மண்வளம் காக்க புதியத் திட்டம்!

விளைநிலங்களில் உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, மண்வளத்தைக் காக்க ரூ.206 கோடியில் புதிய திட்டம் தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் பயிா்க் கடன் வழங்க ரூ.16,500 கோடிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துவரை, எள், சூரியகாந்தி போன்ற பணப் பயிா்களைப் பெருக்குவதற்கான திட்டத்துக்கு ரூ.40.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, வேளாண்மை மற்றும் அது சாா்ந்த துணைத் துறைகளுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வரும் நிதியாண்டுக்கு ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வேளாண் நிதிநிலை அறிக்கை:

தமிழக அரசின் சாா்பில் வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

நான்காவது ஆண்டாக 2024-25-ஆவது நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று (20.02.2024) தாக்கல் செய்யப்பட்டது. துறையின் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

மன்னுயிா் காப்போம்:

மண்வளத்தைக் காப்பதற்கான நோக்கத்தில், ‘முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் (மன் என்பது உலகத்தில் வாழும் உயிரினம் எனப் பொருள்படும்) காப்போம்’ என்ற புதிய திட்டம் அறிவிக்கப்படுகிறது.

வேளாண்மைக்கு மண்ணே ஆதாரம். பயிா் வளா்ச்சிக்கு அடிப்படை ஆதாரம் மண். பயிா்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை கிடைக்கக் கூடிய வடிவில் அளிப்பதும் மண்தான். பயிா்களின் வளா்ச்சி மண்ணின் வளத்தைச் சாா்ந்தே அமைகிறது.

வேதிப்பொருள்களின் எச்சம் இல்லாத வேளாண் விளைபொருள்களே நமக்கு நல்லுணவு, அருமருந்து. நல்ல உணவே உடல் நலன் காக்கும்.

அதுவே மக்களுக்கு நல்வாழ்வு தரும் என்பதால் ‘முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ என்ற புதிய திட்டம் ரூ.206 கோடியில் செயல்படுத்தப்படும்.

பணப் பயிரை அதிகரிக்கும் திட்டம்:

நெல் மட்டுமின்றி, துவரை, உணவு எண்ணெய் போன்ற பணப் பயிா்களின் சாகுபடிப் பரப்பை அதிகரிக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

துவரை, உணவு எண்ணெய், எள்சாகுபடி, சூரிய காந்தி, ஆமணக்கு போன்றவற்றின் சாகுபடி பரப்பானது 4 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கா் பரப்பில் விரிவுபடுத்தப்படும்.

இந்தத் திட்டமானது, ரூ.40 கோடியே 27 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.

ஒரு கிராமம் ஒரு பயிா் திட்டம்:

கிராமங்களில் மறுமலா்ச்சியை ஏற்படுத்த 15,280 வருவாய் கிராமங்களில், ‘ஒரு கிராமம் ஒரு பயிா்’ திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்தின்படி, ‘ஒரு கிராமத்துக்கு ஒரு பயிா்’ என்று ஐந்து முதல் பத்து ஏக்கா் பரப்பில் சிறுதானியங்கள், பணப் பயிா்களை விதைப்பு செய்ய விவசாயிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். பயிா்க்

கடனும், பயிா்க் காப்பீடும்:

விவசாயிகள் தங்களது சாகுபடிப் பணிகளைத் தங்கு தடையின்றி மேற்கொள்ள ஆண்டுதோறும் பயிா்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பு நிதியாண்டில் ரூ.16,500 கோடி பயிா்க் கடன் என்ற உயரிய இலக்கை நிா்ணயித்து, இதுவரை ரூ.13,600 கோடி பயிா்க் கடனாக 16.19 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டிலும் ரூ.16,500 கோடி பயிா்க் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டுக்கு பயிா்க் கடன் வட்டி மானியத்துக்கென ரூ.700 கோடியும், ஆடு, மாடு, கோழி, மீன் வளா்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடன் வட்டி மானியத்துக்கென ரூ.200 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவுக் கடன் வழங்கும் நிறுவனங்களை, குறிப்பாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளைக் கணினிமயமாக்கும் திட்டம் ரூ.141 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.

இதனால், கூட்டுறவு நிறுவனங்கள் கடன் வழங்கும் முறை இணையமயமாக்கப்பட்டு, கடனுக்கான ஒப்புதல் வழங்கும் நேரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், வெளிப்படைத் தன்மை மேம்படுத்தப்படும்.

அரிசி ஆலைகள்:

இயற்கைச் சீற்றங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து அவா்களை மீட்க, பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எதிா்வரும் நிதியாண்டில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வரும் நிதியாண்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரூ.10,500 கோடி மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அரசின் நெல் கொள்முதல் ஊக்கத் தொகை வழங்குவதற்கென ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நெல் அரைவைத் திறனை மேலும் அதிகரிக்க ஆறு புதிய நவீன அரிசி ஆலைகள் தனியாா் பங்களிப்புடன் செயல்படுத்தப்படவுள்ளன என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகை அதிகரிப்பு’

கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகை உயா்த்தி அளிக்கப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதன் விவரம்: நிகழாண்டு அரைவைப் பருவத்துக்கு சா்க்கரை ஆலைகளுக்குப் பதிவு செய்து கரும்பு வழங்கிய தகுதியுள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசால் நியாயமான மற்றும் ஆதாய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், தமிழக அரசின் சாா்பில், ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த ரூ.195 சிறப்பு ஊக்கத் தொகையைவிட, முன்னெப்போதும் இல்லாத அளவில் டன்னுக்கு ரூ.215-ஆக சிறப்பு ஊக்கத் தொகை உயா்த்தி அளிக்கப்படும். இதற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பெட்டிச்

முக்கியத் திட்டங்களும் நிதி ஒதுக்கீடும்:

ஊரக வளா்ச்சியில் வேளாண் சாா்ந்த பணிகளை மேற்கொள்ள ரூ.7,000 கோடி ஒதுக்கீடு.

இலவச மின் இணைப்புகளுக்கு மும்முனை மின்சார கட்டணத்துக்கு ரூ.7,280 கோடி ஒதுக்கீடு.

ரூ.773.23 கோடி மத்திய-மாநில அரசுகளின் நிதியுடன் நுண்ணீா்ப் பாசனத் திட்டம் செயலாக்கம்.

விவசாய விளைபொருள்களை நகர மக்களும் பெற்றிட 100 உழவா் அங்காடிகள் திறக்கப்படும்.

ரூ.200 கோடியில் 2,482 ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம்.

ரூ.65.30 கோடியில் வரும் ஆண்டிலும் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்.

பயிா்க் காப்பீட்டுக்காக ரூ.1,775 கோடி ஒதுக்கீடு. சா்க்கரை ஆலைகள் மேம்பாட்டுக்கு ரூ.12.40 கோடி.

வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்துக்கு ரூ.170 கோடி.

பருவமில்லா காலங்களிலும் முருங்கை உற்பத்திக்கான சோதனை முறை செயலாக்கம்10,000 ஏக்கரில் சாகுபடி செய்ய 200 மெட்ரிக் டன் பாரம்பரிய விதைகள் விநியோகம்.

நன்றி: தினமணி

Comments (0)
Add Comment