தேர்தலில் போட்டியிட அதிமுகவில் 2,475 பேர் மனு!

எந்தத் தேர்தலாக இருந்தாலும், அதிமுக முதன்முதலாக வேட்பாளர்களை அறிவித்துவிடும்.

மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுக இன்னும் தனது கூட்டணியை இறுதி செய்யவில்லை. அதிமுக நிர்வாகிகள், பல்வேறு கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் அதிமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுலகத்தில் இதற்கான பணி தொடங்கியது.

பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் 20 ஆயிரம் ரூபாயும், தனித் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் 15 ஆயிரம் ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

விருப்ப மனுக்கள் விநியோகம் கடந்த 1-ம் தேதியுடன் நிறைவடைய இருந்தது. எனினும் மனு அளிப்பதற்கான கெடு தேதி, நேற்று வரை (புதன்கிழமை) நீட்டிக்கப்பட்டது.

மொத்தம் 2 ஆயிரத்து 475 பேர் விருப்ப மனுக்களைப் பூர்த்தி செய்து அளித்துள்ளனர்.

கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து வேட்பாளர்களை அறிவிப்பார்.

பார்வர்டு பிளாக் ஆதரவு

இந்நிலையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் தலைமையில் அந்தக் கட்சியின் நிர்வாகிகள், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

மக்களவைத் தேர்தலில் பார்வர்டு பிளாக், கட்சி அதிமுகவுக்கு முழு ஆதரவை அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்குமாறு, எடப்பாடி பழனிசாமியிடம், பார்வர்டு பிளாக் நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.

அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவை சந்தித்து பேசுமாறு பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

சரத்குமார் திடீர் முடிவு

நடிகர் சரத்குமார் தலைமையிலான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சு நடத்தி வந்தது.

இந்த நிலையில் மத்தியமைச்சர் முருகன் உள்ளிட்ட பாஜக தலைவர்களை சரத்குமார் திடீரென சந்தித்துப் பேசினார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது இரு கட்சிகளும் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நல்லாட்சி அமைந்திட பாஜகவுடன் இணைந்து செயல்பட சமத்துவ மக்கள் கட்சி முடிவு எடுத்துள்ளது. மற்ற விவரங்களை ஒரு வாரத்தில் தெரிவிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

– பி.எம்.எம்.

Comments (0)
Add Comment