அடுத்து யார் பிரதமராக வருவார்?

– பிரசாந்த் கிஷோர் கணிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பல விநோதமான பேச்சுகளைப் பொதுவெளியில் கேட்க வேண்டியிருக்கிறது.

செய்தியாளர்கள் சந்திப்புகளிலும் சிலர் தலைப்புச் செய்தியாக வெளிவர வேண்டும் என்பதற்காகவே பஞ்ச் டயலாக் போல ஆவேசமாகப் பேசுகிறார்கள்.

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர்கள், உடன் பங்கேற்பவர்களுக்கு பிளட் பிரஷரை கூட்டுகிறபடி சூடாகப் பேசுகிறார்கள். இவை தவிர தனித்த நேர்காணல்களும் வெளிவந்து கவனம் பெற ஆரம்பித்திருக்கின்றன.

அண்மையில் தந்தி தொலைக்காட்சியில் அப்படியொரு நேர்காணலில் பேட்டி  கண்டவர் ஹரிகரன். பேட்டி கொடுத்தவர் பிரபல தேர்தல் வித்தகரும், ஆய்வாளருமான பிரசாந்த் கிஷோர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்டது அந்த நேர்காணல்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தான் மீண்டும் பிரதமராக வருவார் என்று கணித்தவர், எதிர் வரிசையில் இருக்கும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் சிதறிக் கிடந்து வலுவிழந்து இருப்பதையும் குறிப்பிட்டார்.

எழுபதுகளில் இறுதியில் நெருக்கடி நிலை காலக்கட்டத்தில் பிரதமராக இருந்த இந்திராகாந்தியின் செயல்பாடுகள் போலவே மோடி வெற்றிபெற்ற பிறகும் அதேமாதிரி அமையும் என்றார்.

காங்கிரஸ் உள்ளிட்டக் கட்சிகள் மக்களிடம் நெருங்கி நன்மதிப்பைப் பெற்றால்தான் எதிர்காலத்தில் மோடியை எதிர்கொள்ள முடியும்.

தென்மாநிலங்களில் ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மட்டும்தான் பாரதிய ஜனதாக் கட்சி வளராத நிலையில் இருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வருவதற்கான வியூகத்தை வகுத்துக் கொடுத்தாலும் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, தான் எந்த விதத்திலும் தலையிடவில்லை என்றார்.

“தேர்தலின்போது கலைஞரின் மகன் என்பதைவிட ஸ்டாலின் என்கிற பெயரையும் தனிமனிதரையும் நாங்கள் பிரச்சாரத்தில் முன் நிறுத்தினோம்.

திமுக மூத்த தலைவர்கள்கூட சற்று தயங்கினார்கள். அதையும் மீறி ஸ்டாலின் என்கின்ற பெயரை தமிழ்நாடு முழுக்க எடுத்துச் சென்றோம். அதற்குரிய அங்கீகாரம் கிடைத்தது.

ஆனால், திமுகவிற்கு கிடைத்த அந்த வெற்றிக்கு நாங்கள் மட்டுமே காரணமல்ல. திமுக என்கின்ற இயக்கத்திற்கு மக்களிடமும் தொண்டர்களிடம் இருந்த மதிப்பு, நாற்பது ஆண்டுகாலமாக ஸ்டாலினுக்கு அரசியிலில் இருந்த முன் அனுபவம், தேர்தலை அவர் எதிர்கொண்ட விதம் என்று திமுகவின் வெற்றிக்குப் பல காரணங்கள்.

தற்போதைய முதல்வரான ஸ்டாலின் தனித்து முடிவு எடுக்கிறாரா? அல்லது பிறர் எடுக்கிற முடிவுக்குக் கட்டுப்படுகிறாரா? என்று சிலர் கேட்கிறார்கள். இது ஸ்டாலினைப் பற்றி அறியாதவர்கள் பேசுகிற பேச்சு.

தேர்தல் காலத்தில் அவருடன் நாங்கள் பணியாற்றியபோது எந்தவொரு முடிவையும் அவரேதான் எடுத்தார் என்பதை நாங்கள் அறிவோம்.

அதேசமயம் அவர் யாரிடமும் அதிகம் பேசிக்கொள்ள மாட்டார். தற்போது அவரது ஆட்சி நல்ல விதமாக நடந்து கொண்டு இருக்கிறது.

அதிமுக தலைவரான எடப்பாடி பழனிசாமியையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அவர் திமுகவிற்கு  டஃப் பைட் கொடுத்தார்.

திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே மூன்று சதவிகித அளவுக்கே வாக்கு வித்தியாசம் இருந்தது.

தற்போது அதிமுக அணியில் சில பிளவுகள் இருந்தாலும்கூட அதைக் குறைத்து மதிப்பிட முடியாது என்றே நினைக்கிறேன்.

அதிமுக, திமுக என்று இரண்டு கட்சிகளுமே மாறி மாறி தமிழ்நாட்டை ஆண்டுகொண்டு இருக்கின்றன. மக்கள் இந்த இரண்டுக் கட்சிகளுக்கும் எதிரான ஒரு மாற்றை விரும்புகிறார்கள்.

விஜயகாந்த் உட்பட சிலர் பத்து சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகளைப் பெற்றிருந்தாலும்கூட  விரைவில் அதிலிருந்து சரிந்துவிட்டார்கள்.

தற்போது பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்து கொண்டிருக்கிறது. அண்ணாமலையுடன் நான் நெருங்கிப் பழகாமல் இருந்தாலும்கூட அவர் தமிழக பாஜகவை முன் இருந்ததைவிட வளர்த்து எடுத்து இருக்கிறார்.

எப்படியும் நடக்கவிருக்கும் தேர்தலில் பத்து சதவிதத்திற்கு மேல் பாஜகவின் வாக்கு சதவிகிதம் உயரும் என்று நினைக்கிறேன்.

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக இரண்டுக் கட்சிகளும் சேர்ந்து பெரும் வாக்கு வங்கியின் சதவிகிதம் 60-க்கும் கீழே குறைந்துவிடும் என்று நம்புகிறேன்.

விஜய் தற்போது துவக்கி இருக்கிற கட்சியை சரியான முறையில் வழிநடத்திக் கொண்டு சென்றால் 2026-ல் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு உரிய வாய்ப்பு கிடைக்கலாம்.

அதற்காக நான் அவரோடு இணைந்து தேர்தல் வியூகத்தில் எல்லாம் பங்கேற்க மாட்டேன்.

நான் இப்போது கவனம் செலுத்திக்கொண்டு இருப்பது பீகார் மாநிலத்தை மட்டும்தான்.

தற்போதைக்கு அந்த மாநிலத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவது ஒன்றே எனது நோக்கம்.”

இப்படி பல அரசியல் சார்ந்த நிகழ்வுகளை, எதிர்பார்ப்புகளை விவரித்துக் கொண்டே போனார் பிரசாந்த் கிஷோர்.

– நன்றி: தந்தி தொலைக்காட்சி

Comments (0)
Add Comment