இயக்குனர் கௌதம் மேனன் படங்கள் என்றால் இரண்டு விஷயங்கள் முதலில் நம் நினைவுக்கு வரும். ஒன்று, அவரது படங்களின் பிரதான பாத்திரங்கள் வெளிப்படுத்தும் காதல்; இன்னொன்று, கண்ணில் ஒற்றிக்கொள்ளும் வகையிலமைந்த ‘ஸ்டைலிஷான’ காட்சியாக்கம்.
எனை நோக்கிப் பாயும் தோட்டா, வெந்து தணிந்தது காடு படங்களில் அந்த இரண்டுமே உரிய உயரத்தை எட்டாதது போன்ற உணர்வு எழுந்தது.
பட்ஜெட் குறைபாடு மட்டுமே அதற்குக் காரணம் என்று கௌதமின் ரசிகர்கள் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். தற்போது அவர் இயக்கத்தில் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ படம் வெளியாகியிருக்கிறது.
இந்த படத்திலாவது நம் மனதை அள்ளும் காதலும் காட்சியாக்கமும் நிறைந்திருக்கிறதா?
‘பாடிகார்டு’ காதல்!
பார்த்ததுமே அவர் மீது ஈர்ப்பு கொள்கிறார். அடுத்தடுத்து நிகழும் சந்திப்புகளில் இருவருக்குள்ளும் காதல் தீ பற்றுகிறது.
அமெரிக்காவில் நீதித்துறையில் பணியாற்றி வருபவர் குந்தவி. ஜோஷ்வா ஒரு கூலிப்படைக் கொலையாளி. தன் காதலைச் சொன்ன கையோடு, தன்னைப் பற்றிய உண்மையையும் குந்தவியிடம் வெளிப்படுத்துகிறார் ஜோஷ்வா. அதன்பிறகு, இருவரும் பிரிந்து விடுகின்றனர்.
அதற்கடுத்த நான்காண்டுகளில் ஜோஷ்வாவின் வாழ்வு முற்றிலுமாக மாறுகிறது. அவர் விஐபிகளுக்கான தனிப்பட்ட மெய்க்காப்பாளராகப் பணியாற்றத் தொடங்குகிறார்.
குந்தவி மீது காதல் பூத்த தருணத்தில் இருந்து கொலை செய்யும் எண்ணத்தை அறவே அவர் விட்டுவிடுகிறார்.
இதற்கிடையே, அமெரிக்க நீதித்துறையில் குந்தவி தான் விரும்பும் நிலையை எட்டுகிறார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குப் போதைப்பொருளைக் கடத்தும் கும்பலின் தலைவன் லெக்குமேஸியை அந்நாட்டு காவல் துறை பிடிக்கிறது.
அவர் மீதான நீதித்துறை விசாரணை குழுவில் குந்தவியும் ஒருவராகப் பணியமர்த்தப்படுகிறார். ஆனால், அந்த விசாரணை நடைபெறாத வகையில் அதோடு தொடர்புடைய அனைவரையும் கூலிப்படையினர் கொல்கின்றனர். குந்தவி மட்டும் உயிர் தப்புகிறார்.
இப்போது, குந்தவியைக் கொல்வதற்கான வாய்ப்பு மாதவிக்குக் (திவ்யதர்ஷினி) கிடைக்கிறது. ஒருகாலத்தில் அவரிடத்தில் கூலிப்படை கொலையாளியாக வேலை பார்த்தவர் ஜோஷ்வா.
குந்தவி உயிருக்கு ஆபத்து என்ற தகவலை ஜோஷ்வாவிடம் சொல்கிறார் மாதவி. உடனே, ‘குந்தவி உயிரைக் காப்பாற்றுவதே தனது முதல் வேலை’ என்கிறார் ஜோஷ்வா.
அதையடுத்து, மீண்டும் மாதவியோடு கைகோர்த்து குந்தவிக்குப் பாதுகாவலராக மாறுகிறார் ஜோஷ்வா. அவருக்குத் தெரிந்த நண்பர்கள் சிலரையும் அப்பணியில் ஈடுபடுத்துகிறார்.
அடுத்த விசாரணை நடைபெறும் வரை குந்தவியைப் பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு, அவரைச் சென்னைக்கு அழைத்து வருகிறார் ஜோஷ்வா.
ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கிறார். அவரது குழுவினரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி அமெரிக்காவில் இருந்து வந்த சில கூலிப்படைக் கொலையாளிகள் உள்ளூர் ரவுடிகளுடன் சேர்ந்து அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வருகின்றனர்.
அப்போது நடக்கும் மோதலில் ஜோஷ்வாவும் ஒரேயொரு பாதுகாவலரும் மட்டுமே உயிர் பிழைக்கின்றனர்.
உயிருக்குப் போராடும் ஜோஷ்வாவை அழைத்துக்கொண்டு குந்தவி நள்ளிரவில் அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார். வழியில் இன்னொரு கும்பல் அவர்களை அடையாளம் கண்டு துரத்துகிறது. அவர்களுடன் சண்டையிட்டு இருவரும் தப்பிக்கின்றனர்.
ஒவ்வொரு முறையும் அந்த ஆபத்துகளில் இருந்து தப்பினாலும், அது தொடர்கதையாவது நின்றபாடில்லை. ஒருகட்டத்தில் அதற்குக் காரணம் யார் என்று யோசிக்கத் தொடங்குகையில் அனைத்துக்கும் விடை தெரியத் தொடங்குகிறது.
இறுதியில், தான் சொன்னபடியே குந்தவியைப் பாதுகாப்பாக அமெரிக்காவுக்கு ஜோஷ்வா அழைத்துச் சென்றாரா, இல்லையா என்பதுடன் முடிவடைகிறது இப்படம்.
இந்தக் கதையில், ஒரு விஐபிக்கு பாதுகாப்பு தர வேண்டிய ஒரு பாடிகார்டு அவரது முன்னாள் காதலராகவும் இருக்கிறார் என்பதே முக்கியமான சிறப்பம்சம். அதனால், திரைக்கதை முழுக்கவே சண்டைக் காட்சிகள் நிறைந்திருக்கிறது. ‘ஜோஷ்வா’வின் பலமும் அதுவே; பலவீனமும் அதுவே!
என்னா அடி..!
‘அடி ஒன்னொண்ணும் இடி மாதிரி விழுந்தது தெரியுமா’ என்று சிலர் கதை சொல்வார்களே, அப்படித்தான் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’வின் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன்.
அதனால், படம் முழுக்க சேஸிங், உருண்டு புரண்டு சண்டை, மீண்டும் எழுந்து துரத்துவது என்றே காட்சிகள் உள்ளன. அதற்கேற்ப, ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் மற்றும் அவரது குழுவினர் அபாரமாக உழைத்துள்ளனர்.
முக்கியமாக, கிளைமேக்ஸில் ஒரு அறைக்குள் வருண் சண்டையிடுவதாக அமைக்கப்பட்டுள்ள காட்சியில் ஒளிப்பதிவின் தரமும் யான்னிக் பென்னின் சண்டைக்காட்சி வடிவமைப்பும் விசிலடிக்க வைக்கின்றன.
ஆனால், இந்த ‘கேண்டிட்’ பாணி ஒளிப்பதிவு அனைத்து ரசிகர்களையும் ஈர்க்குமா என்பது கேள்விக்குறியே!
பெரும்பாலான சண்டைக்காட்சிகளில் ஆண்டனியின் படத்தொகுப்பை நம்மால் வியக்காமல் இருக்க முடிவதில்லை. மிகத்துல்லியமாகப் பல கோணங்களில் கோர்க்கப்பட்டிருக்கும் ஷாட்கள் மனதை ஓரிடத்தில் நிலைகொள்ள விடுவதில்லை.
கதை நிகழும் களங்களுக்கேற்ப குமார் கங்கப்பனின் தயாரிப்பு வடிவமைப்பு அமைந்துள்ளது. முக்கியமாக, சண்டைக்காட்சிகளில் அவரது குழுவினரின் உழைப்பு அபாரமாக உள்ளது.
சண்டைக்காட்சிகள் சரி, மீதமுள்ள காட்சிகளைப் பற்றிக் குறிப்பிட வேண்டாமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
அவை திரையில் கொஞ்சமாகவே வெளிப்படுகின்றன என்பதைத் தாண்டி, அவற்றில் காதலுக்கான முக்கியத்துவம் மிகக்குறைவு என்பதையும் சொல்லியாக வேண்டும்.
அதனால் மின்னலே, காக்க.. காக்க.., வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் பாணியில் இதில் நெஞ்சை வருடும் காதல் காட்சிகளை வலை போட்டு தேடத்தான் வேண்டும்.
கார்த்திக்கின் இசையமைப்பில் தொடக்க காட்சிகளில் ‘ப்பா..’ என்ற ரகத்தில் பின்னணி இசை அமைந்தாலும், பின்பாதிக் காட்சிகளில் மனிதர் மிரட்டி எடுக்கிறார். பாடல்கள் நம் மனதில் நிலைக்க இன்னும் பல முறை கேட்க வேண்டியிருக்கலாம்.
‘இதெல்லாம் பிஞ்சு மூஞ்சு’ என்று சொல்லத்தக்க வகையில் ‘கோமாளி’யில் தோன்றிய வருணை, நிஜமாகவே ஒரு பாடிகார்டு என்று நம்பும்படியாகத் திரையில் காட்டியிருக்கிறார் கௌதம்.
அதற்கேற்ப, வருணும் கட்டுறுதியான உடலுடன் திரையில் வலம் வந்திருக்கிறார். இறுக்கம் காட்டும் காட்சிகளிலும் கூட, அவர் பெரிதாகப் பிசகவில்லை.
நாயகியாக வரும் ராஹெய், திரையில் ‘யுஎஸ் ரிட்டர்ன்’ பெண்மணி பாத்திரத்திற்கு எளிதாகப் பொருந்துகிறார்.
இந்த படத்தில் நடித்தபிறகு அவர் நடிகர் ஆரவ்வை கல்யாணம் செய்து ‘செட்டில்’ ஆகிவிட்டார். அந்த தகவலை அறியும்போதே, இதன் படப்பிடிப்பு நடந்து எத்தனை காலமாகிறது என்பது நமக்குத் தெரிய வருகிறது.
திவ்யதர்ஷினி, மன்சூர் அலிகான், விசித்ரா, கிட்டி, லிஸி ஆண்டனி என்று பலர் திரையில் தோன்றுகின்றனர்.
ஆனால், ’அவுன்ஸ் அளவுதான் மருந்து’ என்பது போல அனைவரையும் சில காட்சிகளில் சிற்சில ஷாட்களில் இடம்பெற வைத்திருக்கிறார் இயக்குனர்.
நடிகர் கிருஷ்ணாவுக்கு இதில் வில்லன் பாத்திரம். ஆனால், தான் திரையில் வில்லனாகத் தெரிய வேண்டுமா வேண்டாமா என்பது தெரியாமல் அவர் குழம்பியிருப்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. அந்த பாத்திரத்தின் நிலைப்பாட்டைத் திரையில் விளக்குவதில் இடறியிருக்கிறார் இயக்குனர் கௌதம்.
கிருஷ்ணா மற்றும் அவரது தங்கை பாத்திரத்தோடு வருண் கொண்டிருக்கும் உறவு பின்பாதித் திரைக்கதை திருப்பங்களின் ஆதாரமாக உள்ளது. ஆனால், அதனைத் தெளிவாகத் திரையில் காட்டத் தவறியிருக்கிறார் கௌதம்.
அது மட்டுமல்லாமல், வருண் ஏன் கிருஷ்ணாவை நம்ப மறுக்கிறார் என்பதுவும் தெளிவுபடுத்தப்படவில்லை. அதுவே, கௌதமின் ‘எலைட்’ பார்வையை மீண்டுமொருமுறை கேள்விக்குள்ளாக்குகிறது.
ஒட்டுமொத்தமாகப் படத்தில் ஆறேழு டஜன் பாத்திரங்களாவது இடம்பெற்றிருக்கும். அவர்கள் எல்லாம் நாயகன் வருணை நோக்கி ஆவேசமாகப் பாய்ந்து அடி வாங்கிச் சாகிறார்கள். அதற்கேற்ப, அவரும் ‘அடி.. அடி.. ஒற்றே அடி..’ என்று அனைவரையும் பொளந்து கட்டுகிறார்.
ஆக்ஷன் ரசிகர்களை நிச்சயம் அது திருப்திப்படுத்தும். ஆனால், ‘சண்டைக் காட்சியா’ என்று முகத்தைக் குனிந்து கொள்பவர்களைக் குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்ற வைத்ததற்கு ஈடான அனுபவத்தைத் தரும் ‘ஜோஷ்வா’ தரும் காட்சியனுபவம். அப்படிப்பட்டவர்கள் ‘என்னா அடி’ என்று படம் முடிந்ததும் மூளையைத் தடவிக்கொண்டே வெளியே வர வேண்டும்.
தியேட்டரில் இருந்து வெளியே வந்தபோது, ‘படத்துல வர்றவங்களை விட படம் பார்த்தவங்க எண்ணிக்கை கம்மி’ என்று ஒரு ரசிகர் கமெண்ட் அடித்தபோதே இதிலுள்ள சண்டைக்காட்சிகளின் உண்மையான தாக்கம் புரிந்தது.
இது கௌதம் படமா?
கௌதமின் படங்களை ‘கிளாசிக்’ அந்தஸ்தோடு மனதில் போற்றிப் பாதுகாக்கும் தமிழ் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசம். அவர்களுக்கு ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ நிச்சயம் பிடிக்கும் என்று சொல்லிவிட முடியாது.
காரணம், முந்தைய படங்களில் அவர் கைக்கொண்டிருந்த சிறப்புகள் இதில் அவ்வளவாக இல்லை.
அதேநேரத்தில், தற்போதைய பாணிக்கேற்ப ஒரு ஆக்ஷன் படமொன்றைத் தனது பாணி காதல் சித்தரிப்புகளோடு திரையில் சொல்ல முயன்றிருக்கிறார் கௌதம் என்பதையும் ஏற்றாக வேண்டும்.
கடந்த பத்தாண்டு காலத்தில் ‘பட்ஜெட் குறைபாட்டில்’ சிக்கித் தவிக்கின்றன கௌதமின் படைப்புகள். இப்படமும் அதில் ஒன்றாக மாறியிருக்கிறது.
அதனால், இப்படத்தில் நிறைய காட்சிகள் விடுபட்டுப் போனதாக ரசிகர்கள் உணரலாம்.
நாயகன், நாயகி உட்படப் படத்தில் நடித்தவர்களின் இருப்பு அன்னியமாக இருப்பதாகக் கருதலாம்.
அவற்றைத் தாண்டி, நல்லதொரு கூட்டுழைப்போடு வித்தியாசமான வகையில் ஒரு ஆக்ஷன் படத்தைத் தந்திருக்கிறார் கௌதம் என்பதே ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ உருவாக்கும் எண்ணம்.
லாஜிக் மீறல்கள் மற்றும் கால தாமதத்தைத் தாண்டி இப்படம் ஒருவரை ஈர்க்க, அந்த உழைப்பு மட்டுமே முதல் காரணமாக அமையும்!
– உதய் பாடகலிங்கம்