கார்டியன் – ‘ஜெர்க்’ ஆக்கும் இரண்டாம் பாதி!

‘இந்தப் படம் நல்லா இருக்கா, இல்லையா’ என்று கேட்டால், ‘இருக்கு ஆனா இல்ல’ என்பது போன்று சில ரசிகர்கள் நடுநிலைமையோடு பதிலளிப்பார்கள். அவர்களது கருத்துகளைக் கேட்டபிறகு படத்திற்குச் செல்லலாம் என்று காத்திருப்பவர்களை, அந்தப் பதில் ரொம்பவே ‘சுற்றலில்’ விடும்.

சில நேரங்களில் அப்படிப் பதிலளிப்பதற்குப் பொருத்தமானதாகச் சில திரைப்படங்கள் வெளியாகும். ஹன்சிகா நடிப்பில் சபரி – குரு சரவணன் இயக்கியுள்ள ‘கார்டியன்’ பார்த்தபோது, மனதில் அந்த எண்ணமே உண்டானது? ஏன் அப்படி?

ஹன்சிகா பேயா?

அபர்ணா (ஹன்சிகா) ஒரு ஆர்க்கிடெக்ட். ‘நான் ஒரு அன்லக்கி’ என்ற எண்ணம் அவரது மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

சிறு வயது முதலே அவரைச் சுற்றியிருப்பவர்கள் அப்படியொரு எண்ணத்தை உண்டாக்கி வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல், சாதாரணமான விருப்பங்கள் கூட எட்டாக்கனியான நிகழ்வுகள் அவரை அப்படி நினைக்க வைக்கின்றன.

இந்த நிலையில், ஒருநாள் கல்லூரி சகாக்களுடன் ஒரு கல்விச் சுற்றுலா செல்கிறார் அபர்ணா.

முழுமையாகக் கட்டப்படாத ஒரு கட்டடத்தைச் சுற்றிப் பார்க்கையில், அவரது காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிகிறது.

அந்த ரத்தம் கீழே இருக்கும் ஒரு கல்லில் படுகிறது. ரத்தம் வடிவதைப் பார்த்துப் பயந்த அபர்ணா, அந்த கல்லைக் கையிலெடுக்கிறார். தனது பேக்கில் எடுத்துவந்து வீட்டில் வைக்கிறார்.

அதன்பிறகு, அவரது வாழ்வே தலைகீழாகிறது. முழு மனதுடன் அபர்ணா என்ன நினைத்தாலும் அது அப்படியே நடக்கிறது.

இண்டர்வியூவில் அபர்ணாவை வேண்டாம் என்று சொன்ன நிறுவனம், பின்னர் அவரைப் பணியில் சேர்க்கிறது. நீண்ட நாட்கள் கழித்து, பிரிந்து சென்ற கல்லூரிக் காதலன் உடன் பழக வேண்டும் என்று நினைத்தால் அது தானாக நிகழ்கிறது.

யாராவது அவரைக் கோபப்படுத்தினால், உடனடியாக அவர்களுக்குப் பாதிப்பு நேர்கிறது.

உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய இயலாமல் தவிக்கும் அபர்ணாவின் தாய்க்கு உடனடியாக ஆபரேஷனுக்கு ஏற்பாடாகிறது.

சில நாட்கள் கழித்து, தனக்கு நடந்த சில ‘நல்லது’களால் யாரோ சிலருக்கு ‘கெட்டது’ நிகழ்ந்திருப்பதாக அறிகிறார் அபர்ணா.

அதனால், அது சம்பந்தமாகத் தெளிவு பெற வேண்டி ஒரு சைக்கால்ஜிஸ்டை (ஸ்ரீராம்) அணுகுகிறார். அவரிடத்தில், தனது நிறுவன இயக்குனரையே ஒருமுறை கொல்ல வேண்டும் என்று நினைத்ததாகச் சொல்கிறார்.

அபர்ணா சொல்வதை எல்லாம் கேட்கும் அந்த உளவியல் மருத்துவர், தன்னருகில் இருக்கும் செடி ஒரே நாளில் வளர்ந்தல் அவர் சொல்வதை நம்புவதாகக் கூறுகிறார்.

தன்னை யாரும் நம்பவில்லையே என்பதோடு, தன் பிரச்சனைக்கு ஒரு முடிவில்லையே என்ற வருத்தத்துடன் வீடு திரும்புகிறார் அபர்ணா. கோபத்தில் தன்னிடம் இருக்கும் அந்த கல்லை உடைக்கிறார். உடனே, அதிலிருந்து ஒரு பேய் வெளிவருகிறது. அவரை நோக்கி நகர்கிறது.

அதேநேரத்தில், மருத்துவமனையில் உள்ள செடி வளர்ந்து நிற்பதைப் பார்த்து அதிர்கிறார் அந்த சைக்காலஜிஸ்ட்.

தன்னால் தான் பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளருக்கு ஆபத்து என்று அபர்ணா சொன்னது நினைவுக்கு வருகிறது.

உடனடியாக, அந்த நபரின் சகோதரரான தனது நண்பருக்கு போன் செய்கிறார். அவரோ, ‘ஒரு பொண்ணு அவனைக் கொல்லப் போறாளா’ என்று அலட்சியப்படுத்துகிறார்.

இதற்கிடையே, அபர்ணாவின் வீட்டில், ‘என்னை கெட்டது செய்ய வச்சிடாத’ என்று அந்தப் பேயிடம் கெஞ்சுகிறார் அபர்ணா.

அதற்கு, ‘நான் நல்லது செஞ்சா நல்லாயிருக்குது, என்னால ஒரு கெட்டது நடந்தா அது பிடிக்காதா’ என்று கேட்டுவிட்டு, தன்னுள் இருக்கும் ஆத்திரத்திற்கான காரணத்தைக் கூறுகிறது.

அதன்பிறகு என்னவானது? அந்த பேய் யாரைப் பழி வாங்குவதற்காக, அந்த கல்லில் இருந்து வெளியேறுகிறது என்று சொல்கிறது ‘கார்டியன்’ படத்தின் மீதி.

இடைவேளை வரை ஹன்சிகாவின் அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் பற்றி ‘த்ரில்’ ஊட்டியவாறே நகரும் திரைக்கதை, பின்பாதியில் முழுமையாக ‘ஹாரர்’ அவதாரம் எடுக்கிறது. அதுவே, அரண்மனை சீரிஸ் படங்களைப் போலவே இதிலும் ஹன்சிகா பேயாக வருகிறாரா’ என்ற கேள்விக்குப் பதிலளிக்கிறது.

படம் எப்படியிருக்கிறது?

படம் முழுக்க வருகிறார் ஹன்சிகா. கதையும் அவரது பாத்திரத்தைச் சுற்றியே நகர்கிறது.

அவரது பாத்திரமும் ‘பப்லி’யாக வடிவமைக்கப்பட்டுள்ளது, படம் பார்க்கும் நமக்கோ, ‘எங்கேயும் காதல் டைம்ல நடிச்சிருந்தா நல்லாயிருந்திருக்கும்’ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

பிரதீப் பெனிட்டோ ராயன் இதில் நாயகனாக வருகிறார். அவரது பாத்திரத்தால் திரையில் எந்த மாற்றமும் நிகழ்வதாக இல்லை.

சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் மற்றும் அபிஷேக் வினோத் இதில் வில்லன்களாக வருகின்றனர்.

அவர்கள் நடிப்போ, ‘நாங்க மிரட்ட மாட்டோமே..’ என்கிற தொனியில் இருக்கிறது.

டைகர் தங்கதுரை, மொட்ட ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட காட்சிகள், காமெடி என்ற பெயரில் நம்மைக் கடுப்பேற்றுக்கிறது.

பிளாஷ்பேக்கில் தாய் – மகளாக நடித்தவர்கள் கொஞ்சமாய் நம்மை ஈர்க்கின்றனர். ஆனால், படத்திற்கான புரோமோஷனில் அவர்களது பெயர்கள் குறிப்பிடப்படவே இல்லை.

உண்மையைச் சொன்னால், இப்படத்தின் முதல் பாதி ஏதோ ஒருவகையில் ‘ப்ரெஷ்’ உணர்வைத் தருகிறது.

சில காட்சிகளில் பட்ஜெட் குறைபாடுகள் பல்லிளித்தாலும், ‘ஓகே’ என்று மனம் சாந்தமடைகிறது. பின்பாதியோ, அப்படியே எண்பதுகளில் வந்த பேய் படங்கள் பார்த்த எபெக்டை தருகிறது.

இயக்குனர்கள் சபரி, குரு சரவணன் இருவருமே காகிதங்களில் இருக்கும் விஷயங்களைத் திரையில் காட்சிகளாக மாற்றுவதில் ‘வித்தை’ காட்டியிருக்கின்றனர்.

ஆனால், அவர்களுக்கு ஏற்ற ‘அதிநவீன’ கதை சொல்லல் திரைக்கதையில் இல்லை. அதற்கு, இயக்குனர்களில் ஒருவரான குரு சரவணனின் எழுத்தாக்கமே காரணம்.

கமர்ஷியல் படத்தில் வழக்கமாக இருக்கும் குறைகள் தாண்டி, ஒரு கமர்ஷியல் படத்திற்கான லாஜிக்குகள் பலவற்றையே இப்படம் மீறியிருக்கிறது.

அதுதான் நம்மை ரொம்பவே சோர்வுக்கு உள்ளாக்குகிறது.

ஒரு பெண்ணைப் பீடித்திருக்கும் துரதிர்ஷ்டமானது பேயை அடக்கிய ஒரு கல்லால் மாறுவதாகச் சொல்லப்பட்டிருப்பது, இந்தக் கதையில் மிக வித்தியாசத்தை உணரச் செய்யும் இடம்.

ஆனால், அது தரும் கிளர்ச்சியைப் பின்பாதியிலுள்ள எந்தக் காட்சியும் தராமல் ‘ஜெர்க்’ அடையச் செய்கிறது.. படத்தின் மிகப்பெரிய பலவீனம் அதுவே!

கே.ஏ.சக்திவேலின் ஒளிப்பதிவு, எம்.தியாகராஜனின் படத்தொகுப்பு, லால்குடி என்.இளையராஜாவின் கலை வடிவமைப்பு, சாம் சிஎஸ்ஸின் பின்னணி இசை ஆகியன ஒன்றிணைந்து இப்படத்தின் முதல் பாதியைச் செறிவானதாக ஆக்குகின்றன.

ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, சண்டைப்பயிற்சி உட்படப் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் ‘சராசரிக்கு மேலான’ ஒரு திரைப்பட அனுபவத்தை நமக்கு வழங்குகின்றன.

அதனை நம்பி நிமிர்ந்து உட்கார்ந்தால், இரண்டாம் பாதியில் அனைவரது உழைப்பும் நம்மை ஏமாற்றுகிறது.

கொஞ்சமாய் குரு சரவணனின் திரைக்கதையைச் செம்மைப்படுத்தி புத்துணர்வூட்டியிருந்தால் நாம் பெறும் காட்சியனுபவமே வித்தியாசமானதாக இருந்திருக்கும்.

– உதய் பாடகலிங்கம்

#மொட்ட ராஜேந்திரன்director guruGuardian Reviewhanshikakasakthivellalkudi nilayarajasaravananஅபிஷேக்இயக்குனர்கள் சபரிஎம்.தியாகராஜன்கார்டியன் விமர்சனம்குரு சரவணன்கே.ஏ.சக்திவேல்சாம் சிஎஸ்சுரேஷ் மேனன்டைகர் தங்கதுரைபிரதீப் பெனிட்டோ ராயன்லால்குடி என்.இளையராஜாவினோத்ஸ்ரீமன்ஸ்ரீராம்ஹன்சிகா
Comments (0)
Add Comment