யார் இந்த அவர்?

76 ஆண்டுகளுக்கு முந்தைய கடிதத்தின் ஒரு பகுதி :- “பார்வையிலும் பழக்க வழக்கங்களிலும் கள்ளங்கபடமற்ற எளிய கிராம வாலிபனாகவே இவர் இருக்கிறார். எதிர் காலத்தில் ஒரு சிறந்த கிசான் கட்சித் தலைவராக இவர் வளர்வார்.”

– இக்கடிதத்தை எழுதியவர் பி.சீனிவாச ராவ்.

தெற்கு கன்னடப் பகுதியைச் சேர்ந்த இவர் கீழ் தஞ்சைப் பகுதிக்கு வந்து விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளிகள் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தவர்.

இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அன்றைய வாலிபர், இன்றும்.. “பார்வையிலும் பழக்க வழக்கங்களிலும் கள்ளங்கபடமற்ற எளிய கிராம விவசாயி”யாகவே வாழ்ந்து வருகிறார்.

அன்று 22 வயது கட்சி ஊழியராக விளங்கியவர். இன்று 99 வயது தேசியத் தலைவராக விளங்குகிறார்.

2005-ல் அவரது 80-வது ஆண்டு நிறைவு விழாவில் அனைத்து தரப்பு தமிழ் மக்களும் நிதியாக வழங்கிய ஒரு கோடி ரூபாயையும் காரையும் தனது கட்சிக்கு முழுமையாகத் தந்தவர்.

2022-ல் தமிழக அரசு “தகைசால் தமிழர் விருது”டன் வழங்கிய ரூபாய் 10 லட்சத்துடன் தனது சேமிப்பு பணம் ரூபாய் 5000 ஐயும் சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திருப்பி வழங்கியவர்.

1946 இல் மடங்களின் சுரண்டலில் இருந்து விவசாயிகளை பாதுகாத்திடவும், கொத்தடிமைச் சிறையிலிருந்து விவசாயத் தொழிலாளிகளை மீட்டெடுக்கவும் நான்குநேரி வட்டாரம் களக்காடு பகுதிக்கு சங்க ஊழியராக அனுப்பப்பட்டார்.

தான் ஏற்றுக்கொண்ட உயரிய சமூக இலட்சியத்திற்காக 1949 முதல் 1956 முடிய, 24-லிருந்து 31 வயது வரையிலான இளமையை, ஏழு ஆண்டுகள் சிறையில் தொலைத்தவர்.

1980-களின் தொடக்கத்தில் நெல்லை மாவட்டத்தில் நடந்த சாதியக் கலவரங்களை தடுத்திட, சமாதான முயற்சிகளை முதலில் முன்னெடுத்தவர்.

1995 சாதிக் கலவரத்தில் தனது சொந்த மாமனார் கொலை செய்யப்பட்ட தருணத்திலும், மாற்றுத் தரப்பு மக்களின் நலனுக்கான சமாதான யாத்திரையை திட்டமிட்டபடியே தொடங்கி நடத்தியவர்.

கடனாநதி மீது ஒரு அணை அமைத்திடக் கோரி 1966 இல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அமர்ந்து பன்னிரண்டாவது நாளில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகே போராட்டத்தை முடித்துக் கொண்டவர்.

மாவட்டங்களுக்கும் போக்குவரத்து கழகங்களுக்கும் சூட்டப்பட்ட தேசியத் தலைவர்களின் பெயர்களை நீக்கிடக்கோரி மாண்புமிகு முதல்வரிடம் கோரிக்கை வைத்து வென்றவர்.

2010ல் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்து இரண்டரை மணி நேரம் அவரே வாதிட்டு ஐந்தாண்டு காலத்திற்கு தாமிரபரணியில் மணல் அள்ளத் தடை உத்தரவு பெற்றவர்.

ஒரு பொதுநல தியாகத் தலைவர் என்கிற மரியாதையை நீதிமன்றம் வழங்கியது.

யார் இந்த அவர்? ஸ்ரீவைகுண்டத்தில்.. தாமிரபரணி ஓடுகின்ற சலசல சத்தம் கேட்கிற 200 அடி தூரத்தில்.. பிறந்து வளர்ந்து, அந்த மண்ணில் ஓடியாடிப் புரண்டு விளையாடிய அன்பின் இனிய தோழர் இரா.நல்லகண்ணு.

– சு.சங்கர நாராயணன், வள்ளியூர்.

Comments (0)
Add Comment