ஜெயகாந்தனுக்குக் கிடைத்த சிறந்த திரைக்கதைக்கான விருது!

ஜெயகாந்தனின் சாகித்ய அகாதமி விருது பெற்ற தினமணி கதிரில் தொடராக வந்த ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலை திரைப்படமாக்க பிரபல இயக்குநர் பீம்சிங் விரும்புவதாக அவரது புதல்வர் இருதயநாத், எழுத்தாளர் பூவண்ணன் இருவரும் ஜெயகாந்தனை சந்தித்தனர். அப்போது பீம்சிங் பிசியான வேறு பட வேலைகளில் இயங்க வந்தார்.

பொதுவாக பீம்சிங் இயக்கத்தில் உருவாகும் படங்களுக்கு திரைக்கதை வடிவத்தை அவரேதான் அமைப்பார். அப்படியே சி.நே.சி. மனிதர்கள் திரைக்கதையை அவரே உருவாக்கட்டும் என்று ஜெ.கே. அதன் நூல் பிரதியை கொடுத்து,

“இதோ, இப்போது எடுத்து கொடுத்ததுபோல் தான் நான் உங்களுக்கு கதையை கொடுத்து உதவி செய்ய முடியும். இதை நீங்களோ அல்லது நீங்கள் விரும்புகிற வேறு யாரையேனும் வைத்தோ திரைக்கதை வசன வடிவமைப்பை எழுதிக் கொள்ளுங்கள்.

ஆனாலும் படம் எடுக்கிறபோது எப்படி எப்படியெல்லாம் எடுக்கிறீர்கள் என்பதை நான் அறிந்து கொள்வதற்கும், அதில் என்ன சேர்க்கலாம், என்ன சேர்க்கக்கூடாது என்பதற்கு என் யோசனைகளை அனுமதித்தும், இறுதியாக இந்தப் படம் சிறப்பாக இருக்கிறது என்று நான் சொல்வதற்கு இடம் வைத்தும் நீங்கள் படம் எடுத்துக் கொடுங்கள்” என்று பீம்சிங்கிடம் கூறினார்.

அவரும் ஜெ.கே.யின் வற்புறுத்தலுக்கு அவரது சுருத்துக்கு மறுப்புச் சொல்லி அவரை சமாதானப்படுத்தாமல் கதையை மிகுந்த நம்பிக்கையோடு அவர் வசம் ஜெ.கே. ஒப்புவித்ததை போன்றே அதைப் பெற்று கொண்டு போனார்.

யார் யாரோ அதற்கு திரைக்கதை அமைப்பை எழுதிப் பார்த்தார்கள். சரி வரவில்லை. இறுதியில் ஜெயகாந்தனை திரைக்கதை வசனம் ஆக்கித் தர கேட்டார்.

இயக்குநர் பீம்சிங்கின் உதவியாளர்களுடன் உட்கார்ந்து ஜெ.கே. சொல்லச் சொல்ல திரைக்கதை வடிக்கப்பட்டது. படமும் எடுக்கப்பட்டது. படம் வெளியான பின் பீம்சிங் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

”ஒரு மனிதனுக்கு முதுகெலும்பு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் ஒரு திரைப்படத்துக்கு திரைக்கதையமைப்பு. இதை இத்துறையில் இருக்கும் பெரும்பாலோர் செய்வதில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏன், நானே கூட இந்த ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ கதைக்குத் திரைக்கதை அமைக்க திரு.ஜெ.கே. அவர்கள் எடுத்துக் கொண்ட உழைப்பையும், நேரத்தையும் போல, என்னால் உருவாக்கப்பட்ட மற்றத் திரைப்படத்துக்கு எடுத்துக் கொண்டேனா என்றால், இல்லை என்றுதான் என் மனசாட்சி பதில் சொல்லும்” என்றதோடு ”இத்திரைக்கதை ஸ்கிரிப்ட்-ஐ என் பூஜையறையில் வைத்திருக்கிறேன்” என்றார்.

“திரு.ஜெ.கே. அவர்கள் நமது திரைப்படத் துறைக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் என்று துணிந்து சொல்வேன்.

அவரைப் போன்ற எழுத்தாற்றல் உள்ளவர்கள் கிடைத்துவிட்டால், தழுவல் இல்லாமல், நகல் இல்லாமல் ஒரிஜினலாகவே தமிழ்ப் படங்களை தயாரிக்கலாம்.

அதன் வாயிலாகத் தமிழ்ப்பட உலகம் தலைநிமிர்ந்து ராஜநடை போடலாம் என்பதில் சந்தேகமே இல்லை” என்று குறிப்பிடுகிறார்.

இந்தத் திரைக்கதை பின்னர் நூல் வடிவமும் பெற்றது. தமிழ்த் திரைப்பட உலகில் திரைக்கதை வடிவம் கொண்ட முதல் நூலும் இதுவே.

இதில் ஒவ்வொரு காட்சியும் எப்படி அமைய வேண்டும் என்பதை, “L.S.ஷாட் ; E.L.C.U. எக்ஸ்ட்ரா லார்ஜ் க்ளோஸ் அப் ; C.U. க்ளோசப் ; C.S. க்ளோஸ் ஷாட் ; C.M.S. க்ளோஸ்-மிட்-ஷாட், M.S. மிட் ஷாட், M.L.S.மிட்-லாங்-ஷாட்; E.L.S. எக்ஸ்டிரா லாங் ஷாட்” என ஒவ்வொரு காட்சிக்கும், திரைக்கதையோடு பின்னி பிணைந்து வடித்திருப்பார்.

இப்படி நுணுக்கமாக பிறிதொரு திரைக்கதை வடிவ நூல் வந்துள்ளது என்பது ஐயத்துக்குரியதே!

இதில் ஸ்ரீகாந்த், லட்சுமி சிறப்பாக நடித்திருந்தனர். லட்சுமிக்கு ஊர்வசி விருதும் கிடைத்தது. சிறந்த திரைக்கதைக்கான விருது ஜெயகாந்தனுக்கு வழங்கப்பட்டது.

– ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கோ.எழில் முத்து எழுதிய  ‘எழுத்து நாயகன் ஜெயகாந்தன்’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.

****

எழுத்து நாயகன் ஜெயகாந்தன்
கோ.எழில் முத்து
சத்யா பதிப்பக வெளியீடு
விலை: ரூ. 350/-
தொடர்பு எண்: 044 45074203

#கோ_எழில்_முத்து #ஜெயகாந்தன் #சில_நேரங்களில்_சில_மனிதர்கள் #இயக்குநர்_பீம்சிங் #எழுத்தாளர்_பூவண்ணன் #சி_நே_சி #ஜெ_கே_ #ஸ்ரீகாந்த் #லட்சுமி #ezhilmuthu #jayakanthan #sila_nerangalil_sila_manithargal #director #bheem_singh #writer_poovannan #si_ne_si #jk #sri_kanth #lakshmi

Comments (0)
Add Comment