ராமதாசை கட்டிப்பிடித்து நெகிழ்ந்த மோடி!

சேலம் பொதுக்கூட்டத்தில் ருசிகரம்!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களில் பிரதமர் மோடி தொடர்ச்சியாக பல பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினாலும், சேலத்தில் நேற்று நடந்த கூட்டம் விசேஷமானது.

கூட்டணி கட்சிகளுடன் பாஜக உடன்பாடு கண்டபின் நடைபெற்ற முதல் பொதுக்கூட்டம், இது.

மேடைக்கு வந்த மோடி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்ட ஒவ்வொரு கூட்டணிக் கட்சி தலைவர்களையும் இரு கரம் கூப்பி புன்னகை தவழ வரவேற்றார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு மட்டும் சிறப்பு மரியாதை காத்திருந்தது. ராமதாசை, பிரதமர் மோடி கட்டிப்பிடித்து நெகிழ்ந்ததோடு அவரது கைகளையும் இறுகப்பற்றி கொண்டார். அப்போது ராமதாஸ் உணர்ச்சி வசப்பட்டதைப் பார்க்க முடிந்தது.

காமராஜர் – மூப்பனார்:

தமிழில் ’வணக்கம்’ என சொல்லி, தனது உரையை ஆரம்பித்த மோடி, தமிழகம் பூஜித்த தலைவர்களை நினைவு கூர்ந்தார்.

“தமிழகத்தின் ஒப்பற்றப் பெருந்தலைவர் காமராஜர்- அரசியலில் நேர்மை என்றால் அவரது முகம்தான் நினைவுக்கு வரும். அவர் உருவாக்கிய மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம் ஒரு மிகப்பெரிய திட்டம்.

ஏழை மாணவர்கள் கல்வி பயில்வதற்காக உணவு வழங்க அவர் ஆரம்பித்த திட்டம் என்னை மிகப் பெரிய அளவில் கவர்ந்த திட்டம்’’ என்று குறிப்பிட்ட மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜி.கே.மூப்பனாருக்கும் புகழாரம் சூட்டினார்.

’மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனாரை நான் நினைவுகூர்கிறேன். எத்தனைப் பெரிய தலைவர். அவர் தேசிய அரசியலில் மிகப்பெரிய உயரங்களைத் தொடக் கூடியவராக இருந்தார்.

அவர் மட்டும் மனது வைத்திருந்தால், இந்தியாவின் பிரதமர் என்ற உயரத்தை அடைந்திருப்பார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் குடும்ப ஆட்சி அவரை வளரவிடவில்லை.

அவருக்கு எதிரான அனைத்து வேலைகளையும் செய்து அவரை வளர விடாமல் செய்ததுதான் காங்கிரஸ் கட்சியின் குணம்” என்ற பிரதமர் மோடி, ஆளும் திமுகவையும், காங்கிரஸ் கட்சியையும் வெளுத்து வாங்கினார்.

“திமுகவும் காங்கிரஸும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இவர்கள் இருவருமே ஊழலையும், குடும்ப ஆட்சியையும் தொடர்ந்து நடத்துபவர்கள்.

அதனால்தான், காங்கிரஸ் ஆட்சியிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிறகு 5 ஜி தொழில்நுட்பமே வளர்கிறது. தமிழகத்தில் திமுக ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

தனியாக அவர்கள் ஒரு 5ஜி-யை நடத்தி வருகின்றனர்” என்று பிரதமர் மோடி காட்டமாக விமர்சித்தார்.

’’தமிழகத்தில், எனக்கும், பாஜகவுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் கிடைக்கும் ஆதரவைப் பார்த்து, திமுகவின் தூக்கம் தொலைந்துப் போய்விட்டது.

தமிழக மக்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டனர். இந்த முறை ஏப்ரல் 19-ம் தேதி விழும் ஒவ்வொரு வாக்கும், பாஜகவுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தான் என மக்கள் முடிவு எடுத்து விட்டனர்.

தமிழகத்தின் இந்த உறுதியான முடிவால், நமது வெற்றியின் எண்ணிக்கை நானூறைத் தாண்டும்” என உரத்த குரலில் மோடி கர்ஜித்தபோது, கூட்டம் ஆர்ப்பரித்தது.

– பி.எம்.எம்.

bjpkamarajarmodimoopanaropspmkramadossttvஓ.பன்னீர்செல்வம்காங்கிரஸ்காமராஜர்டாக்டர் ராமதாசுடிடிவி தினகரன்திமுகபாமகபாஜகபிரதமர் மோடிமூப்பனார்
Comments (0)
Add Comment