மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் பிரதான கட்சிகளிடையே கூட்டணி முடிவாகவில்லை.
தமிழகத்தின் நான்கு முனைப் போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை பொறுத்தவரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சிகளுக்குத் தலா ஒரு தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது..
முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தரப்பில் கடந்த முறை போன்றே, தமிழகத்தில் 9 இடங்களும், புதுச்சேரியில் ஒரு இடமும் என மொத்தம் 10 தொகுதிகள் தரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதனால் முதல்கட்ட பேச்சுவார்த்தையுடன் நிற்கிறது.
மதிமுக 2, விடுதலைச் சிறுத்தைகள் 3 தொகுதிகள் கேட்கின்றன. இந்தக் கட்சிகள் 2 முறை பேசியும் உடன்படிக்கை எட்டப்படவில்லை.
இதுதவிர கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் ஒரு தொகுதி தரவேண்டி உள்ளது.
ஸ்டாலின் ஆலோசனை
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், நேற்று அண்ணா அறிவாலயம் வந்தார்.
அங்கு, அமைச்சர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது, எந்தெந்த தொகுதிகளை கொடுப்பது என அவர் ஆலோசனை நடத்தினார்.
இடதுசாரி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய இடங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
நாளைக்குள் (07.03.2024) தொகுதிப் பங்கீட்டை முடிக்குமாறு டி.ஆர்.பாலுவுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தேர்தல் அறிக்கை தொடர்பாக பெறப்பட்ட பரிந்துரைகளை வரிசைப்படுத்தி, விரைவில் அறிக்கை தயாரிக்கவும் அறிவுறுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், திமுக பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடர்பாகவும் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இதுதவிர, போதைப் பொருள் தொடர்பான பிரதமரின் பேச்சு, அதிமுக, பாஜக கூட்டணிகள் தொடர்பாகவும் முக்கியஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து திமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “கடந்த முறை போன்றே இந்த முறையும் தொகுதிகளை ஒதுக்கிக் கூட்டணியை முடிவு செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
அதனடிப்படையில், பெரும்பாலும் 23 தொகுதிகளில் திமுகவும், 17 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடும்.
தொகுதி எண்ணிக்கையைவிட எந்தத் தொகுதியை வழங்குவது என்பதில்தான் சில சிக்கல்கள் உள்ளன. அதுவும் விரைவில் தீர்க்கப்பட்டு நாளைக்குள் பெரும்பாலும் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுவிடும்’’ என்று தெரிவித்தார்.
வடிவேலு போட்டியா?
இதனிடையே மக்களவைத் தேர்தலில் நகைச்சுவை நடிகர் வடிவேலு, திமுக சார்பில் போட்டியிடப்போவதாக செய்திகள் வந்துள்ளன.
இது குறித்து வடிவேலுவிடம் கேட்டபோது, “அண்மையில் கலைஞர் நினைவிடத்தை பார்வையிட்டேன். திமுக பொதுக்கூட்ட மேடையில் பேசியுள்ளேன்.
இதனை தொடர்புப்படுத்தி நான் தேர்தலில் போட்டியிடப்போவதாக வதந்திகள் முளைத்துள்ளன. அப்படி ஏதும் கிடையாது” எனக் கூறினார்.
– பி.எம்.எம்.