ஏன் இந்த அளவுக்குத் தொடர்கிறது பாலியல் வன்மங்கள்?

சமீபத்தில் தான் வடமாநிலத்திற்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணியான பெண்மணி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் சுற்றுலாப் பயணிகளைக் கலங்கடித்திருக்கிறது.

தற்போது புதுச்சேரியில் இளஞ்சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஆளுநர் தமிழிசைக்கு அங்குள்ள மக்கள் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மகளிருக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை அரசுகள் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும்போது தான் இதைப்போன்ற வன்முறைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

இம்மாதிரியான வன்மங் கொண்ட வன்முறைகளுக்குப் பின்னால் பெரும் போதை வலைப்பின்னலும் பின்னணியில் இருக்கிறது.

ஒரு புறம் டாஸ்மாக் விற்பனைக்கு வயது வித்தியாசம் பாராமல் மாணவர்கள் துவங்கி முதியவர்கள் வரை சிக்கியிருக்கிறார்கள். இதில் லோக்கல் சரக்குகள் விற்கப்படுவதும் நடக்கிறது.

இந்தப் போதைக்குப் பழகியவர்கள் அடுத்த கட்டப் போதைக்கு நகர்கிறார்கள்.
கஞ்சா மட்டுமல்லாமல், அதி நவீனப் போதைப் பொருட்கள் வரை சுலபமாகக் கிடைக்கும் அளவுக்குப் போதை விநியோகம் பரவலாகி இருக்கிறது.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் துவங்கி ஐ.டி. நிறுவன ஊழியர்கள் வரை கணிசமானவர்கள் இம்மாதிரியான போதைப் பழக்கத்திற்கு அடிமைகளைப் போல இருக்கிறார்கள். அவர்களுக்கு மிக நெருக்கத்தில் இருக்கிறது போதை உலகம்.

கப்பல் மூலம் போதைப் பொருட்கள் வந்திறங்கும் செய்திகள் வெளிவருகின்றன. குஜராத் போன்ற மாநிலத்தில் போதைப் பொருட்கள் விற்பனை அதிகப் பட்டிருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது? யார் இவற்றைப் புழக்கத்தில் விடுகிறார்கள்?

தமிழகத்தில் ஏற்கனவே குட்கா விற்பனைக்கு அதிகாரத்தில் இருந்த பலர் குறிப்பிடப்பட்ட நிலையிலும், இன்னும் வழக்கு நிலுவை நிலையிலேயே இருக்கிறது.

தற்போதும் போதைப் பொருட்கள் விற்பனை நின்ற பாடாக இல்லை. ஏறத்தாழ இரண்டாயிரம் கோடி மதிப்புள்ள நவீனப் போதைப் பொருட்கள் கடத்தப் பட்டிருக்கின்றன.

இன்று வரை அது குறித்த பரபரப்பான செய்திகள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. மாநில எல்லைகளைக் கடந்தும், நாடு எல்லைகளைக் கடந்தும் விரிந்திருக்கிறது போதைப் பின்னல் வலை.

போதையே பழக்கமாக்கிக் கொண்டவர்கள் தான் பாலியல் வன்முறையில் இரக்கமற்ற மனநிலையில் ஈடுபடுகிறார்கள் என்பதை, இம்மாதிரியான பாலியல் வன்முறைகளுக்குப் பிறகு நடக்கிற விசாரணைகள் புலப்படுத்துகின்றன.

பல வன்முறைகளுக்கு ஊற்றுக்கண்ணான போதையைக் கட்டுப்படுத்த முடியாமல் – போதைப் பொருள் புழக்கத்தில் எந்த மாநிலம் முதலிடம் போன்ற விவாதங்கள் எல்லாம் திசை திருப்பக் கூடியவை தான்.

எந்த அரசாக இருந்தாலும், போதை ஊற்றுக்கண்ணை முதலில் மூடுங்கள்!

– யூகி

Comments (0)
Add Comment