புத்தகம் – நம்மோடு பயணிக்கும் நண்பன்!

நூல் அறிமுகம் :

ஒரு பலாப்பழத்தின் மொத்த சுளைகளும் எப்படி தனித்தனியே ரசித்து புசிக்க ஏற்றவையோ அப்படியான கட்டுரைகள் எஸ். ரா. அவர்களின் தனித்த சொற்கள் நூலில் அடங்கியுள்ள கட்டுரைகள்.

எங்கள் ஊர் பேருந்துகளில் பலாச்சுளைகளை விற்கும்போது தேன்பலா, தேன்பலா என்று கூவி விற்பார்கள். அச்சொற்களுக்கு ஈடானவை எனலாம் இக்கட்டுரைகளை. காஞ்சிபுரம் புத்தகத் திருவிழாவிற்கு இவ்வாண்டு எஸ்.ரா. அவர்கள் வந்திருந்தபோது வாங்கிய நூல் இது.

ஒரே நூலில் இன்னும் ஏகப்பட்ட, அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள் குறித்து அறிந்து கொள்வதென்பது ஒரு பெரிய ஜாக்பாட் அடித்ததற்கு ஈடுதானே? இதில் நிறைய நூல்களைப் பற்றிய அறிமுகங்களை எஸ்.ரா. அவருக்கே உரிய பாணியில் நேர்த்தியாக தொகுத்தளித்துள்ளார்.

முன்பொரு முறை எஸ்.ரா. அவர்களின் குறத்தி முடுக்கின் கனவுகள் நூலை வாசித்துவிட்டு தான் பின் ஜி.நாகராஜன் அவர்களின் குறத்தி முடுக்கு நாவலையும் அதில் குறிப்பிட்டிருந்த மேலும் சில நூல்களையும் வாங்கி வாசித்தேன்.

இதிலிருந்தும் அப்படி சில நூல்களை அடிக்கோடிட்டு வைத்திருக்கிறேன்.

இந்நூலில் குறிப்பிட்டுள்ள புத்தகங்கள் அனைத்தும் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறான காலகட்டங்களில் எழுதப்பட்டவை. அவற்றில் பல தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இக்கட்டுரைகள் ஒரு நூலின் வாசிப்பனுபவமாக மாத்திரமல்லாமல் அந்நூல்கள் எழுதப்பட்ட கால பின்னணி, அந்நூலாசிரியர்களின் பாத்திர வார்ப்புகள், அவரின் வாழ்க்கை வரலாறு என பல அரிய தகவல்களையும் பரந்துபட்ட நோக்கில் விவரித்துள்ளார்.

காஃகா கடற்கரையில், மதகுரு, தபால்காரன் முதலான இந்நூலில் எஸ்.ரா. கூறியுள்ள சில நூல்களை புத்தகத் திருவிழாக்களில் புரட்டிப் பார்த்திருக்கிறேன்.

ஆனால், அவற்றில் எதையும் வாங்கியதில்லை. இனிவரும் நாட்களில் அவற்றை கைகளில் ஏந்துகையில் சிலவற்றையாவது வாங்கிவிடும் எண்ணத்தினை இந்நூல் உருவாக்கியுள்ளது.

வழமை போல் நூலின் அநேக இடங்களில் பல அற்புதமான கருத்துகளை வாரி இறைத்திருக்கிறார். அவற்றிலிருந்து சில துளிகள் மட்டும் இங்கே…

–> பொதுவாக புத்தகங்களை இரவல் கொடுத்தால் திரும்பப் பெறவே முடியாது. ஒருவேளை திரும்பிக் கிடைத்தாலும் அந்த புத்தகம் அட்டை கிழிந்தோ, பக்கங்கள் மடங்கியோ காணப்படும். அதைக் காணும்போது ஏற்படும் வருத்தம் சொல்ல முடியாதது.

–> சில புத்தகங்கள் வாசித்து முடிந்தபின்பு நம்மை விட்டு மறைந்துவிடுவதில்லை. அவை நம் மனதில் நிரந்தரமாகக் குடியேறிவிடுகின்றன.

பல தருணங்களில் அதன் வரிகள் நமக்குள் எழுகின்றன. அந்தக் கதாபாத்திரங்களை நாம் நேசிக்கத் துவங்கிவிடுகிறோம். நல்ல நண்பரைப் போலப் புத்தகங்கள் உருமாறிவிடுகின்றன.

காரின் பின்பக்கக் கண்ணாடியில் உலகம் பிரதிபலிப்பது போல், புத்தகங்கள் நாம் கடந்து வந்த பாதையைக் காட்டி நம்மோடு பயணிக்கின்றன.

–> உலகம் ஒருமனிதனைக் கைவிடும் போது புத்தகங்கள் அவனை அரவணைத்துக் கொள்கின்றன. ரகசியமாக அவனுடன் பேசி உற்சாகத்தை, நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

புத்தகங்களில் நாம் வாசிக்கும் சொற்கள் அன்றாட வாழ்வில் தராத புதிய அர்த்தத்தைத் தருகின்றன.

வாசித்தல் என்பதை எளிமையான விஷயமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அது ஒரு விந்தை. வாசிப்பின் வழியே மனதில், நினைவில் உருவாகும். மாற்றங்களை எளிதாகச் சொல்லிவிட முடியாது.

–> படைப்பாளியின் காலம்தான் முடிந்து போகிறது. அவனது படைப்புகள் காலமற்ற வெளியில் தனக்கான இடத்தைத் தானே தேடிக் கொண்டு யாரோ ஒரு வாசகனின் நெருக்கத்திற்கு உரியதாக என்றுமிருக்கிறது.

–> புத்தகங்களை வாங்கிக் குவிப்பதும் அதை ஆசை ஆசையாகப் படிப்பதும், பராமரிப்பதும் ஒரு வகையான வாழ்க்கை முறை. அதில் தீவிரமாக ஈடுபடுகிறவர்களைப் புத்தகவாதி என்று அழைக்கவே விரும்புவேன்.

– திவாகர். ஜெ
****

நூல் : தனித்த சொற்கள்
ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்
வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம்
பக்கங்கள் : 110
விலை : ₹ 130

– நன்றி: முகநூல் பதிவு

#எஸ்_ரா #எஸ்_ராமகிருஷ்ணன் #தனித்த_சொற்கள்_நூல் #thanitha_sorkal_book_review #Desanthiri_Pathippagam #S_Ramakrishnan #எஸ்_ராமகிருஷ்ணன்_கட்டுரை #தேசாந்திரி_பதிப்பகம் #S_Ra

Comments (0)
Add Comment