெளியான ‘நாடற்றவர் கதை’ என்ற நூலும் நித்தியானந்தனின் முயற்சியிலேயே வெளியானது.
அமரர் சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள்மீது நித்தியானந்தன் பேரபிமானம் கொண்டவர். நமது எழுத்துலக முன்னோடியாக சி.வி.யைக் கௌரவப்படுத்துவதில் பெருமிதம் கொள்பவர். அவருடைய முன்னுரையோடு இந்த நூல் வெளிவருவது சிறப்புக்குரியது.
இந்நூலின் பக்க வடிவமைப்பைப் பொறுமையோடும் நேர்த்தியாகவும் வடிவமைத்துத் தந்த கி. ஆஷாவிற்கு எங்கள் நன்றி உரியது. என்றும் எமது நூலாக்கத்திற்கு உறுதுணையாய் நிற்கும் பொன். தனசேகரன் அவர்கள் இந்த நூலின் இறுதி வடிவத்தைச் செம்மைப்படுத்துவதுவரை தனது உழைப்பை நல்கியுள்ளார்.
அவருக்கு எங்களின் இதயம் கலந்த நன்றி. நூலின் அட்டைப் படத்திற்குப் பொருத்தமான ஓவியத்தைத் தேர்ந்துதவிய மீனாள் நித்தியானந்தனுக்கும் எங்கள் நன்றி.
சென்னை, டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தலைவர் முனைவர் குமார் ராஜேந்திரன் அவர்கள் கலைஒளி முத்தையா பிள்ளை நினைவுக்குழுவின் வெளியீடுகளுக்கு என்றும் ஆத்மார்த்தத் துணையாகத் திகழ்பவர். அவருக்கு எங்களின் இதயங்கலந்த நன்றி உரியது.
இந்நூலுக்கு அனுசரணை வழங்கிய சங்கரா விக்கிரமசிங்கவிற்கு (லண்டன்) நன்றி சொல்வது சாலவும் பொருந்தும்.
தமிழ்கூறு நல்லுலகு இந்த நூலை மனமுவந்து வரவேற்கும் என்பதில் ஐயமில்லை.
*****
எல்லைப்புறம்
நாவல்
கலைஒளி முத்தையா பிள்ளை நினைவுக்குழு
விலை: ரூ.200/-
தொடர்புக்கு:
எச்.எச்.விக்கிரமசிங்க,
hendry220649@gmail.com
call: +94777318030
#சி_வி_வேலுப்பிள்ளை #எல்லைப்புறம்_நாவல் #yellaipuram_naval #c_v_Velupillai