காலம் கடந்து நிற்கும் திரைப்படங்கள்!

மார்ச் 5  – இந்த தேதியில் எந்தெந்த ஆண்டுகளில் என்னென்ன படங்கள் வெளியாகின என்று பார்க்கலாமா?

அவள் பெயர் தமிழரசி – மீரா கதிரவன் இயக்கிய இந்தப் படத்தில் ஜெய், மனோசித்ரா, தியோடர் பாஸ்கரன், வீர சந்தானம், கஞ்சா கருப்பு, ரமா, வித்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

விஜய் ஆண்டனி இதற்கு இசையமைத்தார். 2010ஆம் ஆண்டு வெளியான இப்படமானது தோற்பாவைக் கூத்தின் சிறப்பினைச் சொல்வதாக இருந்தது; ‘ஆட்டோகிராப்’ பாணியில் காதல் படமாக அமைந்தது.

வீரசேகரன் – இப்படம் 2010இல் வெளியானது. ‘பூ’ படத்தில் நடித்த கலை இயக்குனர் வீரசேகரன் நாயகனாக நடித்த படம் இது.

அமலா பால் அறிமுகமான படமும் இதுவே. சதீஷ்குமார் இயக்கிய இந்தப் படத்திற்கு சாஜன் மாதவ் இசையமைத்தார்.

பிரதாப் போத்தன், எம்.எஸ்.பாஸ்கர், ஆர்த்தி, மனோபாலா உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர்.

தம்பிக்கு இந்த ஊரு – பரத், பிரபு, சனா கான், மடலசா, ரஞ்சித், விவேக், தலைவாசல் விஜய், சரண்யா உட்படப் பலர் நடித்த இந்தப் படத்தை பத்ரி இயக்கியிருந்தார்.

தரண் குமார் இதற்கு இசையமைத்தார். 2010ஆம் ஆண்டு வெளியானது இப்படம். பெரிய எதிர்பார்ப்பை உண்டுபண்ணிய இப்படம் அதற்கேற்ற வரவேற்பைப் பெறவில்லை.

 குமரிப் பெண்ணின் உள்ளத்திலே – இந்தப் படம் 2010ஆம் ஆண்டு வெளியானது. எஸ்.கிஷோர் இதனை இயக்கினார்.

சந்திரஹாசன் ஜெயபிரகாஷ், சிப்பி, நாசர், அஜய் ரத்னம், மீரா வாசுதேவன், சீதா, பாபிலோனா, செந்தில், பாண்டு, காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். அமுதபாரதி இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

அடிதடி – நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்யராஜின் மீது கவனத்தைக் குவித்த படம் இது. 2004ஆம் ஆண்டில் வெளியானது. இதில் சத்யராஜ் உடன் அவரது சகோதரராக நெப்போலியன், அவரது மனைவியாக சுகன்யா நடித்தனர்.

மேலும் அப்பாஸ், ரதி, வையாபுரி, ராஜ்கபூர், நிழல்கள் ரவி என்று ஒரு பட்டாளமே இதில் தோன்றியிருந்தது. தேவா இதற்கு இசையமைத்தார். ‘மன்மதராசா’ பாடல் பாணியில் இதில் அமைக்கப்பட்ட ‘உம்மா உம்மம்மா’ ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

கம்பீரம் – சுரேஷ் இயக்கிய இப்படத்தில் சரத்குமார், லைலா, பிரனதி, வடிவேலு, தணிகல பரணி, ஜாஸ்பர், மாணிக்கவிநாயகம், பாண்டு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மணி சர்மா இதற்கு இசையமைத்திருந்தார்.

’அரசு’ படத்திற்குப் பிறகு இயக்குனர் சுரேஷ், சரத்குமார் கூட்டணியில் வெளியான இப்படம் எதிர்பார்ப்புக்கேற்ற வெற்றியைப் பெறவில்லை.

என்றென்றும் காதல் – விஜய், ரம்பா, ரகுவரன், பானுப்ரியா, எம்.என்.நம்பியார், ராதாரவி, தாமு, சார்லி, அஞ்சு, சிந்து உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். மனோஜ் பட்னாகர் இயக்கிய இந்தப் படத்திற்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்தார்.

’ஓ தென்றலே’ உட்பட இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன. 1999இல் வெளியானது இப்படம். முழுக்கக் காதலை மையப்படுத்திய இப்படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

மகராசன் – 1993இல் இப்படம் வெளியானது. பானுப்ரியாவை மையப்படுத்திய இந்தக் கதையில் கௌரவ பாத்திரத்தில் கமல் தோன்றச் சம்மதித்தார்.

காரணம், இப்படத்தின் இயக்கித் தயாரித்தவர் அவரது நண்பரான ஜி.என்.ரங்கராஜன். அதுவே, கமல் ஏற்ற பாத்திரத்தை விரிவுபடுத்தவும் காரணமாக அமைந்தது.

கவுண்டமணி, செந்தில் இருவருடனும் அவர் நடித்த நகைச்சுவை படம் இதுவென்பது இன்னொரு சிறப்பு. இதில் வி.கே.ராமசாமி, வடிவுக்கரசி, ரமேஷ் அரவிந்த், சந்திரசேகர், ராகவி, வடிவேலு உட்படப் பலர் நடித்திருந்தனர்.

இளையராஜா இதற்கு இசையமைத்திருந்தார். தொலைக்காட்சிகளில் பலமுறை ஒளிபரப்பாகிப் பிற்காலத்தில் இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை ஈட்டியது.

பட்டணத்து ராஜாக்கள் – பி.எஸ்.வீரப்பா தயாரிப்பில், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய இப்படத்தில் விஜயகாந்த், ஜெய்சங்கர், சில்க் ஸ்மிதா, டைப்பிஸ்ட் கோபு, ஜோக்கர் துளசி, திடீர் கன்னையா, ஏ.வீரப்பன், எஸ்.எஸ்.சந்திரன் உட்படப் பல நடித்திருந்தனர்.

சங்கர் – கணேஷ் இதற்கு இசையமைத்தனர். 1982ஆம் ஆண்டில் இப்படம் வெளியானது.

நவராத்திரி – எம்ஜிஆர், இயக்குனர் ஏ.பி.நாகராஜன் உடன் இணைந்து தந்த ஒரே படம் இதுவே. இதில் லதா, ஜரினா வஹாப், சுபா, ஜெயா, ஸ்ரீப்ரியா, ஜெயசித்ரா, குமாரி பத்மினி, பி.ஆர்.வரலட்சுமி என்று 9 நாயகிகள் நடித்தனர்.

எஸ்.வரலட்சுமி, சி.கே.சரஸ்வதி, புஷ்பலதா, ஏவிஎம் ராஜன், எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா, நாகேஷ் உட்பட ஒரு நடிப்பு பட்டாளமே இதில் இடம்பெற்றிருந்தது.

இப்படத்திற்கு இசையமைத்தவர் குன்னக்குடி வைத்தியநாதன். இதில் இடம்பெற்ற ‘லட்கே சே மிலி லட்கி’ எனும் முழுமையான இந்திப் பாடலை பி.எல்.சந்தோஷி எழுதியிருந்தார்.

1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கு முன்னதாக வெளியானது இப்படம். ஆனால், எம்ஜிஆரின் வெற்றிப் படங்களில் ஒன்றாக இது இடம்பெறவில்லை.

அருணோதயம் – முக்தா சீனிவாசன் இயக்கிய இப்படத்தில் சிவாஜி கணேசன், சரோஜா தேவி, முத்துராமன், லட்சுமி, அஞ்சலி தேவி, வி.எஸ்.ராகவன், சோ, மனோரமா, தேங்காய் சீனிவாசன், ஜெயகுமாரி, கனகதுர்கா உட்படப் பலர் நடித்தனர்.

கே.வி.மகாதேவன் இதற்கு இசையமைத்தார். மதுரை திருமாறன் இப்படத்தில் கதாசிரியராகப் பணியாற்றினார். இப்படம் 1971இல் வெளியானது.

முகம்மது பின் துக்ளக் – சோ ராமசாமி இதில் முகம்மது பின் துக்ளக் ஆக நடித்திருந்தார். அவரே இப்படத்தின் இயக்குனர்.

வரலாற்றுப் பின்னணியில் அமைந்த கதையைக் கொண்டிருந்தாலும், இது சமகால அரசியலைக் கடுமையாக விமர்சித்தது. அதனாலேயே எதிர்ப்பையும் ஆதரவையும் ஒருசேரப் பெற்றது.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இப்படத்தில் ‘நீ இல்லாத இடமே இல்லை’ பாடல் பெரும் வரவேற்பை அள்ளியது. 1971இல் இப்படம் வெளியானது.

இதில் ஆர்.நீலகண்டன், எஸ்.ராஜகோபால், வீராசாமி, பீலி சிவம், மனோரமா, சுகுமாரி, ஜி.சகுந்தலா உட்படப் பலர் நடித்திருந்தனர்.

அல்லி – 1964ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் இப்படத்தை தயாரித்து இயக்கினார். விஜயகுமாரி, சௌகார் ஜானகி, சகஸ்ரநாமம், அசோகன், நாகேஷ், புஷ்பலதா, புஷ்பவல்லி உட்படப் பலர் இதில் நடித்தனர்.

நாகர்கோவில் பத்மநாபன் இப்படத்திற்குக் கதை வசனம் எழுதியிருந்தார். கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார்.

நல்வரவு – முத்துராமன், புஷ்பலதா, இ.வி.சரோஜா உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தை சார்லி – மணியம் இயக்கினர். டி.சலபதிராவ் இதற்கு இசையமைத்திருந்தார். இதன் கதை, வசனம் மற்றும் பாடல்களை வித்வேன் வே.லட்சுமணன் எழுதினார். 1964இல் இந்தப் படம் வெளியானது.

நல்லவன் – இப்படம் 1955இல் வெளியானது. இதில் ஆர்.எஸ்.மனோகர், செருகளத்தூர் சாமா, எம்.என்.நம்பியார், வி.கே.ராமசாமி, பி.கே.சரஸ்வதி, ராஜசுலோச்சனா, எஸ்.ரேவதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஏ.எல்.நாராயணன் எழுதிய கதைக்கு இயக்குனர் திருவேங்கடம் திரையுருவம் தந்திருந்தார். எம்.எஸ்.ஞானமணி இதற்கு இசையமைத்திருந்தார்.

நாம் – இப்படம் 1953-ம் ஆண்டு வெளியானது. ஜானகி அம்மையாருடன் எம்ஜிஆர் இணைந்து நடித்த கடைசிப் படம் இது.

பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், எம்.ஜி.சக்ரபாணி, பி.கே.சரஸ்வதி, எஸ்.ஆர்.ஜானகி உடப்டப் பலர் இதில் நடித்தனர்.

கலைஞர் மு.கருணாநிதி இப்படத்தின் திரைக்கதை வசனம் மற்றும் பாடல்களை எழுதினார்.

சி.எஸ்.ஜெயராமன் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். ஏ.காசிலிங்கம் இதனை இயக்கினார். இந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

மேற்சொன்ன படங்களில் பெரிய வெற்றியைக் குவிக்காத நாம், மகராசன், அவள் பெயர் தமிழரசி ஆகியவற்றோடு முகம்மது பின் துக்ளக்கும் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.

இதே தேதியில் வெளியாகி, மேற்கண்ட பட்டியலில் விடுபட்ட படங்களின் விவரங்களை எங்களுக்கு மின்னஞ்சலில் (editorialthaaii@gmail.com)  பகிரலாம்.

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment