குங்ஃபூ பாண்டா 4 – பார்த்து ரசிக்கும் ரகம்!

ஐஸ் ஏஜ், டாய் ஸ்டோரி, மடகாஸ்கர், இன்க்ரெடிபிள்ஸ் போன்ற அனிமேஷன் படங்களைப் பார்த்தவர்களுக்கு அதன் அடுத்தடுத்த பாகங்களை ரசிப்பதில் எந்த தயக்கமும் இருக்காது.

அந்த வரிசையில் இடம்பெறத்தக்க இன்னொரு சீரிஸ் ‘குங்ஃபூ பாண்டா’. இதன் ஒவ்வொரு பாகமும் நம்மைச் சிரிக்க வைத்தன; நெகிழ வைத்தன; பிரமிக்கச் செய்தன; திரும்பத் திரும்ப ரசிக்கத் தூண்டின.

தன் மீதே நம்பிக்கையில்லாமல் இருக்கும் ஒரு பாண்டாவிடம் மாவீரன் பொறுப்பு தரப்படும்போது, அதனை அந்த பாண்டா எதிர்கொண்டது எப்படி என்பதை சிரிக்கச் சிரிக்கச் சொன்னது அதன் முதல் பாகம்.

அடுத்து வந்த இரண்டு பாகங்களும் அதன் பெற்றோர் என்னவானார்கள் என்பதையும், அதன் தந்தை இப்போது எங்கிருக்கிறார் என்பதையும் அறிவதாக அமைந்தது.

அந்த வரிசையில், தற்போது ‘குங்ஃபூ பாண்டா 4’ தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. இந்தப் படமும் நம்மை இருக்கையோடு சேர்த்து கட்டிப் போடுகிறதா?

மாவீரனுக்கு ‘ப்ரோமோஷன்’!

போ(பாண்டா)வை ‘மாவீரன்’ என்று அறிவித்தவர் மாஸ்டர் ஊஹ்வே (ஆமை). அவர் இயற்கையோடு கலந்தபிறகு, போவை மாவீரனாக்கும் பொறுப்பைத் திறம்பட மேற்கொள்கிறார் மாஸ்டர் ஷிபு (எலி). அடுத்தடுத்த பல சாகசங்களை போ நிகழ்த்தக் காரணமாகிறார்.

தற்போது ஊஹ்வே கையில் இருந்த ஆன்மிகத் தடி போ வசமிருக்கிறது.

அது மட்டுமல்லாமல், வெகுநாட்களாக ‘மாவீரன்’ பொறுப்பை போ வகிப்பதும் மாஸ்டர் ஷிபு மனதில் மாற்றத்தை உண்டாக்குகிறது.

அதனால், ஊஹ்வேயின் தொடர்ச்சியாக போவை ஆன்மிகக் குருவாக ஆக்க வேண்டுமென்று எண்ணுகிறார் மாஸ்டர் ஷிபு (எலி).

கூடவே, உனது இடத்திற்குப் புதிய மாவீரனைத் தேர்ந்தெடு என்றும் கூறுகிறார். ஆனால், போவுக்குக் கொஞ்சமும் அதில் விருப்பமில்லை.

அதனால், மாவீரனைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் விழாவில் யாரையும் தேர்ந்தெடுக்காமல் நழுவுகிறார் போ. அப்போது, அவரது மாளிகையில் இருக்கும் அரிய பொக்கிஷங்களைத் திருட முயற்சிக்கிறார் ஸென் (நரி).

ஸென் உடன் முதலில் சண்டையிடும் போ, பின்னர் அவரது திறமையைக் கண்டு வியக்கிறார்; இருவருக்குள்ளும் நட்பு பூக்கிறது.

அப்போது, அமைதிப் பள்ளத்தாக்கை அடிமைப்படுத்தக் காத்திருக்கும் கெமேலியன் இருக்குமிடம் தனக்குத் தெரியும் என்கிறார் ஸென்.

அதற்கு முன்னரே, சிலர் மூலமாக அந்த பச்சோந்தியின் உருமாறும் வித்தையைப் பற்றி போவுக்கு நன்றாகத் தெரியும்.

அதனால், கெமேலியனை அழிப்பதே தனது அடுத்த பணி என்று கிளம்புகிறார் போ. மாஸ்டர் ஷிபு எவ்வளவோ தடுத்தும் அதனைக் கேட்பதாக இல்லை.

வழியில் பல தடைகள். அவற்றைக் கடந்து கெமேலியன் மாளிகையை அடைந்தால், அங்கு தந்திரமாகச் சிறைப்படுத்தப்படுகிறார் போ.

அப்போதுதான், அந்த கெமேலியன் திட்டமிட்டு அனுப்பிய ஆள் தான் ஸென் எனத் தெரிய வருகிறது.

அது மட்டுமல்லாமல், ஊஹ்வே தந்த ஆன்மிகத் தடியும் அவரிடத்தில் இருந்து பறிக்கப்படுகிறது.

அந்த ஆன்மிகத்தடியைக் கொண்டு, போ இதுவரை சண்டையிட்டு வீழ்த்தி ஆன்ம உலகத்துக்கு அனுப்பிய மாவீரர்களிடம் இருந்து ‘ஆன்ம ரகசியத்தை’ திருடி, அதன் மூலமாக குங்ஃபூ உலகின் தலைமைப் பொறுப்பை எட்ட முயற்சிக்கிறது கெமேலியன். அதன் தொடக்கமாக, போவை மலையில் இருந்து கீழே தள்ளுகிறது.

ஆனால், போ சென்ற பாதையில் அவரது தந்தை லீ ஷானும், வளர்ப்புத் தந்தை சைனீஸ் கூஸும் ரகசியமாகப் பின்தொடர்ந்து வருகின்றனர். மலையில் இருந்து கீழே விழ இருந்த போவைக் காப்பாற்றுகின்றனர்.

அதன்பிறகு, மீண்டும் மலையேறிச் சென்று தன்னை வீழ்த்த நினைத்த கெமேலியனிடம் இருந்து தனது ஆன்மிகத்தடியை போ பறித்தாரா இல்லையா என்று சொல்கிறது ‘குங்ஃபூ பாண்டா 4’ படத்தின் மீதி.

இதுவரை மூன்று பாகங்களிலும் ‘மாவீரன்’ ஆக வந்த பாண்டாவுக்கு இதில் ‘மாஸ்டர்’ புரோமோஷன் தந்திருக்கிறது எழுத்தாக்கம் செய்திருக்கும் ஜோனதன் ஐபெல், க்ளென் பெர்கர், டேரன் லெம்ஹே கூட்டணி.

நரி, ஆமை, பாண்டா என்று ஒவ்வொரு பாத்திரத்தின் உருவ அமைப்பையும் வைத்து, காமெடியாக வசனத்தை அமைத்திருக்கிறது ‘தமிழாக்கம்’ செய்த குழு. பல இடங்களில் அது சிரிப்பை வரவழைப்பது நல்ல விஷயம்.

எளிமையான தமிழில், எரிச்சல்படுத்தாத வகையில் இருப்பதால், குழந்தைகளை நல்லதொரு ‘ட்ரெண்ட்’ நோக்கி நகர்த்திய பெருமை இந்த ‘டப்பிங்’ பதிப்புக்கு வந்து சேரும்.

சிறப்பான காட்சியாக்கம்!

இரண்டாம், மூன்றாம் பாகங்களைப் போலவே, ‘குங்ஃபூ பாண்டா 4’ன் காட்சியாக்கத்தில் நேர்த்தி அதிகம். அதுவே சண்டைக்காட்சிகளை நாம் விழிகள் விரித்துக் காண வகை செய்திருக்கிறது.

இது போன்ற அனிமேஷன் படங்களின் தயாரிப்பு மற்றும் பின் தயாரிப்பு பணிகளுக்கு ஆண்டுக்கணக்கில் உழைப்பு செலவிடப்படுவதற்கான பலன்களை அதுவே தெரியச் செய்கிறது.

ஹான்ஸ் ஜிம்மர் தந்த இசையோடு சேர்ந்து ஒலிக்கிறது ஸ்டீவ் மஸாரோவின் இசை. அதுவே, படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் சிறப்பான முடிவைப் பெற்றிருப்பதாக உணரச் செய்கிறது.

ஜாக் ப்ளாக், டஸ்டின் ஹாஃப்மேன், ஜேம்ஸ் ஹாங் என்ற வழக்கமான கேங் உடன் புதிதாக இணைந்திருக்கிறார் அமெரிக்க நடிகை ஆக்வாஃபினா.

இவர் ‘ஸென்’ பாத்திரத்திற்குக் குரல் தந்திருக்கிறார். ஆங்கிலத்தில் பார்ப்பவர்கள் அவர்கள் பேசிய ஒரிஜினல் வசனங்களைக் கேட்டு ரசிக்கலாம்.

முதல் மூன்று பாகங்களைப் பார்த்தவர்களுக்கு, நான்காம் பாகம் சுமாரானதாகத் தெரியலாம்.

ஆனாலும், இப்படத்தின் தொழில்நுட்பப் பணிகள் சிறப்பாக அமைந்திருப்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். ‘முதலுக்கு மோசமில்லை’ ரகத்தில் இருப்பதால் இப்படத்தினை ஒருமுறை பார்த்து ரசிக்கலாம்!

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment