‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் நிச்சயம் வெற்றி பெறும், வசூல் குவிக்கும் என்பது இன்றளவும் கோடம்பாக்கத்தில் நிலவும் நம்பிக்கை.
சின்ன பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள், தங்கள் படங்கள் வணிக ரீதியில் வெற்றிப் பெற ரஜினியை சிறப்புத் தோற்றத்தில் பல்வேறு தருணங்களில் நடிக்க வைத்துள்ளனர்.
நட்சத்திரம், யார், அன்புள்ள ரஜினிகாந்த், பாவத்தின் சம்பளம், அக்னிசாட்சி, உருவங்கள் மாறலாம், கோடைமழை, வள்ளி, குசேலன் போன்றவை ரஜினி கவுரவ வேடத்தில் நடித்த படங்கள்.
அண்மை வெளியீடு ‘லால் சலாம்’.
இந்தப் படங்களின் தயாரிப்பாளர், ஹீரோ அல்லது இயக்குநருக்கு உதவும் நோக்கத்தில் ரஜினி, சிறப்பு தோற்றத்தில் வந்து போனார்.
ஆனால் அவர் கவுரவ வேடத்தில் நடித்த பெரும்பாலான படங்கள் பெரும் தோல்வியையே சந்தித்துள்ளன.
சில படங்கள் குறித்து ஓர் அலசல்:
அன்புள்ள ரஜினிகாந்த்
நண்பர்களுக்கு உதவும் வகையில் ரஜினிகாந்த், நடித்த படம் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’. இதன் தயாரிப்பாளர் தூயவன், தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவில் பணியாற்றியவர்.
தேவர் பிலிம்ஸ் படங்களில் நடித்தபோது தூயவனுடன் ரஜினிக்கு நெருக்கமான பழக்கம் உண்டு. இந்தப் படத்தின் இயக்குநர் கே. நட்ராஜ், ரஜினியுடன் திரைப்பட கல்லூரியில் படித்தவர்.
இரு நெருக்கமான நண்பர்களை உயர்த்திவிடும் நோக்கத்தில் இந்தப் படத்தில் ரஜினி நடித்தார்.
முதலில் 6 நாட்கள் மட்டுமே அவர் கால்ஷீட் கொடுத்திருந்தார். படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக மேலும் 4 நாட்கள் நடித்தார்.
பின்னாட்களில் எஜமான், வீரா போன்ற படங்களில் ரஜினியின் ஜோடியாக நடித்த மீனா, இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக ரோஸி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்தத் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டாராகவே நடித்திருந்தார். நடிகை அம்பிகா முக்கியக் கதாபாத்திரத்தில் ரோஸியின் தாயாராக நடித்திருப்பார்.
ஜெய்சங்கர், கே. பாக்யராஜ், ராதிகா, பார்த்திபன் ஆகியோரும் இதில் கவுரவ தோற்றத்தில் வந்திருப்பார்கள்.
1984 ஆம் ஆண்டு வெளியாகி, தரமான படைப்பு என இன்றளவும் பேசப்படும் இந்தப் படம், பெரிய அளவில் வசூல் குவிக்கவில்லை என்றாலும், தயாரிப்பாளரின் கையை கடிக்கவில்லை.
வள்ளி
ரஜினிகாந்த், கதை வசனம் எழுதி தயாரித்த படம் ‘வள்ளி’. இதனையும் ரஜினியின் நண்பர் கே. நட்ராஜ்தான் இயக்கி இருந்தார். ப்ரியாராமன் இதில் தான் கதாநாயகியாக அறிமுகமானார்.
வடிவேலுவை அடுத்த தளத்துக்கு கொண்டு சென்ற படமும் கூட. நட்ராஜை, தூக்கி நிறுத்தும் வகையில் உருவான இந்தப் படத்தில் ரஜினி, சிறப்பு தோற்றத்தில் வந்து போனார்.
நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சம்பளம் வாரி இரைக்கப்பட்டது. உதவி இயக்குநர்களுக்கும் நல்ல ஊதியம் வழங்கினார் ரஜினி. இளையராஜா இசை அமைத்திருந்தார்.
1993 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக புகழப்பட்டது. ஆனால் கல்லாப்பெட்டி நிறையவில்லை. வள்ளியால் ரஜினிக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது.
குசேலன்
‘சந்திரமுகி’ எனும் ‘சூப்பர் டூப்பர்’ வெற்றிப்படத்தை கொடுத்த ரஜினி – பி. வாசு கூட்டணி உடனடியாக இணைந்த அடுத்த படம் ‘குசேலன்’.
இந்த திரைப்படம் மலையாளத் திரைப்படமான ‘கதா பறையும் போல்’ படத்தின் ரீமேக் ஆகும்.
கிராமத்தில் வசிக்கும் சவரம் செய்யும் ஏழைக்கும், சூப்பர் ஸ்டாருக்கும் இடையேயான நட்பை சுற்றி கதைக்களம் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்தப்படத்தில் ரஜினிகாந்த், சினிமா நடிகராக கவுரவ வேடத்தில் நடித்திருப்பார். வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் படத்துக்கு பெரும் பலம் சேர்த்தது. நயன்தாராவும் சில காட்சிகளில் நடித்தார்.
ஆனாலும் பசுபதி – மீனா ஆகியோரை சுற்றியே படம் நகர்ந்ததால், ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். வணிக ரீதியாக படம் தோல்வி.
இதனால் அதிக விலை கொடுத்து படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், நஷ்டஈடு கேட்டு ரஜினி அலுவலகத்தை முற்றுகையிடும் அளவுக்கு பிரச்சினை ஏற்பட்டது.
லால்சலாம்
கடந்த 9 ஆம் தேதி வெளியான ‘லால்சலாம்’ படத்தில், ரஜினிகாந்த், சிறப்பு தோற்றத்தில் வந்திருந்தார். அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கி இருந்தார்.
லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இந்தப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். செந்தில், தம்பி ராமையா, ஜீவிதா, நிரோஷா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் தோன்றி இருந்தனர்.
ரஜினி சிறப்பு தோற்றத்தில் தோன்றிய வள்ளி, குசேலன் வரிசையில் இந்த படமும் சேர்ந்து விட்டது.
ஆமாம். 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ‘லால்சலாம்’ 15 நாட்களில் 40 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே வசூல் செய்துள்ளது.
ரஜினிகாந்த் இப்போது நடித்து வரும் ‘வேட்டையன்’ படத்தையும் லைகா நிறுவனமே தயாரிப்பதால், ‘லால்சலாம்’ தோல்வியை அந்த நிறுவனம் பொருட்படுத்தவில்லை.
லால்சலாமில் விட்டதை வேட்டையனில் பிடித்து கொள்ளும் நம்பிக்கையில் அந்த நிறுவனம் உள்ளது. ஐஸ்வர்யாதான் மனம் நொந்து போய் உள்ளதாக கூறப்படுகிறது.
– பாப்பாங்குளம் பாரதி.