சௌஃபின் ஷாகிர் – இயல்பான மனிதர்களைப் பிரதிபலிக்கும் கலைஞன்!

மலையாளத் திரையுலகில் இன்று தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்து நிற்பவர் சௌஃபின் ஷாகிர். ‘ஹீரோ, வில்லன், காமெடியன், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட், கேமியோ என்று ஒரு திரைப்படத்தில் தனது பங்களிப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும் கவனிக்கத்தக்கதாக இருக்கும் என்பதை வார்த்தைகளாக அல்லாமல் திரையில் உணர்த்துபவர்.

தற்போது வெளியாகியிருக்கும் ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ படத்திலும் அவர் ஏற்ற குட்டன் பாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. ஆனால், அது போன்றதொரு வரவேற்பை சௌஃபின் பெறுவது இது முதன்முறையல்ல; சமீப ஆண்டுகளில் அவர் நடித்த படங்களில் பெரும்பாலானவை, அவரைப் புகழேணியில் ஒரு படி மேலேற்றியவைதான்.

சினிமா பின்னணி!

சௌஃபின் தந்தை பாபு ஷாகிர் இயக்குனர் பாசிலிடம் உதவி இயக்குனராக, இணை இயக்குனராகப் பணியாற்றியவர். கிட்டத்தட்ட ‘லைன் புரொடியூசர்’ என்று சொல்லப்படுவதற்கு ஈடான ‘தயாரிப்பு கட்டுப்பாட்டாளராக’ப் பல படங்களில் இடம்பிடித்தவர். அதனால், சிறு வயதில் இருந்தே பரபரப்பு நிறைந்த படப்பிடிப்பு, சினிமா புகழ், நட்சத்திரக் கலைஞர்களின் அருகாமை போன்றவை சௌஃபினுக்குக் கிடைத்தன.

பள்ளி, கல்லூரிக் காலத்திலேயே தானும் சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் பெருகியது. ஆதலால், சித்திக் இயக்கிய ‘க்ரோனிக் பேச்சுலர்’ படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றத் தொடங்கினார். கல்லூரிப் படிப்பு, தேர்வு உட்படத் தனது கல்வி சார்ந்த அனைத்தையும் சினிமா சார்ந்த வேலைகளுக்கு நடுவே கவனித்துக் கொண்டார். அதுவே, அவரது முதல் கவனம் சினிமா மீதிருந்ததைச் சுற்றியிருந்தவர்களுக்கு உணர்த்தியது.

பாசில் தொடங்கி அமல் நீரட், சந்தோஷ் சிவன், ராஃபி மெக்கார்டின், ராஜிவ் ரவி, பி.சுகுமார், அன்வர் ரஷீத் என்று மலையாளத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்த இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகவும், இணை இயக்குனராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் சௌஃபின். கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக அது தொடர்ந்தது. அந்த அனுபவமே, ஒவ்வொரு இயக்குனரும் எப்படிப்பட்ட நடிப்பை நடிப்புக் கலைஞர்களிடம் எதிர்பார்க்கின்றனர் என்பதை அவருக்குப் புரிய வைத்தது.

சிறு வயதில் வியட்நாம் காலனி, காஃபூலி வாலா படங்களில் தோன்றிய சௌஃபின், உதவி இயக்குனராகப் பணியாற்றிய காலகட்டத்தில் சிறு பாத்திரங்களில் நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி ‘கையெத்தும் தூரத்’, ‘பாண்டிபடா’, ‘பாடிகார்டு’, ‘உருமி’ போன்ற படங்களில் தலைகாட்டினார்.

அதனை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்ற படம் ராஜிவ் ரவியின் ‘அன்னயும் ரசூலும்’. அந்த படத்தில், ரசிகர்கள் சௌஃபின் நடிப்பைக் கண்டு ரசித்தார்கள். பின்னாட்களில், ‘பிரேமம்’ படத்தில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அவரை நடிக்க வைக்கவும் அதுவே காரணமாக அமைந்தது. அந்தப் படத்தில், சௌஃபின் ஏற்ற விளையாட்டு ஆசிரியர் பாத்திரத்தின் வழியே அவரது நகைச்சுவை நடிப்பு சிலாகிக்கப்பட்டது.

பிடித்த நட்சத்திரம் யார்?

‘பிரமயுகம்’ படத்தில் மம்முட்டிக்கும் அர்ஜுன் அசோகனுக்கும் இடையே தனது இருப்பையும் அழுத்தமாக வெளிப்படுத்தியவர் சித்தார்த் பரதன். அவரும் ஒரு இயக்குனர் தான். அவரது இயக்கத்தில் ‘சந்திரேட்டன் எவிடயா’ படத்தில் நடித்தார் சௌஃபின் ஷாகிர். அது ஒரு நகைச்சுவைப் பாத்திரம். அந்தப் படத்தில் மட்டுமல்லாமல், படப்பிடிப்பிலும் கூட கலகலவென்று இருக்கும் இயல்புடையவர் சௌஃபின் என்பது சித்தார்த் பரதன் ஒரு பேட்டியில் பகிர்ந்த தகவல்.

அவரது இயல்பை அப்படியே தனது ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ படத்தில் எடுத்தாண்டிருந்தார் இயக்குனர் திலேஷ் போத்தன். அந்தப் படத்தில், கிரிஸ்பின் என்ற பாத்திரத்தில் சௌஃபின் நடித்திருந்தார்.

கடை முதலாளியின் வீட்டிற்குச் செல்லும் வேலையாளான கிரிஸ்பின், தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவரது மகளிடம் இயல்பாக உரையாடத் தொடங்குவார். ‘உனக்கு மோகன்லால் பிடிக்குமா, மம்முட்டி பிடிக்குமா’ என்று ஆரம்பிப்பார். அதில், பதின்ம பருவத்துப் பெண்ணிடம் முதன்முறையாகப் பேசும் ஒரு ஆடவனின் தயக்கம் எட்டிப் பார்க்கும். மெல்ல இருவரும் பழகத் தொடங்குவார்கள்.

இன்னொரு காட்சியில், தனது மகளைக் கிரிஸ்பின் காதலிக்கிறானோ என்ற சந்தேகத்தை அவரிடமே நேரடியாகக் கேட்பார் அந்த முதலாளி. அப்போது, ‘நான் உங்கள் மகளிடம் அப்படிப் பழகவில்லை’ என்பதை உணர்ச்சிக் கொந்தளிப்புடன் வெளிப்படுத்தியிருப்பார் சௌஃபின். அதில், ‘இப்படி யோசிக்க எப்படி மனம் வந்தது’ என்ற ஆதங்கத்தை வெளிக்காட்டிய விதம் அற்புதமாக இருக்கும்.

போலவே, ‘சார்லி’ படத்தில் துல்கர் சல்மான் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து திருடும் நபராகத் தோன்றியிருப்பார்.

நாயகனுக்கும் அப்பாத்திரத்திற்குமான நட்பு வெகு இயல்பாகத் திரையில் மலர்வதாகக் காட்டும் அப்படம். துல்கர் மட்டுமல்ல, மலையாளத் திரையுலகில் எந்தவொரு இளம் நட்சத்திரத்தோடும் சௌஃபினால் அப்படி நடித்துவிட முடியும். அந்த நெகிழ்வுத்தன்மை தான், ‘கம்மாட்டிப்பாடம்’ படத்தில் துல்கருடன் ஒரேயொரு சண்டைக்காட்சியில் மட்டும் அவரைத் தோன்றச் செய்தது.

2016க்குப் பிறகு அனுராக கரிக்கின் வெள்ளம், காம்ரேட் இன் அமெரிக்கா, மாயநதி, கார்பன் என்று குறிப்பிடத்தக்கச் சில படங்களில் இடம்பிடித்தார் சௌஃபின். அந்த காலகட்டத்தில் ‘பரவா’ என்ற படத்தை முதன்முறையாக இயக்கி நடித்தார்.

ஆனால், இயக்குனராகத் தொடர்ந்து செயல்பட முடியாத அளவுக்குத் தொடர்ந்து பல நடிப்பு வாய்ப்புகள் அவரை மொய்த்தன. அவற்றில் பல பிரதான பாத்திரங்களாக இருந்தன.

நாயக பாத்திரம்!

‘சூடானி ப்ரம் நைஜீரியா’வில் சௌஃபின் ஏற்ற மஜீத் பாத்திரம் பல்வேறு அடுக்குகளைக் கொண்டது. மொழியும் கலாசாரமும் அறியாத ஒரு வெளிநாட்டவரைத் தனது வீட்டில் தங்க வைத்துக்கொண்டு அவஸ்தைப்படும் ஒரு நடுத்தர வயது மனிதனின் கதையைச் சொன்னது. அதுவே அவர் நாயகனாக நடித்த முதல் படம்.

அது ரசிகர்களிடத்தில் உருவாக்கிய சலசலப்பே, ‘கும்பலாங்கி நைட்ஸ்’, ‘வைரஸ்’, ‘அம்பிலி’, ‘விக்ருதி’, ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ என்று தொடர்ந்து பல படங்களில் பிரதான பாத்திரங்களில் அவரை இடம்பிடிக்கச் செய்தது.

‘விக்ருதி’யில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் ஒருவர் அயர்ந்து தூங்குவதை மது போதை என்று தவறாக நினைத்துப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பும் வேலையைச் செய்யும் நபராகத் தோன்றியிருப்பார். இதில் பாதிக்கப்பட்டவராக சூரஜ் வெஞ்சாரமூடு ஒரு துருவத்தில் நின்று அசத்துவார் என்றால், இன்னொரு துருவமாக மாறிக் கலக்கியிருப்பார் சௌஃபின்.

கமர்ஷியல் வெற்றி தவிர்த்து இருள், சுருளி, இலவிழாப் பூஞ்சிறா, ஜின் போன்று விமர்சன ரீதியில் புகழப்பட்ட படைப்புகளிலும் தனது பங்களிப்பைத் தந்திருப்பார் சௌஃபின். அவற்றில் அவர் ஏற்று நடித்த பாத்திரங்கள் வெறுமையானதாக, வறட்சியானதாக, அதேநேரத்தில் மனித மனங்களில் நிறைந்திருக்கிற நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும்.

இடையே ‘பீஷ்மபருவம்’, ‘சிபிஐ: தி ப்ரெய்ன்’, ‘ஜாக் அண்ட் ஜில்’ படங்களில் சௌஃபின் நடிப்பு ரசிகர்களால் ‘ட்ரோல்’ செய்யப்பட்டது. இயக்குனர்கள் விவரித்தும் கூட, அந்தப் படங்களில் தனது பாத்திரத்தைச் சரிவரப் புரிந்துகொள்ளாததே அதற்குக் காரணம் என்று பின்னர் அவர் விளக்கமும் தந்தார்.

மேற்சொன்ன படங்களில் வெளிப்பட்ட அவரது திறமையே, எப்படிப்பட்ட கதையமைப்பை, கதாபாத்திர வார்ப்பை விரும்புகிறார் என்பதை உணர்த்தும்.

கூட்டத்தில் ஒருவன்!

‘ரோமாஞ்சம்’ படத்தில் கேரளாவில் இருந்து பெங்களூரு சென்று பணியாற்றும் இளைஞர்கள் சேர்ந்து தங்கியிருப்பதாகக் கதை அமைக்கப்பட்டிருக்கும். அந்த வீட்டில் பேய் இருப்பதாகவும், அது சொல்லும் தகவல்களைக் கேட்க ஒரு கூட்டத்தையே திரட்டுவதாகவும் திரைக்கதை நகரும். அதில், இளையோர் கூட்டத்தின் இடையே ‘முதிர் இளைஞனாக’ தோன்றியிருப்பார் சௌஃபின்.

வயதையும் மீறி இளையோரிடம் பாந்தமாகப் பழகும் பாங்கு அப்பாத்திரத்தில் நமக்குத் தென்படும். கிட்டத்தட்ட அதே தொனி ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ படத்திலும் உண்டு.கூட்டத்தில் ஒருவராக இருந்தாலும், அனைவரையும் மீறித் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அப்பாத்திரங்கள் வார்க்கப்பட்டிருக்கும்.

நாயகன் நாயகி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்வதற்கு, அவர்களிடையே ‘கெமிஸ்ட்ரி’ வேண்டும் என்று சினிமாவில் சொல்லப்படுவதுண்டு. போலவே, ‘சென்னை 600028’ போன்றதொரு படத்தில் அனைத்து இளைஞர்களும் கலாட்டாவும் கும்மாளமுமாக இருப்பதைச் சரியாகத் திரையில் காட்ட, அவர்களிடையே படப்பிடிப்புத் தளத்திலும் நட்புணர்வு இருந்தாக வேண்டும். அந்த விஷயத்தில் மிகவும் கவனம் காட்டுவது சௌஃபின் ஷாகிர் ஸ்டைல். அதுவே, சக கலைஞர்கள் கைத்தட்டல்களைப் பெறுவதற்கு இடம் தந்துவிட்டு, தனக்கு வேண்டிய பரப்பை நிறைத்துக்கொள்ளும் திறமையை அவரிடத்தில் வளர்த்தெடுத்திருக்கிறது.

குறுகிய காலத்திற்குள் ஐம்பது படங்களைக் கடந்து பயணிக்கும் சௌஃபின் ஷாகிர், மலையாளத் திரையுகில் இருக்கும் பெரும்பாலான இளம் இயக்குனர்களின் ‘குட்புக்’கில் இருக்கிறார். அதேநேரத்தில் முன்னணி நடிகர்களின் படங்களில் ‘ஈகோ’ பார்க்காமல் தன்னை வெளிக்காட்டும் பாத்திரங்களிலும் தலைகாட்டுகிறார். அந்த ‘சமநிலை’யே சௌஃபின் ஷாகிரை தொடர்ந்து திரையில் காணவும், திறன்மிக்க இயக்குனராக அடையாளம் காட்டவும் உதவும் என்று நம்பலாம்!

– உதய் பாடகலிங்கம்

#சௌஃபின்_ஷாகிர் #Actor_Soubin_Shahir #சௌஃபின்_ஷாகிர் #மஞ்சும்மள்_பாய்ஸ் #இயக்குனர்_பாசில் #க்ரோனிக்_பேச்சுலர் #அமல்_நீரட் #சந்தோஷ்_சிவன் #ராஃபி_மெக்கார்டின் #ராஜிவ்_ரவி #பி_சுகுமார் #அன்வர்_ரஷீத் #manjummal_boys #director_fasil #cronic_bachulor #amal_neerat #santhosh_sivan #rafi_mekarardin #rajiv_ravi #sugumar #anwar_rasheeth

Comments (0)
Add Comment