மார்ச் 2. இந்த தேதியில் எந்தெந்த ஆண்டுகளில் என்னென்ன படங்கள் வெளியாகின என்று பார்க்கலாமா?
தாரவி – இப்படம் 2018ஆம் ஆண்டு வெளியானது. ‘சூரியன்’, ‘ஐ லவ் இந்தியா’ படங்கள் தந்த பவித்ரன் இதனை இயக்கியிருந்தார். அவரது மகன் அபய் இதற்கு இசையமைத்திருந்தார். சதீஷ் பாலா, சுனு லட்சுமி உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர்.
அரவான் – 2012ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. சு.வெங்கடேசன் எழுதிய ‘காவல் கோட்டம்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தினை இயக்கியவர் வசந்தபாலன்.
பசுபதி, ஆதி, தன்ஷிகா, அர்ச்சனா கவி, கரிகாலன், சிங்கம்புலி, திருமுருகன் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தில் பரத், அஞ்சலி, ஸ்ருதி மராதே ஆகியோர் கௌரவ வேடங்களில் தோன்றியிருந்தனர்.
பின்னணி பாடகர் கார்த்திக் இதற்கு இசையமைத்திருந்தார். பண்டைய தமிழர்களின் வாழ்க்கை முறையைச் சொல்ல முனைந்த ‘அரவான்’ பெரும் உழைப்பிலும் பொருட்செலவிலும் தயாரானது. ஆனால், அதற்கேற்ற வரவேற்பை இப்படம் ஈட்டவில்லை.
கொண்டான் கொடுத்தான் – கதிர்காமன், அத்வைதா, இளவரசு, மீரா கிருஷ்ணன், எல்.ராஜா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். ஜி. ராஜேந்திரன் இயக்கிய இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இப்படம் 2012ஆம் ஆண்டு வெளியானது.
சங்கர் ஊர் ராஜபாளையம் – கந்தேஷ், ஹாசிகா ஆகியோர் இதில் நாயகன் நாயகியாக நடித்திருந்தனர். ‘காதல்’ பாணியில் ஆணவக்கொலை பின்னணியில் அமைந்த இப்படத்தை வீரா இயக்கியிருந்தார். வி.தஷி இதற்கு இசையமைத்திருந்தார். இப்படம் 2012ஆம் ஆண்டு வெளியானது.
முருகா – 2007ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் அசோக், ஸ்ருதி சர்மா, வடிவேலு, ரியாஸ் கான், மகாதேவன், சித்ரா ஷெனாய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விஜய்யின் ‘ஜில்லா’வை இயக்கிய ஆர்.டி.நேசன் இதனை இயக்கியிருந்தார்.
கார்த்திக் ராஜா இசையமைப்பில் ‘என் காதலி.. அவளைப் பாடிட வார்த்தைகள் இல்லை’ பாடலும், ‘சின்னஞ்சிறு சிட்டே’ ரீமிக்ஸும் ரசிப்புக்குரியதாக அமைந்தன.
வாலிப விளையாட்டு – 1990ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. மோகன், சாதனா, தேவிஸ்ரீ, வி.கே.ராமசாமி, எஸ்.எஸ்.சந்திரன், கோவை சரளா, செந்தாமரை உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சொர்ணம் இயக்கிய இப்படத்திற்கு சங்கர் – கணேஷ் இசையமைத்திருந்தனர்.
நெஞ்சிருக்கும் வரை – 1967ஆம் ஆண்டு வெளியானது இப்படம். இயக்குனர் ஸ்ரீதர் தனது ‘வெண்ணிற ஆடை’ வெற்றிக்குப்பிறகு இந்தியா – பாகிஸ்தான் பின்னணியில் ஒரு காதல் கதையைத் தர முனைந்தார். அது நிகழாமல் போகவே, இப்படத்தின் கதையை மாற்றியமைத்தார்.
சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, முத்துராமன், கோபாலகிருஷ்ணன், ராகவன், மாலி, கீதாஞ்சலி உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர்.
வண்ணப்படமாக அமைந்த இதில் நடித்த அனைவரும் அதிக ஒப்பனையின்றி தோன்றினர் என்பது இதன் சிறப்பம்சம். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் ‘முத்துக்களோ கண்கள்’, ‘எங்கே நீயோ நானும் அங்கு உன்னோடு’, ‘பூ முடிப்பாள் இந்த பூங்குழலி’, ’நெஞ்சிருக்கும் எங்களுக்கு’ பாடல்கள் காலத்தால் அழியாப் புகழைப் பெற்றன.
பல சிறப்புகளைப் பெற்றிருந்தும், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப அமையாத காரணத்தால் இப்படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
பக்தி அல்லது அம்பரீஷன் சரித்திரம் – 1940ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை டி.ஜி. குனே இயக்கியிருந்தார். சுப்பையா நாயுடு, லட்சுமி பாய், ஆர்.நாகேந்திர ராவ், கமலா பாய் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர்.
மேற்சொன்னப் படங்களில் அரவான், முருகா, நெஞ்சிருக்கும் வரை ஆகியன ரசிகர்களால் நினைவுகூரப்படுகின்றன.
இதே தேதியில் வெளியாகி, மேற்கண்ட பட்டியலில் விடுபட்ட படங்களின் விவரங்களை எங்களுக்கு மின்னஞ்சலில் பகிரலாம்.