ஏற்கனவே நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களைத் தழுவி எடுக்கப்படும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும். அதன் வழியே, அச்சம்பவங்கள் சம்பந்தப்பட்ட உண்மைகள் பரவலாகத் தெரிய வரும்.
பெரும்பாலான கமர்ஷியல் திரைப்படங்கள் அப்படிப்பட்ட உண்மைகளைக் கொண்டே புனையப்பட்டாலும், அவற்றில் கதாபாத்திரங்கள், இடப் பெயர்கள், காலம், பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் அதற்குக் காரணமானவர்களின் விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்காது.
எழுதப்படாத அந்த விதிகளை மீறும் திரைப்படங்கள், குறிப்பிட்ட சம்பவங்களுக்கான திரை ஆவணமாக ரசிகர்களால் கருதப்படுகின்றன.
அப்படியொரு எண்ணத்தை ஏற்படுத்துகிறது திலீப், நீதா பிள்ளை, சித்திக், பிரனிதா, அஜ்மல், அசீஸ் நெடுமங்காடு, சுதேவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘தங்கமணி’ திரைப்படம்.
இதனை ரதீஷ் ரகுநந்தன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் ‘சூப்பர்குட் பிலிம்ஸ்’ ஆர்.பி.சௌத்ரி.
1986-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ‘தங்கமணி’ எனும் ஊரில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக, இதன் ட்ரெய்லர் நமக்குச் சொன்னது. சரி, இத்திரைப்படம் நமக்கு எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது?
நாயகனின் பார்வையில்..!
அந்த ஊரைச் சேர்ந்தவர் ஆபெல் ஜோஷ்வா மாதன் (திலீப்). சவுதி அரேபியாவுக்குச் சென்று பணியாற்றிவிட்டு மூன்றாண்டுகள் கழித்து ஊர் திரும்புகிறார்.
தான் வந்த தனியார் பேருந்து தங்கமணிக்கு முன்னதாகவே நிறுத்தப்படுவதைக் காண்கிறார். சாலை சரியாக இல்லை என்று கூறி, அவ்வூரைச் சேர்ந்த பயணிகளோடு நடத்துனர் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அதனால், ஆபெல் நடந்தே ஊர் சென்று சேர்கிறார்.
வீட்டில் தங்கை ராஃபேல் (மாளவிகா), மனைவி அனிதா (நீதா), தாய் ஆகியோர் அவருக்காகக் காத்திருக்கின்றனர். பெற்றோர் எதிர்ப்பையும் மீறி, காதலுக்காக ஆபேல் வீட்டுக்கு வந்தவர் அனிதா.
அவரால் கணவரின் பிரிவைத் தாங்க முடிவதில்லை. ஆனாலும், ஒரு மாத விடுமுறை முடிந்தவுடன் மீண்டும் வெளிநாடு சொல்லும் முடிவில் இருக்கிறார் ஆபேல்.
இந்த நிலையில் ஊரில் ராய் (சுதேவ்), தங்கச்சன் (அசீஸ் நெடுமங்காடு) உள்ளிட்ட தனது நண்பர்கள் தன்னை விட்டு விலகி நிற்பதைக் காண்கிறார் ஆபேல். மீண்டும் அவர்களுடன் அளாவளாவும்போது தங்கை ராஃபேலும் ராயும் காதலிக்கின்றனர் எனும் உண்மையை அறிகிறார்.
கூடவே, கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தகராறில் ராயின் தந்தையை பீட்டர் மணி (மனோஜ் கே ஜெயன்) எனும் ரவுடி கொலை செய்ததையும் தெரிந்து கொள்கிறார். அதன் காரணமாக பீட்டரையும் அவரது கையாளான வக்கனையும் கொலை செய்ய ராயும் இதர நண்பர்களும் துடிக்கின்றனர்.
கஞ்சா விற்பனையில் நண்பன் ஈடுபடுவதையே சகிக்க முடியாத ஆபேலுக்கு, தங்கையை அவருக்கு மணம் முடித்து தருவதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அதையும் மீறித் தங்கையின் காதலுக்கு அவர் செவி சாய்க்கிறார்.
அப்போது, எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்கிறது. வக்கனை ராயும் நண்பர்களும் கொலை செய்கின்றனர். அந்த சம்பவத்தின்போது, ஆபேலின் நண்பர்களில் ஒருவர் இறந்துபோகிறார். அதனை நேரில் காண்கிறார் ஆபேல்.
அதற்கடுத்த நாள், தங்கமணியைச் சேர்ந்தவர்கள் ஓட்டுநரையும் நடத்துனரையும் தாக்கி அந்த தனியார் பேருந்தைச் சிறை பிடிக்கின்றனர். பலமுறை தங்களது ஊரைச் சேர்ந்தவர்களை பேருந்து நிறுவனப் பணியாளர்கள் தாக்கியுள்ளதாகவும், அதற்காக அதன் உரிமையாளர் நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் கூறுகின்றனர்.
உண்மையில், அதன் உரிமையாளருக்குத் தான் தந்த வட்டிப் பணத்திற்காகப் பீட்டர் மணி தான் பேருந்து நிர்வாகத்தை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு, ஊர் மக்களின் கோபம் அவமானத்தை ஏற்படுத்துகிறது.
அதனால், ‘லாக்கப் டெத்’ தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட ஈப்பன் (சம்பத்ராம்) எனும் காவல் ஆய்வாளரைத் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தங்கமணிக்கு அனுப்புகிறார்.
அங்கு நடக்கும் தகராறை அடுத்து, பேருந்து தீ வைத்துக் கொளுத்தப்படுகிறது. ஈப்பன் தாக்கப்படுகிறார். அதற்குப் பதிலடி தரும் வகையில், தங்கமணியில் நள்ளிரவில் போலீஸ் படை குவிக்கப்படுகிறது. அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து ஆண்கள், பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.
அடுத்த நாள் காலையில் மீண்டும் சவுதி அரேபியாவுக்குக் கிளம்பத் தயாராக இருந்த ஆபேலும் அந்த வன்முறைக்கு இரையாகிறார்.
பாலியல்ரீதியிலான வன்முறைக்கு அவரது வீட்டுப் பெண்கள் ஆளாகின்றனர்.
எந்த தவறிலும் ஈடுபடாத, பிரச்சனைகளைக் கண்டு ஒதுங்கிச் செல்கிற ஆபேல், அன்றிரவு காவல் துறையால் கடுமையாகத் துன்புறுத்தப்படுகிறார்.
அந்த சம்பவத்தை அடுத்து அவரது தங்கை உயிரிழக்க, மனைவி காணாமல் போகிறார். ஒரே இரவில் அவரது குடும்பம் சின்னாபின்னமாகிறது. அதற்கெதிராகக் குரல் கொடுக்க முயற்சிக்கையில், வக்கன் கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவராக அவரது பெயர் சேர்க்கப்படுகிறது.
அதன்பிறகு ஆபேல் என்னவானார்? சில ஆண்டுகள் கழித்து, அவரது மனநிலை எப்படியிருந்தது என்பதைச் சொல்வதில் இருந்து ‘தங்கமணி’யின் திரைக்கதை தொடங்குகிறது.
தங்கமணியில் தனியார் பேருந்து சிறைபிடிக்கப்பட்டதும், அதன் காரணமாக அவ்வூரைச் சேர்ந்தவர்கள் மீது காவல் துறையினர் அத்துமீறியதும் கேரள ஊடகங்களில் பதிவாகியிருக்கிறது.
அச்சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு, இக்கதையின் நாயகனான ஆபேல் பார்வையில் மட்டுமே இத்திரைப்படம் விரிகிறது. அதுவே இப்படத்தின் பலமும் பலவீனமுமாக உள்ளது.
வீணடிக்கப்பட்ட உழைப்பு!
கதை, திரைக்கதை, காட்சியாக்கம், இதர தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு என்று பல திசைகளில் ‘பழைய திரைப்படமாக’க் காட்சியளிக்கிறது ‘தங்கமணி’.
சமூக அந்தஸ்து பெற்ற சில மனிதர்கள் அவர்கள் சம்பந்தப்பட்ட விழா தருணங்களின்போது கொலை செய்யப்படுவதாகச் சொல்கிறது திரைக்கதை.
அக்காட்சியில் நாயகன் தோன்றும்போதே, ‘இது ஒரு பழிக்குப் பழி வகையறா கதை’ என்பது தெரிந்துவிடுகிறது. அதனால், நாயகனின் பிளாஷ்பேக்கில் வரும் உணர்ச்சிகரமான பகுதிகள் நம்மை ஈர்ப்பதில்லை.
அது மட்டுமல்லாமல், படத்தின் பெயரும் கதையும் ‘தங்கமணி’ எனும் ஊரில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளதாகக் காட்டப்படுகிறது.
அப்படியானால், பேருந்து ஊருக்குள் வராத காரணத்தால் அங்குள்ள மக்கள் படும் அவஸ்தைகள் தெளிவாகத் திரையில் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அதனை விடுத்து, அப்பாவித்தனம் மிகுந்த நாயகனின் வாழ்வுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்திருக்கிறார் இயக்குனர்.
தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படமும் இதே போன்றதொரு பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டது. என்னதான் நாயகனை முன்னிலைப்படுத்தினாலும், ஊரில் பேருந்து நில்லாமல் செல்வதால் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அதில் தெளிவாக உணர்த்தப்பட்டிருக்கும்.
அப்பேருந்தை அம்மக்கள் சிறை பிடிப்பது உணர்ச்சிகளை உலுக்கும்விதமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். கர்ணனில் இருந்து ‘தங்கமணி’ வேறுபட்டு நிற்குமிடம் அதுவே. படத்தின் முக்கியப் பலவீனமும் அதுவே.
போலவே, இந்தப் பிரச்சனையை அரசியல் கட்சிகள் எப்படிக் கையாண்டன என்பதுவும் இப்படத்தில் தீவிரமாகக் காட்சிப்படுத்தப்படவில்லை.
ஏனென்றால், தங்கமணியைச் சேர்ந்த பெண்களை நிரந்தரமாக அவமானத்தில் ஆழ்த்தும் விதமாகவே எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் அமைந்ததாகச் சொல்கிறது படத்தின் கதை. ஆனால், அது திரைக்கதையில் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை.
முக்கியமான காட்சிகளில் ‘நீ யார்’ என்று எதிரில் இருப்பவர் கேட்க, மிக மெதுவாக ‘ஆபேல்.. ஜோஷ்வா.. மாதன்’ என்று தன் பெயரை உச்சரிக்கிறார் நாயகன் திலீப்.
‘பாண்ட்.. ஜேம்ஸ் பாண்ட்..’டை நினைவூட்டும் அந்த உச்சரிப்பு, ‘இப்படியொரு சீரியசான படத்தில் ஏன் இப்படியொரு காட்சியாக்கம்’ என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது.
இது போன்ற குறைகளே, இத்திரைப்படம் நம்முள் ஏற்படுத்தியிருக்க வேண்டிய தாக்கத்தை மட்டுப்படுத்தியிருக்கிறது. இப்படியொரு கதையை வழக்கமான ஹீரோயிச ‘டெம்ப்ளேட்’டுக்குள் அடக்க முயன்றது அதன் பலவீனத்தை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது.
மனோஜ் பிள்ளையின் ஒளிப்பதிவு மலைப்பிரதேசக் காட்சிகளைக் கண்ணுக்கு இனிமையாகக் காட்டுமிடங்களிலும், இருள் நிறைந்த இடங்களில் நிகழும் ஆக்ஷன் காட்சிகளிலும் மிளிர்கிறது.
பிளாஷ்பேக் காட்சிகளை, திரைக்கதையில் எந்த இடத்தில் புகுத்துவது என்பதில் ரொம்பவே தடுமாறியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஷ்யாம் சசிதரன்.
பின்னணி இசையால் காட்சிகளின் பலவீனத்தைச் சரி செய்ய முயன்றிருக்கிறார் இசையமைப்பாளர் வில்லியம் பிரான்சிஸ். ஆனால், அதுவும் கூட ‘க்ளிஷே’வாக தெரிவதை என்னவென்று சொல்வது?
கலை வடிவமைப்பாளர் மனு ஜெகத்தின் கைவண்ணத்தில், லாங் ஷாட்களில் ‘தங்கமணி’ கிராமத்தின் மையப்பகுதி அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. என்னதான் செயற்கைத்தனம் தெரிந்தாலும், அதனை மீறி அவரது உழைப்பு அதில் பளிச்சிடுகிறது.
இளம் ரசிகர்களிடையே வரவேற்புக்குரியவர்களாக இருக்கும் நீதா, மாளவிகாவோடு பிரனிதாவையும் திரையில் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
ஆனால், இவர்கள் அனைவருமே இக்கதையோடு நாம் ஒன்றத் தடையாக விளங்குகின்றனர் என்பதுவே உண்மை.
இன்றைய தேதியில் மலையாளத் திரையுலகில் பழம்பெரும் நடிகர்களாகக் கருதப்படும் சித்திக், மனோஜ் கே ஜெயன், மேஜர் ரவி போன்றவர்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றனர். அவர்களது இருப்பு பத்தோடு பதினொன்றாகவே படத்தில் அமைந்துள்ளது.
சுதேவ், அசீஸ் நெடுமங்காடு, மேஜர் ரவி, ராஜேஷ் சர்மா போன்ற கலைஞர்களோடு நம்மூர் ஜான் விஜய்யும் சம்பத் ராமும் இதில் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதுபோக அஜ்மல் இரண்டொரு காட்சிகளுக்கு ‘சும்மா’ தலைகாட்டியிருக்கிறார். அதனால், விரைவில் இப்படம் தமிழிலும் ‘டப்’ செய்யப்படலாம்.
எண்ணற்ற நடிப்புக்கலைஞர்கள் இருந்தபோதும், எடுத்துக்கொண்ட கதைக்கேற்ற திரைக்கதையை இயக்குனர்கள் அமைக்காத காரணத்தால் ‘தங்கமணி’யில் அவர்களது திறன் வீணடிக்கப்பட்டுள்ளது.
திலீப்பின் கவனத்திற்கு..!
ஐம்பதுகளைத் தாண்டிய பிறகும், ஒப்பனையின் உதவியோடு முப்பதாகத் திரையில் உலா வருவது திலீப்புக்குக் கொஞ்சமும் பொருந்தவில்லை.
பிளாஷ்பேக்கில் நகைச்சுவையையும் ஆக்ஷனையும் அடுத்தடுத்து பார்த்து ரசிப்பவர்கள், இன்று தொலைக்காட்சி சீரியல்களில் மூழ்கிவிட்டனர். அதனைப் புரிந்துகொண்டு அவர் தனது கதைத் தேர்வில் கவனம் செலுத்தியாக வேண்டும்.
கடந்த பத்தாண்டுகளில் திலீப் நடித்த படங்கள் எதுவும் மாபெரும் வெற்றிகளைக் குவிக்கவில்லை.
தன்னைத்தானே தாழ்த்திக்கொள்கிற அப்பாவித்தனமான நகைச்சுவை, சாதாரண மனிதனின் ஆக்ஷன் அவதாரம், மக்களின் வாழ்க்கைக்கு நெருக்கமான காட்சிகள் என்றமைந்த காரணத்தால் அப்படங்கள் காமெடி, ஆக்ஷன், ட்ராமா என்று என்ன வகைமைகளில் அமைந்தாலும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்; முக்கியமாக, நடுத்தரக் குடும்பங்களைத் திலீப் பெருமளவில் வசீகரித்திருந்தார்.
ஆனால், தனிப்பட்ட வாழ்வில் அவர் சந்தித்த மாற்றங்களும், பாவனா விவகார விசாரணையில் அவரது பெயர் இடம்பெற்ற விதமும் அவ்வசீகரத்தைக் குலைத்தன.
அதன்பிறகும் கூட, திரையில் திலீப்பின் நடிப்பு வழக்கமான ‘பார்முலா’விலேயே தொடர்வது அவரது படங்களின் சரிவுக்கான முக்கியக் காரணமாக உள்ளது.
இருந்தது. கம்மார சம்பவம், கேஷு இ வீடிண்ட நாதன் போன்ற படங்களே அவற்றில் இருந்து சற்று விலகியிருந்தது.
சமீபகாலமாக ரோர்சா, நண்பகல் நேரத்து மயக்கம், காதல் தி கோர் என்று வேறொரு வட்டத்திற்கு தனது நடிப்பை நகர்த்திக்கொண்ட மம்முட்டி போன்று திலீப்பும் மாறியாக வேண்டிய கட்டாயத்தை அழுத்தமாக உணர்த்துகிறது ‘தங்கமணி’.
ஆதலால், தலைமுறை இடைவெளியை உணர்ந்து இன்னொரு தளத்தில் பயணிக்கத் தொடங்கினால் புதியதொரு பரிமாணத்தை நாம் திலீப்பிடம் காண முடியும். இதனைக் கவனத்தில் கொண்டால் நல்லது அவருக்கும் நமக்கும்..!
– உதய் பாடகலிங்கம்