-கமல்ஹாசன் ஆவேசம்
மக்கள் நீதி மய்யத்தின் ஏழாம் ஆண்டு துவக்க விழா, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது தொண்டர்களின் மேளதாள வரவேற்புடன் கட்சியின் கொடியை ஏற்றி இனிப்புகளை வழங்கிய கமல், கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல சோகத்தில் அரசியலுக்கு வந்தவன். என் மக்களுக்கு இப்படி நடக்கலாமா என்ற கேள்வியின் அடிப்படையில் அரசியலுக்கு வந்தவன் நான்.
என்னுடைய கட்சிக்காரர்கள் உட்பட அனைவரும் என்னிடம் ஒரு கேள்வியை முன்வைக்கின்றனர்.
நீங்கள் சினிமாவில் நடிக்கப் போகிறீர்கள் அதனால் நீங்கள், முழு நேர அரசியல்வாதி இல்லை என மற்றவர்கள் கூறுகின்றனர். முழுநேர அரசியல்வாதி என்பவர் யார்? முழு நேர அரசியல்வாதி என்று ஒருவனும் கிடையாது.
உங்கள் அன்புக்கு நான் இன்னும் கைமாறு செய்யவில்லை என்பதால்தான் அரசியலுக்கு வந்தேன்.
சினிமாவில் நடித்துவிட்டேன், வரி கட்டி விட்டேன், எனக்கு என்ன தெரியுமோ அதைச் செய்துவிட்டேன், என் கடமை முடிந்துவிட்டது என நான் போக முடியாது.
கட்சிக் கொடியிலிருந்து சாப்பிடும் உணவு வரை எல்லாம் என் வருமானத்தில் வந்தது. இவர் என்ன திமிராகப் பேசுகிறார் என்பார்கள் இது பெரியார் இடம் இருந்து வந்த திமிறு.
தேர்தலின்போது தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய 95 லட்சம் ரூபாய் தொகையை மட்டும் செலவு செய்தால் என்னவாகும் கோவை தெற்கு தொகுதியில் எனக்கு நடந்தது தான் ஆகும்.
கோவை தெற்கு தொகுதியில் 1,728 எண்ணிக்கையிலான ஓட்டு வித்தியாசத்தில் நான் தோற்றது தோல்வி அல்ல, 90 ஆயிரம் பேர் ஒட்டு போட வில்லை அதுதான் காரணம்.
இன்னும் சொல்ல வேண்டுமானால் இந்தியாவில் 40 சதவீதம் பேர் ஒட்டு போடவில்லை. ஆக என்னைக் கேட்பதை விட ஓட்டுப்போடாதவர்களைக் கேளுங்கள்.
நான் அரசியலுக்கு வருவது கடினம் என்றார்கள் ஆனால் அதைவிடக் கடினம் என்னை அரசியலை விட்டுப் போக வைப்பது.
என்னுடைய எஞ்சிய வாழ்நாள் முழுவதும் மக்களுக்கானது என எண்ணிய என்னை, மக்கள் தூக்கிப் பிடித்தாக வேண்டும்.
ஆனால் நீங்கள் வாக்களிக்காமல் வீட்டில் உள்ளீர்கள். என்னுடைய அரசியல் பயணம் என்பது ஆரம்பித்துவிட்டது, தொடர்ந்து அழுத்தமாக நடைபோட்டுக் கொண்டே இருப்பேன் இந்த அரசியல் வேறு.
நீங்கள் நினைக்கும் அரசியல்வாதிகள், அரசியல்வாதிகள் அல்ல வியாபாரிகள். விவசாயிகளுக்குத் தமிழ்நாடு செய்ததில் பத்து சதவீதம் கூட மத்திய அரசு செய்யவில்லை.
நாட்டை படையெடுக்கும் எதிரிப் படைகள் போல டெல்லியில் விவசாயிகள் வரவேற்கப்படுகிறார்கள்.
அதிக வருமானம் கொடுப்பதில் தமிழ்நாடு முதல் மூன்று இடத்தில் இருக்கும் ஆனால் நாம் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் பைசா தான் திரும்பி வருகிறது. ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் வாங்கிவிட்டு 50 லட்சம் ரூபாயை இழக்கிறீர்கள்” என்று பேசினார்.