அமைச்சர் பதவிக்காக கட்சியைப் பாஜகவுடன் இணைத்த சரத்குமார்?

17 ஆண்டுகளாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வந்த நடிகர் சரத்குமார், கட்சியைக் கலைத்து விட்டு, பாஜகவில் இணைந்துள்ளார்.

சரத்குமார் கடந்து வந்த பாதை

சினிமாவில் நுழைவதற்கு முன்னர் சரத்குமார், தினகரன் பத்திரிகையில் பணியாற்றி வந்தார். ஆரம்பத்தில் பத்திரிகை விநியோகம் செய்தவர் பிறகு நிரூபராக உயர்ந்தார்.

அவரது கனவு, சினிமாகவே இருந்தது. பத்திரிகை உலக செல்வாக்கை பயன்படுத்தி, தமிழ் சினிமாவில் எளிதாகப் புகுந்தார்.

துண்டு துக்கடா வேடங்களில் நடித்த சரத்குமார், ‘புலன் விசாரணை’ படத்தில் வில்லனாக நடித்து ஓரளவு மக்களால் அறியப்பட்டார்.

’சூரியன்’ திரைப்படம் அவரை முழு ஹீரோவாக உயர்த்த ‘நாட்டாமை’, ‘சூரிய வம்சம்’ போன்ற படங்கள் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்தது.

கூடவே ‘சுப்ரீம் ஸ்டார்’என்ற பட்டமும் வந்தது.

மெல்ல மெல்ல அவருக்குள் அரசியல் ஆசையும் துளிர்விட்டது.

1998-ம் ஆண்டு திமுகவில் சேர்ந்த அவருக்கு அதே ஆண்டில் நெல்லை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரிடம் தோற்றுப்போனார்.

சரத்குமார் சோர்ந்து விடாமல் இருக்க, அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கொடுத்து அழகு பார்த்தார், கருணாநிதி.

திமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தக் கட்சியிலிருந்து விலகி, 2006-ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

அந்தக் கட்சியிலும் அவர் நீண்ட நாட்கள் தங்கவில்லை.

சொந்தக் கட்சி தொடங்க வேண்டும் என்ற வேட்கை அவருக்குள் தலை தூக்கியது.

2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ம் தேதி ’அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி’யை – சுருக்கமாக சமக எனும் கட்சியைத்  தொடங்கினார்.

2011-ம் ஆண்டு அந்தக் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில், தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

2016-ம் ஆண்டு தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் சேர்ந்து, திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.

ஆனால் அவரை எதிர்த்து நின்ற தற்போதைய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தோற்றுப்போனார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியுடன் கூட்டணி வைத்தார் சரத்குமார். ஒரு இடத்திலும் ஜெயிக்கவில்லை.

நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் சரத்குமார், அதிமுகவுடன் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது கட்சியையே கலைத்துவிட்டு, பாஜகவுடன் இணைத்துக் கொண்டார்.

சென்னையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், சமகவை பாஜகவுடன் இணைத்த சரத்குமார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, “வருங்கால இளைஞர்களின் நன்மைக்காகவும், தேச நலனுக்காகவும், பாஜகவில் கட்சியை இணைத்துள்ளேன்.

இது நாளைய எழுச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவு. மக்கள் பணியில் நாங்கள் தொடர்கிறோம். பெருந்தலைவர் காமராஜர் போல் பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட்டால் என்ன? எனத் தோன்றியது.

இதனால் நேற்று  நள்ளிரவில் அண்ணாமலையை அழைத்து, இந்த தகவலைச் சொன்னேன்” என்று தெரிவித்தார் சரத்குமார்.

மத்திய அமைச்சர் பதவி?

தனது கட்சியை, பாஜகவில் இணைத்துள்ள சரத்குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கி, அவரை மாநிலங்களவை எம்.பி.யாக்க பாஜக மேலிடம் உறுதி அளித்துள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்த நிலையில்தான், சமகவை பாஜகவில் இணைத்துள்ளார் சரத்.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் சரத்தும், அவர் மனைவி ராதிகாவும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளிப் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

விருதுநகரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி முன்னிலையில், சமகவை முறைப்படி, பாஜகவில் இணைக்க சரத்குமார் திட்டமிட்டுள்ளார்.

– பி.எம்.எம்.

Comments (0)
Add Comment