சமூக வலைதளங்கள் மட்டுமல்லாமல், தற்போது பொதுவெளியிலும் தமிழ் மக்கள் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படம் குறித்து விவாதித்து வருகின்றனர்.
‘அந்த படத்தை இன்னும் பார்க்கலையா’ என்று எதிர்ப்படும் நபர்களிடம் கேட்கும் அளவுக்கு, அப்படம் தவிர்க்க முடியாததாக மாறியிருக்கிறது.
அதன் காரணமாக, தமிழ்நாட்டில் பெருமளவு வசூலையும் அள்ளியிருக்கிறது. நிற்க, இதற்கும் மேற்சொன்ன தலைப்புக்கும் என்ன சம்பந்தம்? அப்படியொரு கேள்விக்கான தேவை எங்கிருந்து வந்தது?
முதல்நாள் ‘ரியாக்ஷன்’!
காரணம், அவர்களில் பெரும்பாலானோர் பிற மொழிப் படங்களை ‘டப்’ செய்து தொலைக்காட்சிகளிலோ அல்லது ஓடிடி தளங்களிலோ வெளியிடுகையில் மட்டுமே பார்க்கும் வழக்கமுடையவர்கள்.
அவ்வாறு பார்த்து ரொம்பவும் பிடித்துப்போனால் மட்டுமே அப்படங்களைக் கொண்டாடுபவர்கள். ஆதலால், அவர்கள் நேரடியாக வெளியாகும் மலையாளப் படமொன்றின் மீது ஆர்வம் காட்டாதது பெரிய விஷயமில்லை.
ஏன், தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்கள் கூட மஞ்ஞும்மல் பாய்ஸ் படத்தை முதல் நாள் பார்க்க வேண்டுமென்று விரும்பியிருப்பார்களா என்பது சந்தேகம் தான்.
‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தை முதல்நாள் பார்க்கச் சென்றபோது, குறைவான இருக்கைகள் கொண்ட அத்திரையரங்கம் நிறைந்திருந்தது. பெரும்பாலும் மலையாள முகங்கள்.
என் அருகிலிருந்த சில மலையாள ரசிகர்கள் ‘டைட்டில் காட்சி’யிலேயே கிண்டலடிக்கத் தொடங்கிவிட்டார்கள். ‘கமலுக்கும் இளையராஜாவுக்கும் எதுக்கு நன்றி சொல்லணும்’ என்கிற ரீதியில் அவர்களது ‘கமெண்ட்கள்’ இருந்தன.
டைட்டிலில் ‘குணா’ பாடல் ஒலித்தபோதும் சரி; ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலை அப்படத்தின் கதாபாத்திரங்கள் காரில் இருந்தவாறு ரசிப்பதாகக் காட்டியபோதும் சரி; அந்த ரசிகர்களிடம் இருந்து கிண்டல் மட்டுமே வெளிப்பட்டது.
பின்னர், குணா குகைக்குள் கதை நகர்ந்து, ஸ்ரீநாத் பாசியின் பாத்திரம் குழிக்குள் விழுவதாகக் காட்டியபின்னரே அந்தக் கிண்டல்கள் நின்றுபோயின.
ஸ்ரீநாத் பாசியை சௌஃபின் ஷாகிர் அந்த குழிக்குள் இருந்து தூக்கி வரும் காட்சியில் அதே ரசிகர்கள் தன்னை மறந்து கைகளைத் தட்டினார்கள். அதனைச் செய்யத் தூண்டியது, அவர்கள் கிண்டலடித்த அதே ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல்.
படம் முடிவடைந்தபோது, அனைவரது கண்களிலும் திருப்தி தெரிந்தது. ‘குணா’ குகைக்கும் இளையராஜாவின் பாடலுக்கும் இயக்குனர் சிதம்பரம் தந்திருந்த முக்கியத்துவத்தை நாற்பதுகளைத் தாண்டிய ரசிகர்கள் மட்டுமே சிலாகித்துக் கொண்டிருந்தனர். அப்படத்திற்கான முதல் நாள் ரியாக்ஷன் இதுவே!
கொட்டப்படும் வன்மம்!
அடுத்த ஒரு வார காலத்தில், ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படம் குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியானபிறகு நிலைமை மாறத் தொடங்கியது.
கொடைக்கானலில் நிகழ்வதாக ஒரு மலையாளப்படத்தின் கதை அமைந்திருப்பதும், அதில் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலுக்கு முக்கிய இடம் உண்டு என்பதும் ‘வைரல்’ ஆனபிறகு திரையரங்குகளுக்குப் படையெடுக்கத் தொடங்கினார்கள் தமிழ் ரசிகர்கள்.
பிறகு, ஒரு காட்சி திரையிடப்பட்ட மல்டிப்ளெக்ஸ்களில் பத்துக்கும் மேற்பட்ட காட்சிகளோடு அப்படம் ஓடியதும் நாம் அறிந்ததே.
‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தில் அறுபத சதவிகித வசனங்கள் தமிழில் இருந்தன. அப்படத்தின் இயக்குனர் சிதம்பரம் தெரிவித்த தகவல் இது.
அப்படத்தில் வரும் பாத்திரங்கள் கல்லூரி, பள்ளி நட்பினைப் பிரதிபலிக்கவில்லை. மாறாக, ஒரே பகுதியைச் சேர்ந்த, 20 முதல் 35 வயதுகளில் இருக்கிற, பிழைப்புக்காக ஏதேனும் ஒரு வேலையைச் செய்கிற இளைஞர்கள் பாராட்டுகிற நட்பினைப் பேசியது.
பெரும்பாலான கிராமங்கள், சிறு நகரங்களில் இன்றும் இப்படிப்பட்ட நட்பு உயிர்ப்போடு இருந்து வருகிறது.
இவர்களில் சிலர் அவ்வப்போது அருகிலுள்ள ஊர்களுக்கு ‘ட்ரிப்’ சென்று வருவார்கள்.
அப்படி 2006ஆம் ஆண்டும் எர்ணாகுளம் அருகிலுள்ள மஞ்ஞும்மல் எனுமிடத்தில் இருந்து கொடைக்கானலுக்குச் சுற்றுலா வந்தவர்களில் ஒருவர் குணா குகையிலுள்ள குழியில் விழுந்ததும், அவருடன் வந்தவர்களில் ஒரு நண்பர் அவரைக் காப்பாற்றியதும் பத்திரிகைகளில் செய்திகளாக வெளியாகின; அது பற்றி ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டன.
அந்த சம்பவத்தைக் கொஞ்சமாக ‘ரொமாண்டிசைஸ்’ செய்து ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ எனும் திரைப்படமாகத் தந்திருக்கிறார் இயக்குனர் சிதம்பரம்.
மற்றபடி, அக்கதையில் வரும் பாத்திரங்கள் வேலி இடப்பட்ட குகைப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தனர் என்பதையோ, மது போதையில் தன்னையறியாமல் நடந்துகொண்டனர் என்பதையோ திரைக்கதையில் பூசி மெழுகவில்லை.
தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றபிறகு, அது குறித்தான விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.
‘அப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் போலச் சில பொறுக்கிகள் தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்களில் எல்லாம் மதுபுட்டிகளை உடைத்துப் போட்டு நாசம் செய்கின்றனர்’ எனும் தொனியில் அவ்விமர்சனங்கள் அமைந்துள்ளன.
சரி, திடீரென்று இப்படியொரு வன்மம் கொட்டப்படுவதற்குக் காரணம் என்ன? இப்படிப்பட்ட கருத்துகளை உதிர்ப்பவர்கள் மலையாளத் திரைப்படங்களையும் திரையுலகையும் நன்கறிந்தவர்கள்தான்.
‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ வெளியான மறுநாளே இப்படிப்பட்ட கருத்துகளை வெளியிட்டிருந்தால், அவ்விமர்சனங்களை நேர்மையானவை என்று ஏற்கலாம்.
ஆனால், அப்படம் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் வேட்டையை நிகழ்த்தியபிறகும் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது எனும் நிலையில் இப்படிப்பட்ட விமர்சனங்களைக் கொட்டும்போது தான் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது.
மிக முக்கியமாக, ஒரு திரைப்படத்தின் காட்சியாக்கத்திலோ, எழுத்தாக்கத்திலோ சாதாரண நிகழ்வொன்றை ரசிகர்களைக் கட்டியிழுக்கும் விதமாகச் சுவைபடச் சொல்லும் ஆற்றல் இருந்தும் அதனைச் செய்யாமல் வெறுமனே இப்படிப்பட்ட கருத்துகளைத் திரையுலகம் சார்ந்து உதிர்ப்பதால் என்னவாகிவிடப் போகீறது என்றும் யோசிக்கத் தூண்டுகிறது.
நிச்சயம் தவறுதான்!
கொஞ்சம் முதிர்ந்த அல்லது சம வயது நாயகன், பள்ளிப் பருவத்தில் இருக்கும் நாயகியைத் துரத்தித் துரத்திக் காதலிப்பதாகக் காட்டுவது எந்த அளவுக்கு எரிச்சலைத் தருமோ, அதேபோன்று பொதுவெளியில் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதை ‘ஜாலி’யாக கருதும் மனநிலையைத் திரையில் கொண்டாடுவதும் நிச்சயம் கண்டிக்கத்தக்கது தான்.
மலையாளிகள், தமிழர்கள் என்றில்லை, எல்லா தேசிய மொழி, இனத்தைச் சேர்ந்தவர்களிலும் குறிப்பிட்ட சிலர் அப்படித்தான் இருந்து வருகின்றனர் என்பதை இவ்விடத்தில் நோக்க வேண்டும்.
‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தில் வருவதுபோல, நாமும் ஒரு ‘கேங்’காக கூத்தடிக்கலாம் என்று அதனைப் பார்க்கும் இளம் ரசிகர்கள் எண்ணக்கூடும். நிச்சயம் அது ஒரு அபாயம்தான்.
அவ்வாறு எண்ணியவர்களில் ஒருவர்தான் குகையில் இருக்கும் குழிக்குள் விழுந்தார் என்ற சிந்தனை பிறந்தால், அந்த எண்ணம் மட்டுப்பட்டுவிடும்.
ஆதலால், நட்புக்காக ஒருவர் தன்னுயிரையே பணயம் வைக்கத் துணிந்தார் என்பதையே ஒரு ரசிகர் இக்கதையில் தனக்கான நீதியாகக் கொள்ள வேண்டும்.
மிகச்சில பேர் ‘குணா’ படம் வெளியானபோது அதனைக் கொண்டாடவில்லை என்றும், ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தை அதே ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கின்றனர் என்றும் ’உச்’ கொட்டி வருகின்றனர். நிச்சயமாக ‘குணா’ சிறப்பான ஆக்கத்தைக் கொண்ட படம் தான்.
கமல்ஹாசன், சந்தானபாரதி, இளையராஜா, வேணு, பி.லெனின் – வி.டி.விஜயன் உட்படப் பலரது அளப்பரிய உழைப்பு அதில் அடங்கியிருக்கிறது.
ஆனால், அந்த படத்தின் இறுதியில் நாயகனும் நாயகியும் இவ்வுலகைவிட்டு நீங்குவதே அவர்களது விடுதலையாகக் காட்டப்பட்டிருந்தது.
ஆனால், ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படமோ சாத்தியப்படாத ஒன்றைச் சாத்தியப்படுத்துவதன் மூலம் உயிர் பிழைக்க முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டுவதாக இருக்கிறது. சாதாரண ரசிகர்கள் இதனைக் கொண்டாடாமல் வேறு எதைக் கொண்டாடுவார்கள்?
வாழ்வின் மீதான நம்பிக்கையை ஊட்டும் படங்களே எல்லாக் காலத்திலும் பெருவெற்றியைப் பெற்றிருக்கின்றன.
சோகமான முடிவுகளைக் கொண்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதற்கு, அதனைத் தவிர்த்துப் பல காரணங்கள் உண்டு என்பதையும் திரையுலகப் பண்டிதர்கள் அறிவார்கள்.
இந்த வித்தியாசம் தெரியாதவர்கள் சினிமா எடுக்க அல்ல, பார்ப்பதற்கும் கூடத் தகுதியற்றவர்கள். ’யதார்த்தம் அதுவே’ என்று ஜல்லியடிப்பவர்கள், ‘குணா’ படத்தில் எந்தளவுக்கு ரியாலிட்டி இருக்கிறது என்று அளந்து சொன்னால் நன்றாக இருக்கும்.
ஆதரவு தருவோமா?!
கடந்த இரண்டரை மாதங்களில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’, ‘பிரமயுகம்’, ‘அன்வேஷிப்பின் கண்டதும்’, ‘பிரேமலு’ என்று குறைந்த பட்ஜெட்டில் தயாரான படங்களே மலையாளத் திரையுலகில் பெரு வெற்றியைப் பெற்றிருக்கின்றன. இவற்றோடு வெளியான சில படங்கள் சுமார் வெற்றிகளை ஈட்டியுள்ளன.
அதேபோன்று சிறு பட்ஜெட் படங்களில் நடிக்கவோ, தயாரிக்கவோ அல்லது தன்னால் இயன்ற பங்களிப்பைத் தரவோ தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணிக் கலைஞர்கள் முன்வருவதே, இந்த மலையாளப் படங்களின் வெற்றிக்குத் தமிழ் திரையுலகம் சார்பாகத் தரும் பதிலடியாக இருக்கும்.
குறைந்தபட்சமாக, கவனிக்கத்தக்கதாகச் சில தமிழ் திரைப்படங்கள் வெளியாகும்போது அவற்றைத் தேடிச் சென்று பாராட்டலாம்.
ப்ளூஸ்டார், லோக்கல் சரக்கு, பைரி, சிங்கபெண்ணே, ஜே பேபி என்று சில படங்கள் அதற்கேற்றவாறு கடந்த மூன்று மாத காலத்தில் வெளியாகியிருக்கின்றன.
அவ்வாறு செய்யாமல் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படத்தைக் கண்டு அடிவயிற்றைத் தடவிக்கொள்வது எந்த வகையில் சரியாகும்?
நிச்சயம் அது நியாயமான கோபம் அல்ல. முக்கியமாக, அப்படி ரௌத்திரம் கொள்ளும் அளவுக்கு ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ என்று ஒவ்வொரு படத்திலும் இளையதலைமுறைக்கு வழிகாட்டுதல்களையும் நெறிமுறைகளையும் நீங்கள் வாரி வழங்குவதும் இல்லை. பிறகு ஏன் இத்தனை வன்மம்?
– உதய் பாடகலிங்கம்