மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட கடந்த 1-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
விருப்ப மனு சமர்ப்பிக்க வியாழக்கிழமை கடைசி நாளாகும். இதனால், சென்னை அண்ணா அறிவாலயத்தில், நிர்வாகிகள் கூட்டம் அலை மோதியது.
அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மனு தாக்கல் செய்ய வந்தோர், மேள, தாளம் முழங்க, தங்கள் ஆதரவாளர்களுடன் அணி திரண்டு வந்தனர்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மொத்தம் 2 ஆயிரத்து 984 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மனு அளித்தவர்களிடம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (10.03.2024) அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்துகிறார்.
“வேட்புமனு அளித்தவர்கள், தங்களுக்கான ஆதரவாளர்கள், பரிந்துரையாளர்களை அழைத்து வரக்கூடாது” என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’அந்தந்த மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே இந்த நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்‘ என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
சில கூட்டணிக் கட்சிகளுடன், திமுக நடத்திய தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படாமல் இழுபறியாக உள்ளது.
காங்கிரஸ் கட்சி, இரட்டை இலக்கத்தில் இடங்கள் கேட்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தனி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வைகோவின் மதிமுகவுக்கு 1 தொகுதியும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை இடம் தருவதாக திமுக உறுதியளித்துள்ளது.
காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின், கட்சியின் மூத்த தலைவர்களுடன் அண்மையில் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
ஏனென்றால் தனது கூட்டணியில் உள்ள கட்சிகள் எதனையும் இழக்க திமுக தயாராக இல்லை.
ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள சிபிஐ கட்சிக்கு 2 தொகுதிகளும், சிபிஎம் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன.
அதுபோல் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியையும், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியையும் திமுக ஒதுக்கியுள்ளது.
அதிமுகவில் நேர்காணல்
தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளில், அதிமுக வேட்பாளர்களாகப் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ள உறுப்பினர்களுக்கான நேர்காணல், வரும் 10 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
– பி.எம்.எம்.