பெங்களூரு தண்ணீர் பஞ்சம்: உண்மையான காரணம் என்ன?

இந்தியாவிலேயே அதிக மக்கள் வாழும் நகரங்களின் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடிக்கும் நகரம் பெங்களூரு.

அங்கு நிறைந்திருக்கும் ஐடி நிறுவனங்கள்தான் அதற்கு முக்கிய காரணம். அதனாலேயே இந்தியாவின் ஐடி ஹப் என அனைவராலும் அழைக்கப்படும் நகரமாக பெங்களூரு இருக்கிறது.

அப்படிப்பட்ட பெங்களூரு நகரம் இன்று தண்ணீர் இல்லாத நகரமாக மாறிக்கொண்டு இருக்கிறது.

கடந்த 2018-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ‘கேப் டவுன்’ நகரம் தண்ணீரற்ற நகரமாக அறிவிக்கப்பட்டது. இப்போது பெங்களூரு நகரமும் அதே நிலையை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது.

ஒரு லாரி தண்ணீரின் விலை 2 ஆயிரம் ரூபாயை எட்ட, அந்த தண்ணீரேகூட எப்போது கிடைக்குமோ என்ற அச்சத்தை மக்களின் கண்களில் பார்க்க முடிகிறது.

ஒருவருக்கு ஒரு கேன் குடிநீர்தான் கொடுக்க முடியும் என்ற போர்டுகளை நகரின் பல கடைகளில் பார்க்க முடிகிறது.

குடிநீரை வீணடிப்பவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளின் நலச்சங்கங்கள் அபராதம் விதிக்கும் நிலையையும் பார்க்க முடிகிறது.

வற்றாத காவிரி நதி சில கிலோமீட்டர்கள் தள்ளி இருந்தும் பெங்களூருக்கு இப்படி ஒரு தண்ணீர் பஞ்சம் எப்படி வந்தது என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.

ஆனால், இந்த தண்ணீர் பஞ்சம் திடீரென்று வந்ததல்ல. இதற்கான அடித்தளத்தை கடந்த பல ஆண்டுகளாகவே பெங்களூர்வாசிகள் அமைத்து வருகின்றனர்.

நீர்நிலைகள் அழிக்கப்பட்டதை பெங்களூருவின் இந்த வறட்சி நிலைக்கு முக்கிய காரணமாக நீர்நிலை சொல்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

கடந்த 1961-ம் ஆண்டில் பெங்களூரு நகரிலும், அதைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலுமாக மொத்தம் 262 ஏரிகள் இருந்துள்ளன. ஆனால் பெங்களூரு நகரம் வளர வளர அந்த ஏரிகள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போயிருக்கின்றன.

ஐடி நிறுவனங்களை அமைக்கவும், அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான வசிப்பிடங்களை அமைக்கவும் ஏரிகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு, வீடுகளாகவும், நிறுவனங்களாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.

அரசு அமைப்பான The Bengaluru Development Authority இதில் சுமார் 100 ஏரிகளை பிளாட்களாக மாற்றியுள்ளது.

இப்போது அந்நகரிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமாக மொத்தம் 81 ஏரிகள் மட்டுமே இருக்கின்றன.

அந்த 81 ஏரிகளிலும் மொத்தம் 33 ஏரிகளில் உள்ள தண்ணீர் மட்டுமே பயன்படுத்தக் கூடிய தண்ணீரை கொண்டுள்ளதாக இருக்கிறது.

மற்ற ஏரிகளில் உள்ள தண்ணீரில் கழிவு நீர் கலக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் முற்றிலும் பாதிக்கப்பட்ட ஏரியாக அவை அறிவிக்கப்பட்டுள்ளன.

பெங்களூருவின் தண்ணீர் பஞ்சத்துக்கு மற்றொரு முக்கிய காரணம் மக்கள் தொகை. சுமார் 50 லட்சம் மக்கள் வாழ்வதற்கான வசதிகொண்ட பெங்களூரு நகரின் இப்போதைய மக்கள் தொகை ஒரு கோடியை தொட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நகரின் மக்கள் தொகையில் சுமார் 10 லட்சம் பேர் அதிகமாகி வருகிறார்கள். இத்தனை மக்களின் தேவையை பூர்த்தி செய்ய நாளொன்றுக்கு 2,100 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

ஆனால் நகாரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய காவிரி ஆற்றில் இருந்து தினசரி 1,450 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது.

மீதமுள்ள தேவைக்கு உள்ளூரில் அரசு அமைத்துள்ள குழாய் கிணறுகள்தான் ஆதாரமாக உள்ளன. ஆனால் இப்போது அந்த குழாய் கிணறுகளில் பலதும் வற்றிப் போனதால், தண்ணீரற்ற பாலைவனமாக காட்சி அளிக்கிறது பெங்களூரு.

பள்ளிகள் இயங்கக்கூட தேவையான தண்ணீர் இல்லை.

பல அலுவலகங்கள் வீட்டில் இருந்து பணியாற்றுமாறு தங்கள் ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளன.

அதிக மக்கள் தொகை, அழிக்கப்பட்ட நீர்நிலைகள் ஆகியவைதான் பெங்களூர் நகரின் தண்ணீர் பஞ்சத்துக்கு முக்கிய காரணம்.

ஆனால் அப்படி இருந்தாலும் அங்குள்ள அரசியல்வாதிகள், தமிழகத்துக்கு காவிரி நீரில் இருந்து தண்ணீரை திறந்து விட்டதாலேலே பெங்களூருவில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்று விஷமப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இதனால் அடுத்த ஆண்டு தமிழக விவசாயிகளுக்கு காவிரி தண்ணீர் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

மொத்தத்தில் கர்நாடக அரசின் செயலுக்கான வினையை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தமிழக விவசாயிகள் தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

– ரெஜினா சாமுவேல்

Comments (0)
Add Comment