“டாக்டர்.. வீட்டில் ஹாலில் நல்லாத்தான் உட்கார்ந்து டி.வி.யைப் பார்த்துட்டிருந்தார்.. திடீர்னு பிரஷர் ஏறி சாய்ஞ்சுட்டார் டாக்டர்”
“ஏம்மா.. டி.வி.யில் உங்க ஹஸ்பண்ட் ஏதாவது தேர்தல் விவாதத்தைப் பார்த்துக் கிட்டிருந்தாராம்மா..”
“ஆமாங்க டாக்டர், எப்படி கரெக்டாச் சொல்றீங்க?”
– இப்படி ‘மொக்கை ஜோக்’குகள் வரக்கூடிய அளவுக்கு இருக்கின்றன நம் தொலைக்காட்சி விவாதங்கள்.
ஒருபுறம் தொலைக்காட்சி சீரியல்கள் நமது வீட்டுப் பெண்களின் மாலை நேரத்தை அபகரித்துவிட்டன.
ஆண் நேயர்களுக்கு அது மாதிரி ‘தொலைக்காட்சி விவாதங்கள்’.
வழக்கமாகவே தொலைக்காட்சி விவாதங்கள் சூடாகத் தான் இருக்கும் என்றாலும், தேர்தல் நெருங்கியதுமே தொலைக்காட்சி விவாதங்களில் இன்னும் சூடு ஏறிவிட்டது.
தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்கிறவர்களில் சிலர் ஆதாரங்களை முன்வைத்துப் பேசுகிறார்கள்.
சிலர் எந்த ஆதாரங்களையும் முன்வைக்காமல் கத்துகிறார்கள். உடன் பேசுகிற மற்றவர்களையும் பேச விடாமல் கத்திக் கூச்சலிடுகிறார்கள்.
அதிலும் ஒரே நேரத்தில் பலர் கத்தும்போது நிகழ்ச்சியை நடத்தும் நெறியாளர்களே திணறிப் போகிறார்கள்.
அந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறவர்களுக்கும் ‘பிரஷர்’ ஏகத்திற்கும் ஏறிவிடுகிறது.
அவர்களும் அந்த இரைச்சலுக்குக் காதுகளை அடமானம் வைத்த மாதிரித் தவித்துப்போய் விடுகிறார்கள்.
டயாபடிக் வாசிகளுக்கும், பி.பி.யினால் அவதிப்படுகிறவர்களுக்கும் விவாதங்களால் மூளை சூடாகி அவர்கள் அவசரமாக நிவாரண மாத்திரைகளை விழுங்குகிற அளவுக்குப் போகிறார்கள்.
ஏற்கனவே இப்படி இருக்கிற நிலையில், தேர்தல் நெருங்கும்போது தொலைக்காட்சி விவாதங்கள் இன்னும் வலுத்து – அதில் கலந்து கொள்கிறவர்களுக்கு இதை விட,
பிரஷர் ஏற வாய்ப்பிருக்கும்போது, தொலைக்காட்சி நிர்வாகம் விவாத அரங்கில் வெறும் தண்ணீர் பாட்டில்களை மட்டும் வைக்காமல் வேறு ஒன்றையும் சுதாரிப்பாகச் செய்யலாம்.
விவாத அரங்கிற்கு முன்னால் முதலுதவிப் பெட்டியை முன்ஜாக்கிரதையாக வைத்துவிடலாம்!
-ம.கயல்விழி