கூடடையாமல் பறப்பதை விரும்புங்கள்!

நூல் அறிமுகம்:

முழுமையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததற்கான பலனாக அல்லது பயனாக பால்யத்தில் இருந்து அமெரிக்கா பறக்கும் வரை தன்னுடைய பயணத்தையும், பசியையும், பாசத்தையும், பன்முகத்தோடு பளிச்சென்று எழுதி நமது பால்யத்தையும் திரும்பிப் பார்க்குமாறு நினைவுகளை வரிகளாக்கி 35 கட்டுரைகளில் பறக்க வைக்கிறார் நா.முத்துக்குமார்.

பள்ளிக்கால வாழ்க்கை, கல்லூரிக் காலம், சொந்த ஊர் அனுபவங்கள், நண்பர்கள், பெற்றோர்கள், தாத்தா, பாட்டி (ஆயா), ஆசிரிய ஆசிரியைகள் என்று எவரையும் விட்டுவைக்காமல் தன்னுடைய வாழ்வில் வந்து போனவர்கள் அத்தனை பேரையும் பட்டியலிட்டு சிறுசிறு நினைவுகளையும் பகிர்ந்து சில இடங்களில் கனத்த வரிகளுடன் முடியாமல் முடிந்திருக்கிறது பல நினைவுகள்.

எத்தனையோ பற்றுகளை அறுத்த பட்டினத்தாரால் கூட அன்னை மீது கொண்ட பற்றை அறுக்க முடியவில்லை என்று அவரின் பாடல் வரிகளோடு அம்மாவின் நினைவுகளோடு “தையல்” என்று தொடங்குகிறது இந்தப் புத்தகம்.

பள்ளிப் பருவத்தில் தான் எழுதிய ஒரு கவிதையை சிலாகித்து வாசித்து தேற்றும் ஒரு உறவாக “ரோஜாப்பூ மிஸ்” அமைந்ததெல்லாம் அவருக்கே உரித்தானது தான்.

பல வருடங்கள் கழித்து அந்த மிஸ்ஸூக்கு கடிதம் எழுதியதும் அதற்கு, அந்த மிஸ் பதில் எழுதியதும் வாசிக்கும் நம் ஒவ்வொருத்தருக்கும் ஒரு டீச்சரை நினைவு கூறும் என்பதிலும் சந்தேகமில்லை.

எனக்கெல்லாம் ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு டீச்சர் இருந்திருக்காங்க என்பதை நினைத்துக் கொண்டேன்‌.

கறிச்சுவை – சைவம் மட்டுமே உண்ணும் ஆயாவின் அன்பு எவ்வாறு அசைவம் தேடி தன் பேரனுக்கு வாங்கிக் குடுக்கிறாள்.

தாய் இல்லாப் பிள்ளை சோற்றுக்கு கையேந்தும் நிலையும் மற்றவர்கள் ஐயோ பாவம் என்று நினைக்கும் அந்த நிலையை எழுத்தில் கொண்டுவந்து துக்கம் தொண்டையை கவ்வும் ஒவ்வொரு நினைவும் அருமை.

இதே ஆயா சின்ன வயதில் பேரனுக்கு போட்டுவிட்ட தங்கச் செயினை வைத்து அந்த நிகழ்வை நினைவுகூறும் நா.மு. தன் தந்தையையும் ஆயாவையும் விட்டுக்கொடுக்காமல் எழுதியிருப்பது நன்று.

காஞ்சிபுரம் சொந்த ஊரான இவருக்கு என்னென்ன நிகழ்வுகளை அந்த ஊரைச் சுற்றி நினைவலைகளாக வீசமுடியுமோ அவ்வளவும் நினைவுகூர்ந்து எழுதியிருக்கிறார்.

வாத்தியார் மகன் கவிஞர் ஆனது பெரிய விஷயமாக இல்லாவிட்டாலும் சிலவற்றை பார்க்கும்போது பல கறைகளை நீக்கித்தான் கவிஞன் ஆகிறான் என்பதை இந்தப் புத்தகம் சொல்கிறது.

பல அக்கா/அண்ணாக்களின் காதலுக்கு தூது சென்ற பறவையாக மட்டும் இல்லாமல் கல்யாணம் வரை முடிந்த அக்காக்களின் காதலை விவரித்த விதமும். நண்பர்களின் குணாதிசயங்கள் எவ்வாறு காலப்போக்கில் மாறுபட்டு ஊரைவிட்டு ஊர் சென்று பிழைக்கும் அனைத்து நண்பர்களையும் அவர்களின் வாழ்வாதாரங்கள் குறித்தும் ஃபீல் பண்ண முடிகிறது.

இறுதியாக அமெரிக்கப் பயணமும், பல மேடைகளில் உரையாடல் நிகழ்த்திய பேச்சாளராகவும், கவிஞனாகவும், அமெரிக்காவில் தமிழுக்கு ஒரு இடத்தை பிடித்துக் கொடுத்த நல்ல மனிதனாகவும் நினைவுகளில் பல பாடல் வரிகளை அலாதியாக அலைமோதிச் செல்லும் இவரின் எழுத்துகள் கணத்த சுவையானது தான்.

பறந்து சென்ற நினைவுகளை நிறுத்தி சுவைத்தவை:

♥️ ஓடுற மீனை நிறுத்தக் கூடாது. அதும் போக்கிலேயே விட்டுடணும்.

♥️ ‘கதலில்’ தொடங்கிய எங்க உறவை கால் போட்டு ‘காதல்ல’ முடிச்சது நீதாண்டா.

♥️ அத்தையால் வளர்க்கப்பட்ட குழந்தைகள், தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.

♥️ கொஞ்சம் பொய் கலந்தாதான் இலக்கியம்’னு சொல்லுவான்.

♥️ நிலவின் பிம்பம் எல்லா நதிகளிலும் விழுகிறது. அதற்காக எல்லா நதிகளையும் நிலா காதலிக்க வேண்டுமா என்ன?

♥️ வாசனையற்ற பூக்களில் , நிறங்களால் கிரீடம் சூட்டிவிடுகிறது இயற்கை.

♥️ ஒவ்வொரு முறையும் கறியின் முதல் துண்டை எடுத்துக் கடிக்கையில் லேசாக உப்புக் கரிக்கும். என் மனதுக்கு மட்டுமே தெரியும். அது, ஆயா அன்று அழுத கண்ணீரின் உப்பு!.

நிச்சயம் பல நினைவுகளை தன் நினைவுகளுடன் ஒப்பிடச் செய்யும். கூடடையாமல் கொஞ்சமேனும் பறத்தலை விரும்புங்கள். நினைவுகளை சேகரிக்கலாம்.

– நன்றி: சரண்யா

நூல்: நினைவோ ஒரு பறவை
ஆசிரியர்: நா.முத்துக்குமார்
பக்கங்கள்: 184
பதிப்பகம்: டிஸ்கவரி புக்பேலஸ்
விலை : ₹200/-

#நினைவோ_ஒரு_பறவை_நூல் #Nenaivo_Oru_Paravai_Book
#நா_முத்துக்குமார் #Na_Muthukumar #டிஸ்கவரி_புக்_பேலஸ் #Discovery_Book_Palace

Comments (0)
Add Comment