குணா படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல் உங்களில் எத்தனை பேருக்குப் பிடிக்கும்.
அப்பாடல் காட்சியில் இடம்பெற்ற கமல், ரோஷிணியின் நடிப்பும், பின்னணியில் பயமுறுத்தும் பாறைகள் நிரம்பிய அந்தக் குகையும் உங்கள் மனதை நிறைத்திருக்கும் சதவிகிதம் எத்தனை?
சரி, இதுவரை அந்தப் பாடலைப் பார்க்கவில்லை என்றால், இப்போது அதனை ரசிக்கத் தயாராக இருக்கிறீர்களா? அப்படியென்றால், சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ படத்தையும் நீங்கள் கண்டு ரசிக்கலாம். ஏன் அப்படி?
‘மஞ்சும்மள் பாய்ஸ்’ஸின் மொத்தக் கதையும் கொடைக்கானலில் உள்ள அந்த குணா குகையைச் சார்ந்தே அமைந்துள்ளது.
2006-ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த ஒரு இளைஞர் அதிலுள்ள குழிக்குள் விழுந்ததும், மிகுந்த பிரயத்தனங்களுக்குப் பிறகு அவர் உயிரோடு மீட்கப்பட்டதும், அவ்வட்டாரத்தில் பேசுபொருளானது. அந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவியே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் ஸ்ரீநாத் பாசி, சௌஃபின் ஷாகிர், பாலு வர்கீஸ், கணபதி, ஜீன் பால் லால், தீபக் பரம்போல், காலித் ரஹ்மான், சந்து சலீம்குமார் மற்றும் தமிழ் நடிகர்களான ஜார்ஜ் மரியான், ராமச்சந்திரன் துரைராஜ் உட்பட மூன்று டஜனுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் முகம் காட்டியிருக்கின்றனர்.
ஷிஜு காலித் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.
சரி, இந்தப் படத்தின் காட்சியாக்கம் நம்மை வசீகரிக்கிறதா?
ஒருவனின் மறுபிறப்பு!
எர்ணாகுளம் அருகேயுள்ள மஞ்சும்மள் எனும் ஊரைச் சேர்ந்த இளைஞர் கூட்டமொன்று கிளப் ஒன்றை நடத்தி வருகிறது.
20 முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் அதில் அங்கம் வகிக்கின்றனர். அவர்கள் இரண்டாகப் பிரிந்து அடிக்கடி மோதிக் கொள்கின்றனர்.
அதில் ஒரு குழுவினர் மூணாருக்குச் சுற்றுலா சென்று வருகின்றனர். அதற்குப் போட்டியாக, இன்னொரு குழு கொடைக்கானலுக்குச் செல்கிறது.
மது போதையும் கூத்தும் கும்மாளமுமாக அவர்களது ‘ட்ரிப்’ அமைகிறது. அந்தப் பயணத்தின் இறுதியில் அவர்கள் கொடைக்கானலில் உள்ள குணா குகை எனப்படும் ‘டெவில்’ஸ் கிச்சனுக்குச் செல்கின்றனர்.
அங்கு தடை விதிக்கப்பட்டுள்ள இடத்திற்குள் அத்துமீறி நுழைகின்றனர். காரணம், குணா படத்தில் வரும் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல் படம்பிடிக்கப்பட்ட இடம் அது என்பதே.
குரல் எதிரொலித்து பலமுறை ஒலிக்கும் அந்த குகை அவர்களை ‘மதம்’ பிடித்தவர்கள் போன்று ஆக்குகிறது. கத்திக் கூச்சலிட்டு அனைவரும் ஜாலியான மனநிலையில் இருக்கின்றனர்.
எல்லாமே சுபமாகச் சென்று கொண்டிருக்கும் நிலையில், அவர்களில் ஒருவரான சுபாஷ் திடீரென்று கீழே சரிகிறார். அது 900 அடி ஆழம் உள்ள ஒரு பள்ளம்.
பாறை இடுக்குகள் அதிகம் கொண்ட அந்த குழிக்குள் விழுந்த சுபாஷிடம் இருந்து எந்தச் சலனமும் இல்லை. அப்போதுதான், அவரது நண்பர்கள் விபரீதத்தை உணர்கின்றனர்.
சுபாஷைக் காப்பாற்ற என்னென்னவோ செய்து பார்க்கின்றனர். பலனில்லை. முடிவில் வனத்துறை காவலரைத் தேடுகின்றனர். காவல்நிலையம் சென்று புகார் கொடுக்கின்றனர். உள்ளூர்க்காரர்கள் உதவிக்கு வருகின்றனர். அந்த குழிக்குள் விழுந்த நபர் உயிரோடிருப்பது கடினம் என்ற பேச்சு மட்டுமே அதன் முடிவாக அமைகிறது.
இந்தச் சூழலில், சில நிமிடங்களுக்குப் பிறகு சுபாஷ் ஈனஸ்வரத்தில் கத்துவது அவர்களுக்குக் கேட்கிறது. அதன்பிறகு தீயணைப்புப் படையினர் அங்கு வரவழைக்கப்படுகின்றனர்.
ஆனால், அந்த குழிக்குள் விழுந்த எவருமே இதுவரை உயிர் பிழைத்ததில்லை எனும் தகவல் அப்படையைச் சேர்ந்த பணியாளர்களிடம் தயக்கத்தை விதைக்கிறது.
யாரும் குழிக்குள் இறங்கத் தயார் இல்லை எனும்போது, சுபாஷின் நண்பர்களின் வயது மூத்தவரான குட்டன் (சௌஃபின் ஷாகிர்) அதனுள் இறங்குகிறார்.
அவர் சுபாஷை மீட்டாரா? அங்கு என்ன நடந்தது என்பதைச் சொல்கிறது ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ஸின் மீதி.
சுபாஷும் குட்டனும் எப்படிப்பட்ட இயல்புடையவர்களாகச் சிறு வயதில் இருந்தனர் என்பது இத்திரைக்கதையின் ஊடே சொல்லப்படுகிறது. அதுவே பின்பாதியைக் கலையம்சமிக்கதாக மாற்றுகிறது.
சிறப்பான காட்சியாக்கம்!
இதில் மையப்பாத்திரத்தை ஏற்ற ஸ்ரீநாத் பாசி, சௌஃபின் ஷாகிர் முதல் சில நொடிகள் வரும் ஷாட்களில் இடம்பெற்றவர்களும் கூட அற்புதமான நடிப்பைத் தந்துள்ளனர்.
அவர்களில் அந்த குகைக்குள் அத்துமீறுபவராகவும், கிளைமேக்ஸில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்துபவராகவும் வரும் சந்து சலீம்குமார் நம்மை ஈர்க்கிறார்.
போலவே அடிக்கடி சண்டையிட்டுக்கொள்ளும் சகோதரர்களாக நடித்துள்ள ஜீன் பால் லால் மற்றும் பாலு வர்கீஸும் நம்மை வசீகரிக்கின்றனர்.
இந்தக் கதையில் ஜார்ஜ் மரியான், ராமச்சந்திரன் துரைராஜ் ஏற்ற தமிழர் பாத்திரங்கள் கண்ணியமாகக் காட்டப்பட்டுள்ளன.
ஒளிப்பதிவாளர் ஷிஜு காலித்தின் கேமிரா பாறை இடுக்குகளில் புகுந்து புறப்படுகிறது என்றால், தயாரிப்பு வடிவமைப்பாளர் அஜயன் சலிசேரி அந்த இடம் எப்படியிருக்கும் என்று வடிவமைத்த வகையில் நம் மனம் கவர்கிறார்.
ஒரு ஷாட் கூட அதிகப்படியானது இல்லை எனும்படியாகத் தொகுத்திருக்கிறார் எடிட்டர் விவேக் ஹர்ஷன்.
பல இடங்களில் ‘குணா’வில் பிரவாகமெடுத்த இளையராஜாவின் இசை நிறைந்துள்ளது. முக்கியமான திருப்பமொன்றில் ‘மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல’ எனும் கமலின் குரல் அவரது இசையுடன் வெளிப்படும்போது மயிர்க்கால்கள் சிலிர்க்கின்றன.
அதுபோக, மீதமுள்ள இடங்களில் தனது பின்னணி இசையால் திரைக்கதைக்கு உயிரூட்டியிருக்கிறார் சுஷின் ஷியாம். இன்னும் ஒலி வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, டிஐ, விஎஃப் எக்ஸ் என்று இதில் சிலாகிக்கப் பல அம்சங்கள் உண்டு.
இந்தப் படத்தில் பெரும்பாலான பிரேம்களில் நான்கைந்துக்கும் மேற்பட்ட கலைஞர்களே இடம்பெற்றுள்ளனர். கூட்டமாக அவர்கள் இருந்தாலும் கூட, ஒவ்வொருவரும் தனிமனிதர்களாக அபிநயிப்பது அழகு.
அதுவே, கதை நிகழும் களங்களுக்கு நாமே நேரில் சென்ற உணர்வை உருவாக்குகிறது.
போலவே, கதாபாத்திரங்களின் இயல்பு மிக நுணுக்கமான மாற்றங்களைச் சந்திப்பதையும், அதிலிருந்து மீண்டு பழைய நிலைக்குத் திரும்புவதையும் மிக லாவகமாகத் திரையில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் சிதம்பரம்.
படத்தின் சிறப்பு!
இந்த படத்தில் சில காட்சிகளில் மது அருந்துவதாகக் காட்டப்பட்டுள்ளது. கூடவே ‘வெள்ளம் அடிச்சோடு’ என்பது போன்ற வசனங்களும் கூட வருகின்றன. அதனைத் தவிர, இதில் முகம் சுளிக்கும்படியான, அபத்தமான, துருத்தலான, எரிச்சலூட்டுகிற காட்சிகள் இல்லை.
கொடைக்கானல் அழகை அள்ளிப் பருகும்விதமாக இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஒரு மாண்டேஜ் காட்சியும் கூட இதிலுண்டு.
இளைஞர்கள் அனைவரும் கொடைக்கானல் செல்ல முடிவெடுப்பதும், அந்த பயணத்தின்போது தடுப்பு இடப்பட்டுள்ள இடத்திற்குள் அத்துமீறிப் பிரவேசிப்பதும் சிறியளவிலான திருப்பங்கள் என்றால், மையப் பாத்திரம் அந்த குழிக்குள் விழுவதுவே திடுக்கிடும் திருப்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு, அந்த நபரை வெளியே அழைத்து வர எடுக்கும் முயற்சிகளும் அதில் ஏற்படும் பின்னடைவுகளும், இறுதியாக அவர் மீட்கப்படுவதும் நம்மை இருக்கையின் முனையில் இருத்துகின்றன.
திரைக்கதையின் தொடக்கத்தில், பழனிக்குச் செல்லும் கேரளவாசிகளில் ஒருவர் தமிழ் பத்திரிகையொன்றில் வந்த செய்தியைப் பார்த்துப் பதைபதைத்து ஊர் திரும்புவதாகக் காட்டப்பட்டிருக்கும்.
அது நம் மனதில் ஆயிரம் கேள்விகளையும் கதைகளையும் உருவாக்கும். அவற்றைத் தவிடுபொடியாக்கி வேறு திசையில் கதையை நகர்த்தியிருக்கும் இயக்குனர் சிதம்பரமும் அவரது குழுவினரும் பாராட்டுக்குரியவர்கள்.
‘மஞ்சும்மள் பாய்ஸ்’ படமானது இளமையின் துடிப்பில் எல்லை மீறுபவர்களுக்கான பாடமாக இருப்பதோடு, அப்படிப்பட்டவர்கள் நட்புக்காக எப்படிப்பட்ட எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கான உதாரணமாகவும் உள்ளது.
உண்மைச் சம்பவமொன்றைத் தழுவி அது அமைந்துள்ளது என்பதே இதன் பெருஞ்சிறப்பு.
‘த்ரில்’ என்பதையும் தாண்டி, எந்தவொரு கட்டத்திலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது எனும் பாடத்தைச் சொல்லித் தந்த வகையில் ‘சர்வைவல் த்ரில்லர்’ வகையறாவைச் சேர்ந்த ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ நம்மை நிச்சயம் வசீகரிக்கும்!
– உதய் பாடகலிங்கம்