மூளை, உணர்ச்சிகள் இவற்றில் எதைச் சொல்வதைக் கேட்பது?

உணர்ச்சிகளின் சுவட்டில்: தொடர் – 2 / – தனஞ்ஜெயன்

பொதுவாக நாம் சிறிது டென்ஷனான நபர், உடனடி முடிவெடுப்பவர், சட்டென் உணர்ச்சி வசப்படுபவர் என அடையாளம் காணப்பட்டால், மற்றவர்களிடமிருந்து, அதுவும் நமது ‘நலம் விரும்பிகளிடமிருந்து’ அறிவுரைகள், உபதேசங்கள் மழையெனப் பொழியும்.

எல்லாருமே ஒன்றை குறிப்பிட்டுச் சொல்வார்கள். ‘நினைத்தவுடன் முடிவுக்கு வராதே, சற்று நிதானிப்பது முக்கியம். இதயத்திலிருந்துன் யோசிக்காதே, மூளையிலிருந்து யோசி’ என ஆரம்பித்து மிகப்பல வகையான மனநலக் குறிப்புகள் இலவசமாக் கிடைக்கும்.

ஆனால், யாருக்கும் சரியாகத் தெரியாத விஷயம் என்னவென்றால், நம்மிடமிருந்து பிறக்கும் ஒவ்வொரு எண்ணக் கீற்றிலும் உணர்ச்சிக் கலவை இல்லாமல் அது வெளிப்படாது என்பதுதான். அந்த அளவுக்கு நாம் நமது உணர்ச்சிகளோடு ஒன்றற கலந்துள்ளோம்.

நமது மூளை தன்னிடம் இருக்கும் விஷயங்களின், தரவுகளின், அடிப்படையில் நம்மை செலுத்துகிறது என்பது முழுமையான விஞ்ஞான உண்மையல்ல.

எப்படி எந்த உணவாக இருந்தாலும், மிக நன்கு சமைக்கப்பட்டாலும், அதனுடன் உப்பு சேராவிட்டால் ‘எல்லாம் இருக்கும், ஆனால் பெரும் குறைபாடு’ இருக்கிறது என்பது போலத்தான் இதுவும்.

நமது மூளையில் நம்மால் தெரிந்தும் தெரியாமலும் பதியப்படும் அனைத்து விதமான விஷயங்களும், உணர்ச்சிக் கலவையோடுதான் உள்ளே பதிவாகின்றன. உணர்ச்சி என்றால், கோப தாபங்கள் என்பது மட்டுமல்ல.

வெறும் தகவலோடு, அதற்கு சுவை கூடும் வகையில் ஏதோ ஒன்றுடன் உள்ளே போனால் அவ்வளவு எளிதில் மறக்காது.

நினைவுத் திறனில் பெரும் சாதனை படைத்தவர்களை, பிறவி சாதனையாளர் என சொல்லக் கூடியவர்களைக் கேட்டால், அவர்கள் விஷயங்களை ஏதோ ஒன்றுடன் தொடர்புப் படுத்தித்தான் நினைவில் வைத்திருப்பார்கள்.

இந்த ‘ஏதோ’தான் அந்த விஷயத்துக்கான உப்பு. இதில் நினைவு வைத்திருப்பவர்களுக்கு பிடித்தமான, அல்லது நினைவில் வைத்துக் கொள்ள விரும்பும் ஒரு விஷயம் இருக்கும்.

இந்த விஷயத்தை மனோரீதியான மைக்ரோஸ்கோப் வைத்துப் பார்த்தால், அதில் ஏதோ ஒரு உணர்ச்சியின் கீற்று நிச்சயம் இருக்கும்.

இதன் அடிப்படையில்தான் எந்த முடிவுக்கும் முன்னரும், அந்த முடிவோடு குறிப்பிட்ட உணர்ச்சி கலக்கிறது என்பதாக சொல்லுகிறோம். அதுவே வந்து கலப்பதில்லை.

மூளைக்கு ஏற்கனவே இந்தத் தொடர்பு இருகிறது. அதனால்தான் நியாயமான தர்க்க ரீதியிலான முடிவுகள் ஒவ்வொரு முறையும் எட்டப்படுவதில்லை.

எல்லாவற்றையும் பற்றி எடுக்கப்படும் முடிவுகளிலும் உணர்ச்சிகளின் கீற்றுகள்  கலந்திருக்கின்றன.

இதையும் மூளைதான் கலந்து தருகிறது. கேட்பதற்கு விசித்திரமாக இருக்கும். ஆனால் உண்மை. மூளையில் பல பகுதிகள், பல்வேறு விஷயங்கள் சேமித்து வைப்பதற்காக பயன்படுத்தப் படுகின்றன.

நாம் பார்த்தவைகள், பார்த்தவர்கள் பற்றிய விவர சமிக்ஞைகள் ஒரு புறம், கேட்கும், உணரும் சமிக்ஞைகள் ஒரு புறம், நுகரும் வாசங்கள், சுவை சார்ந்த தகவல்கள் என ஒவ்வொன்றும் அவற்றுக்கான பிரத்யேக குறிப்புச் சுட்டி சமிக்ஞைகளால் சேமிக்கப்படும்.

அதே போல நாம் அனுபவித்தறியும் ஒவ்வொரு விஷயமும், அது எவ்வளவு நுணுக்கமாக இருந்தாலும் சரி, அவற்றை சார்ந்த உணர்ச்சிகளின் தன்மையோடு சேமித்து வைக்கப்படும் இடம், முன் நெற்றிப் பகுதியின் முன்புறம் பாதாம் வடிவில் இருக்கும் அமைக்டலா Amygdala என்ற பகுதிதான் இந்த சேமிப்பு கிடங்கு.

இது நரம்பு மண்டலத்துடன் தொடர்பு கொண்டது. இந்த தொடர்பு மையத்தை  அமைக்டலாவின் நீட்சி எனக் கூறலாம்.

இதுதான் நமது அனைத்து முடிவுகளுக்கும் பின்னால் இருக்கும் அனுபவம் சார்ந்த, அவை எழுப்பிய உணர்ச்சிகள் சார்ந்த பதிவுகள் பற்றிய தகவல்களை சந்தர்ப்பத்திற்கு ஏற்றார் போல அனுப்பும்.

‘எனக்கு பால் பாயாசம்தான் பிடிக்கும்: பருப்பு பாயாசம் பிடிக்காது’ என ரகம் பிரித்து ரசனை முடிவுகளில் இருந்து மிகப்பெரும் முடிவுகள் வரை, இருக்கக் கூடிய உணர்ச்சிகள் சார்ந்த முடிவுகள் அனைத்திற்குள் உள்ள அனுபவப் பதிவுத் தகவல்கள் இங்கிருந்துதான் செல்கின்றன.

இதை நிரூபிக்கும் வகையிலான சரியான உதாரணத்தை உண்மை சம்பவம் மூலம் விளக்கியுள்ளார் டானியல் கோல்மேன் என்ற புகழ் பெற்ற உளவியலாளர்.

இவர் உணர்ச்சியை அறிவினூடே செலுத்தி அதன் அடிப்படையில் எப்படி நமக்கானவற்றை நடத்திக் கொள்ள முடியும் என்பதை அவரது நூலான, Working With Emotional Intelligence என்பதில் விளக்கியுள்ளார்.

அதில் அறிவின் உதவி கொண்டு நாம் எதையும் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போதே, கூடவே உணர்ச்சியின் படிமங்கள் இல்லாமல் நடப்பதில்லை என்பதை விளக்க ஒரு உண்மை சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.

டாக்டர் அண்டோனியோ டெமோசியோ என்ற ஒரு இத்தாலிய நரம்பியல் மருத்துவர். அவர் தனது நோயாளியான அந்தப் பகுதியில் மிகப்பெரும் சிவில் வழக்கறிஞர். நல்ல வசதி படைத்தவர்.

அவருக்குத்தான் மூளை நரம்பு மண்டலப் பகுதியில் சிறிய கட்டியை அகற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையை செய்தார் டெமாசியோ. அது மிகவும் வெற்றிகரமாக முடிந்தது.

ஆனால் அப்போது அவர் அமைக்டலாவுடன் நரம்பு மண்டலத்தை இணைக்கும் நரம்புத் தொகுதியில் ஒன்றை தவறுதலாக துண்டித்து விட்டார். அது அப்போது அவருக்குத் தெரியவில்லை.

அதன் விளைவு குழப்பமளிப்பதாகவும், எதிர்பாராததாகவும் இருந்தது. அந்த வழக்கறிஞருக்கு புரிந்துணரும் திறனில் எந்தப் பிரச்சினைகளும் எழவில்லை.

ஆனாலும் அவர் தனக்கான அறிவுக் கூர்மையுடன் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. அடுத்த சில மாதஙளிலேயே, தனது வேலையை இழந்தார்.

குடும்பத்தில் பிரச்சினைகள் எழுந்தன. விவாகரத்தில் இது முடிந்து, அவரது வீடும் கூட கை விட்டுப் போனது. அந்த வழக்கறிஞர் என்ன செய்வது எனத் தெரியாமல் மறுபடியும் மருத்துவரிடம் வந்தார்.

டாக்டர் அவரை மறுபடியும் நரம்பியலுடன், உளவியல் சார்ந்த பல சோதனைகளுக்கு உட்படுத்தினார். எல்லா முடிவுகளும் எந்த பிரச்சினையும் இல்லை என்றே வந்தது.

இப்போது டாக்டருக்கு குழப்பம் ஏற்பட்டது. அவரும் விடாமல் இரண்டு வாரங்களுக்கு வேறு பல சோதனைகளை செய்தார். அப்போதும் அவரது நோயாளியின்  புகார்களுக்கான விடை கிடைக்கவில்லை.

ஒரு நாள் டாக்டர் டெமோசியோ, தனது நோயாளியிடம், ‘அடுத்து எப்போது நமது சந்திப்பை வைத்துக் கொள்ளலாம்?’ எனக் கேட்டார்.

இது யதேச்சையான, யதார்த்தமான கேள்விதான். அதற்கு அந்த வழக்கறிஞர், அடுத்த இரண்டு வாரங்களில் தனக்கிருக்கும் பணிகள், அவற்றிலுள்ள, சாதக பாதக அம்சங்கள் ஆகியன பற்றி விலாவரியாக விவரித்துக் கொண்டே போனார்.

இதைக் கேட்ட மருத்துவருக்கு சட்டென்று ஒரு விஷயம் புலப்பட்டது.

வழக்கறிஞரின் விவரிப்பில் அவரது எந்த உணர்ச்சியும் கலக்கவேயில்லை என்பதுதான்.

ஆகவே இதுதான் வேண்டும், அல்லது வேண்டாம் என்கிற அம்சமும் கலக்கவில்லை. அப்போதுதான் டாக்டர் டெமோசியோவிற்கே ஒரு விஷயம் புரிந்தது.

அவரது புரிந்துணர்வில் கலந்திருக்க வேண்டிய உணர்ச்சிகள், அதாவது அனுபவப் பதிவுகளால் உருவாகி பதிந்திருக்கும் உணர்ச்சிகள் கலக்காமல் இருப்பதால், எது பிடிக்கும், எது வேண்டும் என்கிற தேர்வுத் தீர்மானத்துக்கு அவரால் வர முடியவில்லை என்ற உண்மையைக் கண்டறிந்தார். அதன் பிறகு அதற்கான சிகிச்சையை மேற்கொண்டார். .

வெறும் அறிவு, வெறும் உணர்ச்சி ஆகியன தனித்தனியாக கற்றலின், அனுபவங்களின், அவற்றைப் புரிதலின் மூலமாக மூளையில் பதிவாகின்றன.

இவை இரண்டும் கலந்தால்தான் நமக்கு எதைப் பற்றியும் முடிவு எடுக்கக்கூட   முடியும் என்பது கவனிக்கத் தக்கது.

ஆகவே, மூளைத் திறன் மட்டும் வைத்து எதையுமே சரியாக, அதன் பின்னணியுடன் புரிந்துகொள்ள இயலாது. இந்தப் பின்னணிதான் உணர்ச்சிகள் என்பதால் அவை எவ்வளவு முக்கியம் என்பது புரிந்துகொள்ள முடியும்.

இதே உணர்ச்சிகள் நம்மை மீறி, அறிவின் அம்சத்தை கொஞ்சமாக் கலந்து வெளிவந்தால் என்ன ஆகும்? விளைவு நிச்சயம் சரியாக இருக்காது.

இதனால்தான் நம்மை பாதிக்கும் விஷயங்களை மிகச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அந்த வகையில் முதலில் ஆத்திரம் / கோபம் / என பல பெயர்களால் அழைக்கப்படும் சினம் என்கிற முக்கிய உணர்ச்சியைப் பற்றிப் பார்க்கலாம்.

தொடர்ந்து வாசிப்போம்…

முதல் தொடரை வாசிக்க…

https://thaaii.com/2024/03/01/my-home-mirror-doesnt-show-my-face/

– தனஞ்ஜெயன், மனநல ஆலோசகர்.

Comments (0)
Add Comment