ஒரு வழியாக நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.
உடனே தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும்.
சாலைகளில் அங்கங்கே வாகனங்களை மறித்து சோதனைகள் தீவிரமாக நடக்கும். வியாபாரிகள் படாதபாடு படுவார்கள்.
அத்தியாவசியத் தேவைக்குப் பணத்தை எடுத்துச் செல்லும்போது மாட்டிக் கொள்வார்கள். கொரோனா காலத்தில் நடந்த சோதனைகளைச் சராசரியான மக்கள் எதிர்கொள்ள நேரிடும்.
இதெல்லாம் நடந்தாலும், இதை எல்லாம் சர்வ சாதாரணமாக மீறிப் பணத்தைத் திட்டமிட்ட இடங்களுக்குக் கொண்டு செல்கிறவர்களும் இருப்பார்கள். அரை இருளில் அவற்றைப் பெற்றுக் கொள்கிறவர்களும் இருப்பார்கள்.
ஒவ்வொரு முறையும் பணம் அல்லது மதுபானங்களைக் கடத்தியதாகப் பல நூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
தொகுதிக்குள் பணமும், பொருட்களும் பட்டுவாடா செய்யப்பட்டதாகப் பலதரப்பட்ட செய்திகள் அடிபட்டாலும், அவற்றை மையமாக வைத்து எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்?
எத்தனை தொகுதிகளில் வேட்பாளர்கள் அத்து மீறியதாகக் கைதாகியிருக்கிறார்கள்?
தேர்தல் ஆணையம் இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் தான் என்ன?
இனி-பிரச்சாரங்கள் வலுவாகவும், அநாகரீகமாகவும் நடக்கலாம். மீடியாக்களுக்கு நல்ல தீனிகள் கிடைத்து அவர்களுடைய சேனல்களின் டி.ஆர்.பி. ரேட்டிங் ஏற்றப்படும். தேர்தல் அறிக்கைகள் வழியாக மறுபடியும் தூண்டில் விரிக்கப்படும்.
ஜனநாயகம் என்கிற சொல் திரும்பவும் அடிக்கடி நினைவூட்டப்படும்.
வாக்காளர்களுக்கு ஒரு நாள் தற்காலிகமான மதிப்புக் கிடைக்கும்.
பல விதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் வெளிப் புழக்கத்திற்கு வரலாம்.
எப்படியோ- தேர்தல் பந்தயம் அதிகாரப் பூர்வமாகத் துவங்கிவிட்டது.
– யூகி
#தேர்தல்_ஆணையம் #பிரச்சாரங்கள் #நாடாளுமன்றத்_தேர்தல் #தேர்தல் #தேர்தல்_விதிமுறைகள் #தொகுதி #வேட்பாளர்கள் #தேர்தல்_அறிக்கைகள் #ஜனநாயகம் #eletion_commission #parliament_election #Lok Sabha Election 2024