அமீகோ கேரேஜ் – தெளிவு கூட்டியிருக்கலாம்!

புரியாத வகையில், எளிதில் மனதில் ஒட்டாத விதத்தில் அமைந்த சில திரைப்படங்களின் டைட்டில், அந்தப் படங்கள் வெற்றியடையும் பட்சத்தில் நம் மனதில் நிரந்தர இடத்தைப் பெறும்.

ஒரு வார்த்தை தொடங்கி வாக்கியமாக நீள்பவையும் அதில் அடங்கும். அதேநேரத்தில், வித்தியாசமாக டைட்டில் அமைந்தாலும் படம் வெற்றியடையாதபோது, காலப்போக்கில் அவை நினைவில் இருந்து நீங்கிவிடும்.

மாஸ்டர் மகேந்திரன், ஆதிரா ராஜ், தீபா பாலு, ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலர் நடிப்பில், பிரசாந்த் நாகராஜன் இயக்கியுள்ள ‘அமீகோ கேரேஜ்’ மேற்கண்டவற்றில் எந்த ரகம்?

கேங்க்ஸ்டர் கதை.. ஆனால்?

ருத்ரா (மகேந்திரன்) என்பவரின் பார்வையில் இருந்து இப்படத்தின் கதை சொல்லப்படுகிறது.

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ருத்ரா, தனது நண்பர்கள் இருவரோடு சேர்ந்து ஜாலியாக ஊர் சுற்றுகிறார்.

அதற்குப் பணம் தேவைப்படும் போதெல்லாம், பெற்றோரிடம் பொய்களை அள்ளிவிடுகிறார். அவரது நண்பர்களும் அப்படித்தான்.

அம்மாணவர்களின் பெற்றோர்கள் அவர்கள் செய்யும் தவறுகளைப் பொறுத்தாலும், அப்பகுதியிலுள்ள ‘அமீகோ கேரேஜ்’ எனுமிடத்திற்குச் செல்லவிடாமல் ‘கண்டிப்பு’ காட்டுகின்றனர்.

காரணம், வாகனங்கள் பழுது பார்க்கும் அவ்விடத்தில் ‘கஞ்சா விற்பனை’யும் நடைபெறுவதுதான். அதனால், அதனை நடத்திவரும் ஆனந்தைக் (ஜி.எம்.சுந்தர்) கண்டால் அப்பகுதியில் இருப்பவர்களுக்கு ஆகாது.

ஒருமுறை இயற்பியல் ஆசிரியரிடம் மூவரும் வம்பு செய்ய, அவர் இவர்களை அடி வெளுத்தெடுக்கிறார்.

கூடவே, பெற்றோரைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறுகிறார். அதிலிருந்து தப்பிக்க, அவர்கள் ஆனந்தை நாடுகின்றனர். அவரும் அந்த ஆசிரியரை அழைத்து மிரட்டுகிறார்.

அப்போது தொடங்குகிறது ஆனந்த் – ருத்ரா இடையிலான நட்பு. கல்லூரி, கம்பெனி வேலை என்றான பின்னும் அது தொடர்கிறது.

ஒருமுறை ஒயின்ஷாப்பில் ருத்ராவுக்கும் குரு (தாசரதி நரசிம்மன்) எனும் ரவுடிக்கும் மோதல் முளைக்கிறது. அதில் குருவை ருத்ரா அடித்துவிடுகிறார்.

பதிலுக்கு ருத்ராவிடம் அவர் வம்பிழுக்கத் தொடங்குகிறார். மேற்கொண்டு அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்க, குருவின் முதலாளியான முத்துவைச் சந்திக்கிறார் ஆனந்த். ருத்ராவுக்காக அவரிடம் பேசுகிறார்.

அதன்பிறகும் ருத்ராவிடம் மோதுவதில் குரு ஆர்வம் காட்டுகிறார். ஒருகட்டத்தில் முத்துவே ருத்ராவைக் கொல்லச் செல்லும் அளவுக்கு சூழ்ச்சிகளில் ஈடுபடுகிறார்.

அதனால் உயிர் பயத்தில் ஓடி ஒளியும் நிலைக்கு ஆளாகிறார் ருத்ரா. ஆனந்தைச் சந்திக்க வாய்ப்பில்லாதவாறு, அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

அந்தக் கணத்தில் போதை வஸ்துகளே கதி என்றாகும் ருத்ரா, முத்துவைக் கொல்லும் எண்ணத்தைத் தனக்குள் வளர்க்கிறார்.

அதன்பின் என்னவானது? சாதாரண பின்னணி கொண்ட ருத்ரா, ரவுடிகளே அஞ்சும் முத்துவைக் கொன்றாரா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

இந்தக் கேள்விகளுக்குப் பதில்கள் தெரிந்தபின்னும் திரைக்கதை நகர்கிறது.

வழக்கமான ‘கேங்க்ஸ்டர்’ கதை என்றபோதும், குற்றச் செயல்களில் ஒரு சாதாரண மனிதன் எப்போது ஈடுபடத் தொடங்குகிறான் என்பதன் வேரை அடிக்கோடிட்டுக் காண்பிக்கிறது இந்த ‘அமீகோ கேரேஜ்’. அந்த வகையில் இந்தப் படம் வித்தியாசப்படுகிறது.

வித்தியாசமான பார்வை!

‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்றதன் மூலமாக இளைய தலைமுறை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மகேந்திரன். இன்றும் அவரை ‘மாஸ்டர் மகேந்திரன்’ என்று விளிப்பது கொஞ்சம் அசூயையாகத்தான் உள்ளது.

கேமிரா முன் நிற்பதைச் சிறு வயதிலேயே தொடங்கிவிட்ட மகேந்திரனுக்கு, ஒரு கமர்ஷியல் படத்தில் தன்னை எப்படி வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது நன்றாகவே தெரிந்துள்ளது.

அதேநேரத்தில், திரைக்கதையை முழுமையாகப் படித்துவிட்டு ஒரு படத்தில் இடம்பெறும் வாய்ப்பு அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பதும் புரிகிறது. இப்படமும் அதற்கொரு உதாரணமாகியுள்ளது.

ஆதிரா ராஜ் இதில் நாயகியாக இடம்பெற்றுள்ளார். ஆனால், கதையில் அவருக்குப் பெரிதாக முக்கியத்துவம் இல்லை. கொஞ்சம் மெச்சூர்டான பெண்ணாகத் தோன்றி, கொஞ்சமாய் கவனம் ஈர்க்கிறார்.

திரைக்கதையின் தொடக்கத்தில் நான்கைந்து காட்சிகளில் இடம்பெறுகிறார் தீபா பாலு. அந்தக் காட்சிகள் எதற்காக என்பது இயக்குனருக்கே வெளிச்சம்.

வில்லனாக தாசரதி நரசிம்மன் நடித்துள்ளார். அவரது கட்டுமஸ்தான உடல்வாகும் முரட்டுத்தனமான உடல்மொழியும் ரவுடி பாத்திரத்திற்குப் பொருந்துகிறது.

போலவே, முத்துவாக நடித்துள்ளவரும் திரையில் மிரட்டியிருக்கிறார். ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் வருவது போன்றே இதிலும் நடித்துள்ளார் ஜி.எம்.சுந்தர்.

நாயகன் மகேந்திரனின் நண்பர்களாக வரும் இருவரும் ஆரம்பத்தில் ஐந்தாறு காட்சிகளில் நம்மைச் சிரிக்க வைக்கின்றனர்.

நாயகனின் பெற்றோர்களாக நடித்தவர்களுக்கு இதில் அதிகக் காட்சிகள் இல்லை. அவர்களைப் போன்று பல பாத்திரங்களைத் திரையில் காட்டி, கதையிலுள்ள அழுத்தத்தைக் கூட்டத் தவறியிருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நாகராஜன்.

இயக்குனர் சொன்ன காட்சிகளுக்கு உருவம் தருவதில் முனைப்பைச் செலுத்தியிருக்கிறது விஜயகுமார் சோலைமுத்துவின் ஒளிப்பதிவு. ஆனால், பிரேம்களில் ‘ரிச்னெஸ்’ அதிகம் தென்படவில்லை.

ரூபன், சி.எஸ்.பிரேம்குமாரின் படத்தொகுப்பானது முன்பாதியை ‘ஓகே’ ரகத்திலும், பின்பாதியை ‘டிஸ்லைக்’ தரத்திலும் தந்துள்ளது.

இரண்டாம் பாதியில் காட்சிகள் கன்னாபின்னாவென்று ‘கட்’ செய்யப்பட்டு, இயக்குனர் என்ன கதையைச் சொல்ல வருகிறார் என்பதே புரியவில்லை. கிளைமேக்ஸில் அது உச்சத்தைத் தொடுகிறது.

ஸ்ரீமன் பாலாஜியின் கலை வடிவமைப்பானது, ஜி.எம்.சுந்தரின் ‘அமீகோ கேரேஜை’ காட்டிய விதத்தில் நம்மை ஈர்க்கிறது. மற்றபடி ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் சட்டென்று நம்மை ஈர்க்கின்றன. பின்னணி இசையும் கூட காட்சிகளின் தன்மையை அதிகப்படுத்தும்விதமாகவே இருக்கிறது. ஆனால், ஒரு படமாகத் திருப்தி தராமல் நகரும் திரைக்கதை அந்த உழைப்பை வீணடித்திருக்கிறது.

இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பிரசாந்த் நாகராஜன்.

இப்படத்தில் நாயகன் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குக் காரணம், முக்கியமான வாழ்க்கைத் தருணங்களில் அவர் எடுத்த முடிவுகளே என்று சொல்ல முனைந்திருப்பது நல்ல விஷயம்.

ஆனால், பின்பாதி திரைக்கதையில் அதனைத் தெளிவுடன் சொல்வதில் கோட்டை விட்டிருக்கிறார்.

நல்ல கதை!

இனிமேல் வரும் தகவல்கள் ‘ஸ்பாய்லர் ரகத்தில்’ இடம்பெறும் என்பதால், அதனை விரும்பாதவர்கள் தவிர்த்துவிடலாம்.

‘தீயதைப் பார்க்காதே, பேசாதே, கேட்காதே’ என்று பெற்றோர் கூறும் அறிவுரைகளுக்குப் பிள்ளைகள் முக்கியத்துவம் தர வேண்டும் என்று சொல்கிறது ‘அமீகோ கேரேஜ்’.

இதில் ‘அமீகோ’ என்றால் ஸ்பானிஷில் ‘நட்பு’ என்று அர்த்தமாம். அதற்கேற்றவாறு ஜி.எம்.சுந்தர் பாத்திரத்தின் பின்னணியையும், அவர் நடத்திவரும் கேரேஜையும் திரையில் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

நாயகனின் பெற்றோர் எந்த அளவுக்கு அவரை உயிராகப் போற்றுகின்றனர் என்பதனை விளக்கும் வகையில் திரைக்கதையில் வலுவான காட்சிகளை அமைக்கத் தவறியிருக்கிறார். போலவே, அவரது நண்பர்களின் குடும்பத்தினரையும் காட்டத் தவறியிருக்கிறார்.

பெரும் நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களில் கூட, கதை நிகழும் களங்களுக்கு முக்கியத்துவம் தந்து ‘ஷாட்கள்’ வைக்கப்படுகின்றன.

இந்தப் படத்தில் நிலப்பகுதிக்குச் சரியான இடம் கொடுக்கப்படவில்லை. அதுவே, மொத்தக் கதையும் ஏதோ ஒரு கற்பனைப் பிரதேசத்தில் நடக்கும் உணர்வை ஏற்படுகிறது.

மொத்தமாகப் படம் இரண்டு மணி நேரமே ஓடுகிறது.

நாயகனின் குடும்பம், அவரது நண்பர்கள், நாயகியின் பின்னணி, நாயகிக்கும் வில்லனுக்குமான பரிச்சயம், நாயகன் மீதான வில்லனின் வன்மம் போன்றவற்றை விலாவாரியாகக் காட்டியிருந்தால் படத்தின் நீளமும் அரை மணி நேரம் கூடியிருக்கும். திரைக்கதையில் ‘துண்டு’ விழும் இடங்களும் சரி செய்யப்பட்டிருக்கும்.

‘வன்முறையான வாழ்க்கையை நோக்கிய முதல் அடியையே தவிர்த்துவிடுங்கள்’ என்பதை இளைய தலைமுறைக்குச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர்.

கூடவே, போதையின் தழுவலும் கூடா நட்பும் வேண்டவே வேண்டாம் என்றிருக்கிறார். நிச்சயமாக அது பாராட்டப்பட வேண்டியது.

ஆனால், இயக்குனர் பிரசாந்த் நாகராஜன் அமைத்துள்ள திரைக்கதை, அவர் எடுத்துக்கொண்ட கதையின் அழுத்தத்தைச் சரியான முறையில் திரையில் பிரதிபலிக்கவில்லை.

இரண்டையும் நேர்கோட்டில் நிறுத்தியிருந்தாலே, இந்தப் படத்தின் டைட்டில் நிச்சயமாக ரசிகர்கள் மனதில் தடம் பதித்திருக்கும்!

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment