பிரபலங்கள் புகழாரம்!
சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 39 கோடி ரூபாய் செலவில் உலகத்தரம் வாய்ந்த நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.
அந்த வளாகத்திலேயே 15 அடி ஆழத்தில், பூமிக்கு அடியில் கருணாநிதியின் பிரமாண்டமான அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது.
நினைவிடம் மற்றும் அருங்காட்சியகம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அண்ணா மற்றும் கருணாநிதியின் உருவச் சிலைகளை திறந்து வைத்து, அவர்களது நினைவிடங்களில் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
’கலைஞர் உலகம்’ எனும் பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள மின்னணு அருங்காட்சியகத்தில், கருணாநிதியின் இளமைக் காலம் முதல், அவர் வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்வுகள், அவரது படைப்புகள், சந்தித்த போராட்டங்கள், தொடர்பான புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தில் மூன்று தியேட்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன.
திறப்பு விழா நிகழ்ச்சியின்போது, முதல் தியேட்டரில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் 20 நிமிடம் ஒளிபரப்பப்பட்டது.
’மன்னை எக்ஸ்பிரஸ்’ எனும் பெயரில் கட்டப்பட்டுள்ள ஏழு பரிமாண தியேட்டரில் கருணாநிதி கடந்த வந்த பாதை குறித்த குறும்படம் திரையிடப்பட்டது.
மூன்றாவது தியேட்டரில், கருணாநிதி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கருணாநிதி வாழ்க்கை வரலாற்றுக் குறும்படத்தின் சில காட்சிகளை பார்த்தபோது ஸ்டாலின் கண் கலங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
’இது, தாஜ்மஹால்..’
நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “மிகவும் அருமை – மிகவும் அற்புதம் – கலைஞரின் நினைவிடம் என்று சொல்வதை விட, கலைஞரின் தாஜ்மஹால் என்று சொல்லலாம். அவ்வளவு அருமையாக உள்ளது.
அருங்காட்சியகத்தின் ஒவ்வொரு இடமும் எனக்கு பிடித்திருக்கிறது. இது ஒரு கனவு உலகமாக எனக்குத் தோன்றுகிறது” என்று சிலாகித்தார்.
கருணாநிதி நினைவிடத்தை பார்வையிட்ட கவிஞர் வைரமுத்து தனது ’எக்ஸ்’தளத்தில் வெளியிட்டுள்ள கவிதை இது:
’கலைஞர் நினைவிடம் கண்டு சிலிர்த்தேன்,
கலைஞரின் கையை பிடித்துக்கொண்டே
கலைஞர் நினைவிடம் சுற்றி வந்த உணர்வு!
இது தந்தைக்கு தனயன் எழுப்பிய மண்டபல்ல
தலைவனுக்கு தொண்டன் கட்டிய தாஜ்மஹால்!
கருணாநிதி நினைவிடத்தை திறந்து வைத்த நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின், தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், ’’கருணாநிதி என்றாலே போராட்டம்.. அவரது போராட்டத்தின் இறுதி அடையாளம் தான் இந்த நினைவிடம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ள பதிவில், “தமிழினத்தின் உயர்வுக்கு ஓயாது உழைத்த தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடம் இன்று திறக்கப்பட்டிருக்கிறது. தமிழ் வானில் ஒளிவீசும் சூரியனாக நிலைத்துவிட்ட அவரது நினைவிடம் வண்ணங்களால் ஒளிர்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
– பி.எம்.எம்.
#அண்ணா #கருணாநிதி #முன்னாள்_முதலமைச்சர்_கருணாநிதி #மெரினா_கடற்கரை #முதலமைச்சர்_மு_க_ஸ்டாலின் #கலைஞர்_உலகம் #மன்னை_எக்ஸ்பிரஸ் #வைரமுத்து #தாஜ்மஹால் #ரஜினி_காந்த் #anna #kalaignar #cm_stalin #stalin #kalaignar_ulagam #mannai_express #vairamuthu #tajmahal #rajini #கலைஞர்_நினைவிடம் #kalaignar_memorial_building