தமிழ், தமிழர் மரபு தெரிந்து தான் பேசுகிறாரா ஆளுநர்?

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதிலிருந்து இதுவரை பல சர்ச்சைக்குரிய செய்திகளைத் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அதன் மூலம் ஊடகங்களில் அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இணையாகப் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறார்.

இது ஒரு புறமிருக்க அண்மையில் வைகுண்ட சுவாமி விழாவில் அவர் பேசிய பேச்சு இதுவரையிலும் இல்லாத ஒரு புது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

சாமித்தோப்பில் உள்ள வைகுண்ட சாமிக்காக உருவாக்கப்பட்டிருக்கிற கோவிலுக்கு பின்னிருக்கிற சமூகப் பின்புலம் ஆர்.என்.ரவி அவர்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்பது தெரியவில்லை.

தன் சமூகத்தையே தாழ்த்தி வைக்கப் பட்டிருப்பதற்கு எதிராக எழுந்த ஒரு எதிர்ப்புக் குரல்தான் இயக்கமாகவும் கோவிலாகவும் பரிணாமம் பெற்றிருக்கிறது.

இதை முழுக்க நிராகரிக்கிற விதத்தில் அய்யா வைகுண்டசாமியை சனாதன ஆதரவாளராக உணரும் வகையில் அவர் பேசியிருப்பது தமிழக சமூகப் பின்புலமே தெரியாத அறியாமையைத் தான் வெளிப்படுத்துகிறது.

அடுத்து அவர் கொளுத்திப் போட்டிருப்பது கால்டுவெல் பற்றியது.

கால்டுவெல்லை அவரது படிப்புக் குறித்தும், கால்டு வெல் எழுதிய ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்கிற நூலைப் பற்றியும் அவர் வெளிப்படுத்திய பேச்சை, படிப்பவர்களும் அல்லது கேட்பவர்களும் நிச்சயம் அதற்கு பின்னிருக்கிற உண்மையை நன்கு அறிவார்கள்.

கால்டுவெல் அயர்லாந்தைச் சேர்ந்தவர். அங்குள்ள பிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் மொழியியல் படிப்பை முடித்த நிலையில் தான் தமிழகத்திற்கு வந்து 53 ஆண்டுகள் பணியாற்றியவர்.

தமிழ் உள்ளிட்ட பல திராவிட மொழிகளைக் கற்றறிந்த பின்னணியில்தான் அவர் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்கிற நூலை எழுதியிருக்கிறார்.

அப்போதே அது வெளி உலகத்தின் கவனத்தில் விழுந்த நூலாக இருந்திருக்கிறது. 75 வயது வரை வாழ்ந்து, தமிழ் மண்ணிலேயே உயிர்நீத்த அவருடைய மொழி சார்ந்த பின்புலம் தெரிந்த எவரும் இம்மாதிரியான அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைக்க மாட்டார்கள்.

இதே போன்று பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

காவேரி ஆற்றின் குறுக்கே கரிகாலன் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கல்லணையைப் பற்றி முதலில் வெளிக்கொண்டு வந்தவர் சர் ஆர்தர் காட்டன் என்கிற ஆங்கிலேயரான நீர்ப்பாசன பொறியாளர்தான்.

அவர்தான் அன்றைக்கு இருந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களுக்கு இருந்த நீர்ப்பாசன அறிவுத் திறன் குறித்து வியந்து, “இது ஒரு மகத்தான அணை” என்று பொதுவெளியில் வெளிப்படுத்திய பிறகே கல்லணைக்கான கட்டுமானத் திறன் பற்றிய புரிதல் வெளி உலகத்திற்கு ஏற்பட்டது.

அதை வெளிக்கொணர்ந்த சர் ஆர்தர் காட்டன் ஆங்கிலேயர் தான். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் தான்.

இதற்கு அடுத்து ஏட்டுச் சுவடிகளில் இருந்து இருந்த தமிழ் மொழியை அச்சு வடிவம் என்கிற நவீன வடிவத்திற்குக் கொண்டு சென்றதும் வெளிநாட்டவர் தான்.

இந்தியாவிலேயே தமிழ்மொழியில் தான் கி.பி. 1528-ல் ‘தம்பிரான் வணக்கம்’ என்கிற பெயரில் அச்சு வடிவத்தில் முதல் நூல் வெளிவந்திருக்கிறது. அதை போர்ச்சுகீசிய மொழியில் இருந்து மொழிபெயர்த்தவர் அண்டிறிக்கி பாதிரியார்.

தமிழகத்தில் முதல் அச்சுக்கூடத்தை புன்னைக்காயலில் நிறுவியவரும் அவர்தான்.

இப்படிப் பல உதாரணங்களை நாம் பட்டியலிட முடியும்.

அன்றைக்கே ‘தேம்பாவணி’ என்கின்ற தமிழ் மரபுக்கேற்றபடியான ஒரு இலக்கிய நூலைக் கொண்டு வந்ததும் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

இப்படி தமிழுக்கும், கிறிஸ்தவச் சமூகத்துக்குமான தொடர்பு கடந்த சில நூற்றாண்டுகளாகவே நீடித்துக் கொண்டிருக்கிறது.

இதை வேற்று மதத்தைச் சேர்ந்தவர் என்று குறுகிய பார்வையோடு –
நாம் மொழி சார்ந்த வரலாற்றைப் பார்த்துக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

ஆனால், தற்போது தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவி பொதுவெளியில் தமிழ் மொழிக்கும் தமிழருடைய மரபுக்கும் எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து விதைத்து வருகிறார்.

இதில் நமக்கு எழுகிற மிக முக்கியமான கேள்வி.

தமிழகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும்போதெல்லாம் தமிழ் மொழியைப் பற்றி பெருமிதமாகப் பேசுகிறார்.  வள்ளுவர் துவங்கி சங்கப்பாடல் வரை அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார்.

அவருக்கு அவருடைய பேச்சின் பின்புலமாக இருப்பவர்கள் யார்? இதே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தானே.

அவர்கள் அத்தகைய மேற்கோள்களை எடுத்துக் கொடுத்த பின்னணியில் பிரதமரின் பேச்சு அப்படி அமைந்திருக்க முடியும்.

அதே சமயம் வேற்று மொழி பின்னணியிலிருந்து தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டு இன்றுவரை சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி வரும் ஆளுநரான ஆர்.என்.ரவி அவர்களுக்கு அவருடைய பேச்சின் பின்புலமாக இருப்பவர் யார்?

தமிழக வரலாறு அறியாதவர்களா இப்படிப்பட்ட குறிப்புகளைக் கொடுத்து – ஆளுநரை இப்படிப் பேச வைக்கிறார்கள்? அதற்கு உடன்படாமலா ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பேசுவார்? தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே தமிழ்நாடு அரசின் அறிக்கையை வாசிக்க மறுத்து வெளியேறிவர் இதற்கு உடன்பட்டுத் தானே பேசுகிறார்?

இதில் எதை பாஜகவின் மொழி சார்ந்த கருத்து என்று எடுத்துக் கொள்ள முடியும்?

இதையும் பாஜக தலைமை தெளிவாக விளக்கினால் – பல குழப்பங்களைத் தீர்ப்பதற்கு வழிவகுக்கும்.

-யூகி

#ஆர்_என்_ரவி #பாஜக #அண்ணாமலை #வைகுண்ட_சுவாமி #கால்டுவெல் #திராவிட_மொழி_ஒப்பிலக்கணம் #கரிகாலன் #கல்லணை #சர்_ஆர்தர்_காட்டன் #தமிழ் #தேம்பாவணி #r_n_ravi #bjp #annamalai #karikalan #tamil #thembavani #tn_governor #ஆளுநர் #robert_caldwell

Comments (0)
Add Comment