ஜி.எஸ். லட்சுமணன்: போற்றத்தக்க தியாகி!

25 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர், வார்தா ஆசிரமத்தில் காந்தியைச் சந்தித்து, “இந்த நாட்டுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்டார். “ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சேவை செய். அவர்களின் குழந்தைகளுக்கு என்று ஒரு பள்ளி ஆரம்பித்து நடத்து” என்றார் காந்தி.

அவரது அன்புக் கட்டளைக்கு அடிபணிந்து, தாழ்த்தப்பட்டோருக்கான உண்டு உறைவிடப் பள்ளியைக் கோபிசெட்டிப்பாளையம் ஸ்ரீராமபுரத்தில் உருவாக்கிய அந்த இளைஞர், லட்சுமண அய்யர்.

அந்த மகத்தான மனிதருக்கு நினைவு மண்டபமும் முழு உருவச்சிலையும் எழுப்பப்பட வேண்டுமெனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் அளித்துள்ளார் மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்றக் குழுத் தலைவர் நாகை மாலி.

தியாகம், தேசப்பற்று, மனிதாபிமானம், சமூகப் புரட்சி எனத் தீவிரமாக இயங்கியவர் லட்சுமணன். அவரது தந்தை டி.சீனிவாசனும் சாதிய, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய காந்தியவாதி.

ஒடுக்கப்பட்ட மக்கள் குடியேறி வாழ கோபி நகரத்தில் வடக்குப்புரத்தில் 4 ஏக்கர் நிலத்தை லட்சுமணனின் குடும்பம் இலவசமாக அளித்தது. மேலும் 2 ஏக்கர் நிலம் பள்ளிக்கும் விடுதிக்கும் அளிக்கப்பட்டது.

நனது இறுதி காலம் வரை லட்சுமணன் சிறப்பாகப் பராமரித்த இப்பள்ளி இன்றும் இயங்கிவருகிறது.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, கழிவுச் சட்டிகளைத் தூக்கும் பணியை விரும்பி மேற்கொண்டார்.

தனது சகோதரர் வேணுகோபால் காலமான பின்பு, அவரது மனைவி நாகரத்தினத்துக்குக் கைம்பெண் மறுமணத்தை அக்காலத்திலேயே நடத்தி வைத்தார்.

அதன் விளைவாக சாதிப் புறக்கணிப்புக்கும் ஆளானார். காந்தியின் அறைகூவலை ஒட்டி, தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயத்துக்குள் அழைத்துச் செல்லும் போராட்டத்தையும் முன்னெடுத்தார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்க சாதி ஆதிக்க சக்திகள் விதித்த தடையை ஜனநாயகப் போராட்டத்தாலும் சட்டப் போராட்டத்தாலும் தகர்த்தெறிந்தார்.

கோபி நகராட்சித தலைவராக இருந்தபோது (1952-1955) மனிதக் கழிவை மனிதரே அகற்றும் கொடுமைக்கு முடிவுகட்ட முயன்றார்.

மீண்டும் 1986-ல் கோபி நகராட்சித் தலைவராகப் பொறுப்பேற்றவர், உலக வங்கி உதவியுடன் ரூ.57 லட்சம் நிதி பெற்று அனைத்து பொதுக் கழிப்பிடங்களையும் நீரடிக் கழிப்பிடமாக மாற்றினார்.

ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த எத்தனையோ இளைஞர்களின் எதிர்காலத்தைக் கல்வி பொதுச் சேவை மூலம் வளமாக்கிய அவர் தன மகன் பொறியியல் படிக்க விரும்பியபோது, தனது நற்பெயரையும் செல்வாக்கையும் முன்வைத்து சிபாரிசு பெறத்  தயாராக இல்லை.

குடும்பத்துக்கு என்று சொத்து எதுவும் சேர்த்துக் கொள்ளாமல் பரம்பரைச் சொத்துக்கள் அனைத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி நலன்களுக்காகவும், பொதுப் பயன்பாட்டுக்காகவும் அர்ப்பணித்த லட்சுமணன் 02.01.2011-ல் மறைந்தார்.

அவர் பிறந்த ஈரோடு மாவட்டம்தான் தீண்டாமை ஒழிப்புப் பணிகளை முன்னெடுப்பதில் தமிழ்நாட்டில் முதன்மையான மாவட்டமாக உள்ளது.

இரட்டைக் குவளை முறை, உணவகங்களில் சமமாக உணவு அருந்த முடியாத நிலை, முடிதிருத்தும் நிலையங்களில் முடிவெட்ட முடியாத நிலை என இருந்ததை எதிர்த்துப் போராடி வெற்றி பெற பலருக்கும் ஊக்கசக்தியாக இருப்பது லட்சுமணனின் தியாக வாழ்க்கைதான்.

அவருக்கு நினைவு மண்டபமும், முழு உருவச் சிலையும் அமைக்கத் தமிழ்நாடு அரசு தயங்காமல் முன்வர வேண்டும்!

– நன்றி: இந்து தமிழ் திசை

Comments (0)
Add Comment