தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் திரையுலகப் பிரபலங்களுக்கு தவறாமல் அழைப்பு விடுக்கப்படும்.
பெரும்பாலும் பாலிவுட் பிரபலங்கள் தான் அம்பானி வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மறக்காமல் அழைப்பார் முகேஷ் அம்பானி.
முகேஷ் அம்பானி – நீடா அம்பானி தம்பதிக்கு இருமகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
மூத்த மகன் ஆகாசும் மகள் இஷாவும் இரட்டையர்கள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.
இந்த நிலையில் அம்பானியின் 2- வது மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழில் அதிபர் விரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகாவுக்கும் ஜுலை மாதம் 12-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.
இந்தக் கொண்டாட்டத்தில் நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், பேஸ்புக் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பர்க் ஆகியோர் அமெரிக்காவில் இருந்து வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் மகள் இவாங்காவும் ஜாம்நகர் வந்திருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதா, மகள் ஜஸ்வர்யா ஆகியோருடன் நேற்று ஜாம்நகருக்கு சென்று மணமக்களை வாழ்த்தினார்.
நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், சஞ்சய் தத், அபிஷேக் பச்சன், ராம் சரண், சயீப் அலிகான், ரன்பீர் சிங், ரன்வீர் சிங், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், தீபிகா படுகோன், சாரா அலிகான், அலியா பட், ஜான்வி கபூர், கேத்ரினா கைஃப்,இயக்குநர் அட்லி உட்பட ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் ஜாம்நகரில் குவிந்தது.
முன்னதாக சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் இந்தி நட்சத்திரங்கள் ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் ஆகிய மூவரும் இணைந்து ஒன்றாக மேடையில் நடனம் ஆடினர்.
ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம் பெறும் ‘நாட்டு.. நாட்டு‘ பாடலை இந்தியில் ஒலிக்க விட்டு அவர்கள் ஆடியபோது, நிகழ்ச்சியில் பங்கேற்ற விஐபிக்கள் கரகோஷம் எழுப்பினர்.
அமெரிக்க பாப் பாடகி ரிஹானாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஆடம்பரமாக நடந்த இந்த விழாவில் 2,500 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன
உணவு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்காக 1,250 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.
திருமணத்தன்று எத்தனை ஆயிரம் கோடி செலவாகுமோ?
– பாப்பாங்குளம் பாரதி.