ரெங்கையா முருகன்
நெல்லையில் உள்ள இந்துக் கல்லூரியில் திருநெல்வேலி எழுச்சி குறித்த கருத்தரங்கு மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தது இந்துக் கல்லூரி நிர்வாகம்.
கல்லூரி சார்பாக நல்ல முறையில் வரவேற்பு நிகழ்வை கல்லூரி முதல்வர் முனைவர் கே.பாலசுப்பிரமணியன் நிகழ்த்தினார்.
சுமார் 150 மாணவ மாணவிகள் ஒன்றரை மணிநேரம் செல்போனை நோண்டாமல் உட்கார வைக்கப்பட்டு கருத்தாளர்களின் கருத்தினை ஆர்வமாக கேட்ட விதம் மகிழ்ச்சி அடையவைத்தது.
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் பொதுச் செயலாளர் மருத்துவர் த. அறம் அவர்கள் தொடர்ந்து பெரியவர் வ.உ.சி.யின் அர்ப்பணிப்பை கொண்டு செலுத்துவதில் முன்னோடியாக இருப்பவர்.
சாத்தூர் மாநாட்டில் வ.உ.சி.க்கு படத்திறப்பு நடத்தியவர். திருநெல்வேலி எழுச்சி கூட்டம் நடத்தியதன் பின்னணியில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.
1908-க்கு முன்னும் பின்னும் நூலாசிரியர் காசி.விசுவநாதன் அவர்கள் பாரதியும் வ.உ.சி.யும் இணைந்து செயலாற்றிய விதம், எழுச்சியின் பின்னனி வரலாறு நுட்பமான தகவல்களோடு உரையாற்றி அடித்தளமிட்டார்.
சிறப்புரையாக இருபது நிமிடங்கள் மட்டுமே பேசினேன். ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும். தான் கொண்ட கொள்கைக்காக சமரசமற்று முன்னோடியாக இருந்ததையும், திருநெல்வேலி எழுச்சியில் சாமான்யர்களால் எவ்வாறு திட்டமிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
பெரியவர் வ.உ.சி. எவ்வாறு மக்கள் திரட்டலை உருவாக்கினார் என்பதன் பின்னணி, மேடைத் தமிழ்ப் பேச்சு, தொழில்துறை மீளுருவாக்கம் மூலமாக மூன்று வழிகளில் ஆங்கிலேய கம்பெனி, ஆங்கிலேய முதலாளி, ஆங்கிலேய நிர்வாகம் ஆகியவற்றுக்கு மிகத்துல்லியமான எதிர்த் தாக்குதல் நடத்தியதையும் விளக்கினேன்.
இந்த எழுச்சிக்கு காரணமானவர்கள் குதிரை வண்டி ஓட்டுபவர்கள், நாவிதர்கள், வண்ணார்கள், பெட்டிக்கடை சிறு வியாபாரிகள், ஆலைத் தொழிலாளர்கள், கசாப்பு கடைக்காரர்கள், தின்பண்டம் விற்பவர்கள் இவர்களால் தான் இவ்வளவு பெரிய எழுச்சி சாத்தியமானது.
ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றை விட, அதாவது ஆவணங்களில் இருப்பதை விட மக்கள் மனப்பிரதியில் ஆவணப்படுத்தப்படாத வரலாற்றுச் செய்திகள் ஏராளமாக இருக்கிறது.
ஆகையால் மாணவச் செல்வங்களே களத்திற்கு செல்லுங்கள். செவிவழி எழுச்சி செய்திகளை சேகரியுங்கள்.
புதிய எழுச்சி வரலாற்றை எழுதுங்கள் என்று பேசி முடித்து விட்டு பெரியவர் வ.உ.சி. ஆய்வு முன்னோடி பேரா. ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சி வரலாறு மற்றும் Swadeshi Steam நூலினையும் மாணவர்களுக்கு காண்பித்து விட்டு உரையை முடித்துக்கொண்டேன்.
மதிப்புக்குரிய கிருஷி அவர்களையும் அந்த இடத்தில் சந்திக்க நேர்ந்தது மகிழ்ச்சி அளித்தது.
பேசிமுடித்து விட்டு திரும்பும் பயண வேளையில் மனது ஒன்றை சொல்லிக் கொண்டு இருந்தது.
முருகா உனக்கு பெரிய வேளை இருக்கிறது. தப்பிக்கக் கூடாது. வேறு வழியில்லை. தமிழகம் முழுவதும் மாணவர்களிடத்தில் பெரியவர் வ.உ.சி. குறித்து தொடர்ந்து விதைக்கும் வேளையை செய்.
நல்ல நிலத்தில் விதைத்தால் அதற்கான பலன் கிடைக்கும். விதை நன்று நிலம் பழுது என்றால் நாம் ஒன்றும் செய்ய இயலாது.