‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி இருந்த திரைப்படம் ‘லால்சலாம்’.
விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்த இந்த படத்தில் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்திருப்பார்.
லைகா நிறுவனம் சார்பில், சுபாஸ்கரன் தயாரித்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி வெளியான ‘லால் சலாம்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் வசூலில் தோல்வி கண்டது.
படத்தின் தோல்விகளுக்கு, இயக்குநர்கள் ஏதாவது ஒரு காரணத்தை கையில் வைத்திருப்பார்கள்.
‘லால்சலாம்’ ஏன் தோற்றது? என ஐஸ்வர்யாவிடம் கேட்டபோது, அவர் அளித்த பதில் இது:
“லால் சலாம் படத்துக்காக 21 நாட்கள் எடுத்த காட்சிகள் அடங்கிய ’ஹார்ட் டிஸ்க்’ (hard disk) தொலைந்துவிட்டது.
அது, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி காட்சிகளாகும். நிஜமான கிரிக்கெட் போட்டியைக் காண்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில், 10 கேமராக்களைப் பயன்படுத்தி அந்தக் காட்சிகள் எடுக்கப்பட்டன.
ஆனால், அந்தக் காட்சிகள் எல்லாம் காணாமல் போய்விட்டது. மீண்டும் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல்.
அப்பா ‘வேட்டையன்‘ படத்துக்காக ‘கெட்டப்’ மாற்றி, அந்த படத்தின் படப்பிடிப்புக்குச் சென்று விட்டார்.
விஷ்ணு விஷால் இந்த படத்துக்காக தாடி வளர்த்திருந்தார். படம் முடிந்து விட்டதால், தாடியை எடுத்துவிட்டார். செந்தில் சாரும் ’கெட்டப்’ மாற்றி விட்டார்.
எனவே காணாமல்போன காட்சிகளை ‘ரீ-ஷூட்’ செய்ய முடியவில்லை.
இதனால் இருக்கின்ற காட்சிகளை வைத்துப் படத்தை முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
‘ஹார்ட் டிஸ்க்’ தொலைந்து போகாமல் இருந்திருந்தால் படத்தின் கதையை இன்னும் தெளிவாகச் சொல்லி இருப்போம்’’.
‘லால் சலாம்’ தோல்விக்கு ஐஸ்வர்யா அளித்த விளக்கம் இது.
நீங்க காட்சிகளை தொலைச்சீங்க!
படத் தயாரிப்பாளர் காசை தொலைச்சிட்டார்.
– பி.எம்.எம்.