பொதுஜனப் பத்திரிகைக்குள் அதிகபட்ச சாத்தியம்!

எழுத்தாளர் மணாவுக்கு வண்ணதாசன் எழுதிய கடிதம்

****

குமுதத்தில் நான் (மணா) பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தீபாவளி மலர்களில் ஒன்றை இலக்கிய மலராகக் கொண்டு வந்தோம். அந்தக் குழுவில் நானும் இருந்தேன்.

பல எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்களின் பங்களிப்புடன் உருவான அந்த மலரில் சிறுகதை எழுதியிருந்தவர் மூத்த நண்பரான கல்யாண்ஜி என்கிற வண்ணதாசன்.

*****

அவர் எழுதிய கடிதம் இது.

அன்புமிக்க லட்சுமணனுக்கு (மணா),

வணக்கம்!

குமுதம் என்ன கிழமை வரும் என்பது கூடத் திருநெல்வேலியில் மறந்து போய்விட்டிருந்தது.

அப்பாவைப் பார்க்கப் போயிருந்தேன். அப்பா விகடன், குமுதம் மலர்களைப் படித்துக் கொண்டிருந்தார்.

“உன் கதை வந்திருக்கே இரண்டுலேயும்” என்று அப்பா சொன்னபோது, அப்பாவுக்கும் சந்தோஷம், எனக்கும் சந்தோஷம். ஆனால், இரண்டு பேருமே அதை காட்டிக் கொள்ளவில்லை.

அந்த சந்தோஷத்தை உங்களிடம்தான் காட்டிக்கொள்ள வேண்டும். என்னுடைய கதையை வெளியிட்டதற்காக மட்டுமல்ல.

மிகவும் சிரத்தையுடன், அதிகபட்ச சுதந்திரத்துடன், நேர்மையான அக்கறையுடன், ஒரு பொதுஜனப் பத்திரிகைக்குள் நிகழ்த்த முடியும் அதிகபட்ச சாத்தியத்துடன், உங்கள் பங்கைச் செலுத்தி இருக்கிறீர்கள்.

மனப்பூர்வமான பாராட்டுக்கள்.

என்னுடைய சிறுகதை இதைவிட நன்றாக இருந்திருக்கலாம். ஒன்பது மாதங்களுக்கு அப்புறம் எழுதின கதை.

அடைத்துப்போட்ட கதவை திறந்தால் முகத்தில் அடிக்கிற புழுங்கின காற்று மாதிரி இது. வெளிக்காற்று உள்வர உள்காற்று வெளிச்செல்கையில் சுவாசம் மூக்கை நெருடாது. மூச்சுவிடுவதும் இயல்பாக இருக்கும்.

குடும்பத்தினருக்கு அன்பைச் சொல்லுங்கள்.

  • கல்யாண சுந்தரம் (வண்ணதாசன்)

#வண்ணதாசன் #கல்யாண_சுந்தரம் #kalayana_sundaram #kalyan_ji #vanna_dhasan #air #kaatru #காற்று #vannadhasan #கல்யாண்ஜி

Comments (0)
Add Comment