திருமண வாழ்க்கை அவ்வளவு சிக்கலானதா?

நூல் அறிமுகம்: சி.வி.வேலுப்பிள்ளையின் ‘எல்லைப்புறம்’

திருமண வாழ்வு எல்லோருக்குமே ஏற்றதாக அமைந்துவிடுகிறது என்று சொல்வதற்கில்லை. இயல்பாகவே ஏற்றதாக அமைந்துவிட்டால், அது மிகச் சிறந்த வாய்ப்புதான்.

அப்படி ஏற்றதாக அமையாவிட்டாலும் முயற்சி செய்து அதை வெற்றிகரமாக நடத்துவதற்குப் பாடுபடுகிறவர்கள் சிலர் இருக்கிறார்கள். இன்னும் சிலருக்கு அதுவே துன்பக் கடலாய் மாறிவிடுகிறது.

திருமண வாழ்வு என்பது மனிதர்களின் அக வாழ்வாக, ரகசியம் நிறைந்த வாழ்வாக இருப்பதால், அதன் சிக்கல்கள் பலருக்கு வெளியில் தெரிவதில்லை.

சிக்கல்களைத் தெரிந்துகொண்டு சுவையோடும் அனுதாபத்தோடும் ஒருவர் கதையாக எழுதுவாரேயானால் அதை நாம் விரும்பிப் படிக்கிறோம்.

நானும் அப்படித்தான். திரு.சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ள இந்த ‘எல்லைப்புறம்’ என்ற நாவலை விரும்பிப் படித்தேன்.

தொடக்கத்திலிருந்து முடிக்கும் வரையிலும் படிக்கும் ஆர்வம் வளரும் வகையில் கதை எழுதப்பெற்றிருக்கிறது.

நாவல் என்றால் அதில் ஒரு கதை இருக்க வேண்டும். அந்தக் கதை சுவையாகவும் இருக்க வேண்டும். இந்த இரண்டும் இதில் இருக்கின்றன. ஆகவேதான் படிக்கும் ஆர்வம் வளர்கிறது.

சுந்தரி என்னும் திருமதி நாயகம் கதையின் தொடக்கத்தில் நமக்குப் புரியாத புதிராக விளங்குகிறாள். சமுதாயத்தின் மேல்மட்டக் குடும்பத்தில் பிறந்து மற்றொரு மேல்மட்டத்துக் குடும்பத்தில் புகுந்தவள்.

கணவனிடமிருந்து பிரிந்து வாழும் அவளுடைய செயல்கள் நமக்கு வியப்பையும் திகைப்பையும் ஏன் கோபத்தையும் கூடத் தூண்டுகின்றன.

அவள் ஏன் அப்படி நடந்துகொள்கிறாள் என்பதுதான் கதை. முடிவில் அவளுக்காக நாம் இரங்குகிறோம்.

அவனிடம் மனதைப் பறிகொடுத்துவிட்டு அதை மீட்க முடியாமல் தவிக்கும் அமரதாச என்ற சிங்கள இளைஞனின் பாத்திரம் நம் அனுதாபத்திற்குரிய பாத்திரமாகிறது.

அவன்மீது அன்புகொண்ட மெனிக்கே என்ற சிங்களப் பெண்ணும் திருமணமானவள்தான்.

திலகரத்னவை மணந்துகொண்ட பின் திருமண வாழ்வில் ஏமாற்றம் கண்டவள். எனினும் அமரதாசவிடம் அவள் அன்பு கொண்டதை நாம் ஆதரிக்கும் வகையில் அவள் இந்தக் கதையில் உருவாக்கப் பெற்றிருக்கிறாள்.

அமரதாசவின் நண்பனாகவும் தோட்டத் தலைவனாகவும் ராஜன் இடையிடையே வந்து சென்றாலும் அவனும் நம் கவனத்தைக் கவர்ந்து விடுகிறான்.

மேல்மட்டத் தமிழர் – சிங்களவர்களின் அகத்துறை – வாழ்வு பற்றிச் சித்திரிக்கும் நாவலாக இது இருந்தாலும், ஆசிரியர் அங்கு வாழும் ஏழை மக்களையும் மறந்துவிடவில்லை.

மெனிக்கே ஏழைச் சிங்களப் பெண், அவளுடைய பிறந்த வீட்டைச் சூழ்ந்து வாழும் ஏழைச் சிங்கள மக்களின் வாழ்வைச் சிறிதளவு நாம் இந்தக் கதையில் காணமுடிகிறது.

அதுபோலவே டாக்டர் நாயகத்தின் கோலாகல விருந்துகளையும் அவற்றினால் வாட்டமுறும் அவருடைய தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வையும் நாம் இதில் சற்று எதிர்பார்க்கிறோம்.

இதில் அங்கங்கே இலங்கையில் வாழும் மக்களின் பிரச்சினைகளும் பேசப்படுகின்றன.

அந்தச் சிக்கல்களுக்கு மருந்தே போல் சிங்கள இளைஞன் அமரதாச, தமிழ் இளைஞன் ராஜன் இவர்களுடைய நட்பு அமைந்திருக்கின்றன என்றே கூற வேண்டும்.

இத்தகைய நட்பும் ஒற்றுமை உணர்வும் வளர வேண்டிய பண்புகள். அவற்றால் அனைவருக்குமே நலம்.

திறனாய்ந்து படிக்க விரும்புவோர் தங்களுக்குள் எழுப்பிக்கொள்ள வேண்டிய சில வினாக்கள் இருக்கின்றன.

கதையில் கலை அம்சத்தோடு கூடிய சுவையும் கருத்தோடு கூடிய சிந்தனையும் பிணைந்துள்ளனவா? கதாபாத்திரங்கள் உயிர் பெற்றவர்கள்தாமா? குறிக்கோள் இருக்கிறதா? நடையழகும், வாழ்க்கைத் தன்மையோடு விளங்குகின்றதா?

இந்த வினாக்களை எழுப்பிக்கொண்டு இந்த நாவலை நான் படித்தபோது, இது ஒரு தரமுள்ள நாவல் என்றே எனக்குத் தோன்றுகிறது.

திரு. வேலுப்பிள்ளை அவர்கள் நெடுநாள் தொழிலாளர் இயக்கத்தில் பங்குகொண்டவர். அவர்களுடைய ஆங்கிலக் கவிதைகள் தோட்டத் தொழிலாளர்களின் குரலாக உலகில் எங்கும் ஒலித்தவை.

நாவல் துறையில் அவர்களுடைய இந்தக் கலை முயற்சி பாராட்டுக்குரியது. என் வாழ்த்துகள்.

அகிலன் எழுதிய எல்லைப்புறம் நூலின் முன்னுரை.

*****

எல்லைப்புறம்
நாவல்
கலைஒளி முத்தையா பிள்ளை நினைவுக்குழு
விலை: ரூ.200/-

தொடர்புக்கு:

எச்.எச்.விக்கிரமசிங்க,
hendry220649@gmail.com
call: +94777318030

#சி_வி_வேலுப்பிள்ளை #எல்லைப்புறம்_நாவல் #yellaipuram_naval #c_v_Velupillai

Comments (0)
Add Comment