நீதிக்கட்சியும், சமூக நீதியும்!

நூல் விமர்சனம்:

* இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்றை நினைவுபடுத்த வேண்டியது நமது கடமை. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தற்போது ‘சமூக நீதி’ என்ற சொல் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

அந்த சொல்லுக்குப் பின்னால் இருக்கும் வரலாறும் அரசியலும் இந்த இளைஞர்களுக்கு தெரிந்தாக வேண்டும்.

அத்தோடு சமூக நீதிக்கு காரணமான, நூற்றாண்டு இயக்கமான ‘நீதிக்கட்சி’ பற்றியும் அறிந்து கொள்வதற்கு ஒரு கையடக்கமான ஆவணமாக இந்த நூல் அமைந்துள்ளது!

* திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவராக இருந்தவரும் சமீபத்தில் மறைந்த பெரியார் பெருந் தொண்டர், எழுத்தாளர் க. அறிவுக்கரசு அய்யா அவர்கள் எழுதி அவர் உயிருடன் இருந்தபோது கடைசியாக வெளியிடப்பட்ட நூல் இது. அவரது நினைவைப் போற்றும் வகையில் சிறப்பாக அமைந்து விட்டது!

* நூலின் அணிந்துரையில் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், “மானமிகு க. அறிவுக்கரசு அவர்கள் கடுமையாக உழைத்து இந்த புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார்.

நீதிக்கட்சியின் தோற்றம், டி. எம். நாயரின் அறிவுத்திறன் – உழைப்பு – தொண்டு, பார்ப்பன ஆதிக்க ஒழிப்பில் நீதிக்கட்சி ஆற்றிய பணி, சமூக நீதியை நிலை நிறுத்திய விதம், நீதிக்கட்சி ஆட்சியின் சாதனைகள், நிறைவேற்றிய‌ சட்டங்கள் எல்லாவற்றையும் வளமான நடையில் விளக்குகிறார்!” என நூலைப் பற்றிய ஒரு சிறு குறிப்பையே அருமையாக எழுதி விட்டார்!

டி.எம். நாயர் 

* இந்த நூலில் காணக் கிடைக்கின்ற பல அரிய தகவல்களிலிருந்து ஒரு சிலவற்றையாவது இந்த அறிமுகவுரையில் தர வேண்டியது அவசியம் எனக் கருதி உங்கள் பார்வைக்கு இதோ:

* நீதிக்கட்சி என்று அழைக்கப்படும் தென் இந்தியர் நல உரிமைச் சங்கம் 20.11.1916 அன்று சென்னை விக்டோரியா மன்றத்தில் பார்ப்பனரல்லாதார் சமூகத்தின் தலைவர்கள் பலர் கூடி துவக்கினார்கள்.

அவர்கள் பார்ப்பனரல்லாதார் பிரகடனம் ஒன்றையும் வெளியிட்டார்கள். அதில் குறிப்பிட்டுக் காட்ட வேண்டிய முக்கிய பிரகடனம் இவ்வாறு:

* “நான்கு கோடி 15 லட்சம் பேர் கொண்ட மாகாணத்தில் (1916ம் ஆண்டில் சென்னை மாகாண மக்கள் தொகை) நான்கு கோடி பேர் பார்ப்பனரல்லாதார், மீதியுள்ள பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து எல்லா வகையிலும் போராட – பார்ப்பனரல்லாத மக்களுக்கு அறை கூவல் விடுத்தது”

* திராவிட லெனின் என்று அழைக்கப்பட்டவர் டாக்டர் டி.எம். நாயர். தாரவாட் மாதவன் நாயர் என்பது முழுப்பெயர். லண்டனில் காது மூக்கு தொண்டை மருத்துவத்தில் 1896ல் எம்.டி. பட்டம் பெற்று 1897ல் சென்னைக்கு திரும்பி தனது மருத்துவத் தொழிலில் புகழ் பெற்றிருந்தார்.

* நீதிக்கட்சியின் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்பட்டவர்கள் – டாக்டர் சி. நடேசன், டாக்டர் டி.எம். நாயர், பிட்டி. தியாகராயர்.

தியாகராயர்

பார்ப்பனரல்லாதார் பிரகடனத்தை எழுதியவர் டி.எம். நாயர். நீதிக்கட்சியின் சார்பில் துவக்கப்பட்ட ஜஸ்டிஸ் ஆங்கில ஏட்டின் ஆசிரியராகவும் இருந்தார்.

* டாக்டர் டி.எம். நாயருக்கு பெரிய புகழை தந்தது அவர் நிகழ்த்திய – ஸ்பர்டாங்க் சாலை உரை!

சென்னை எழும்பூரில் உள்ள ஸ்பர்டாங்க் சாலையில் 07.10.1917 அன்று நடைபெற்ற நீதிக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் அவர் நிகழ்த்திய பேருரையைப் படிப்பவர்கள், இதைப் பேசியது பெரியாரா அல்லது நாயரா என சந்தேகம் கொள்வார்கள்.

அதிலிருந்து ஒரு சிறு பகுதி :

* “பஞ்சமர்கள் எல்லோரும் படித்து வாழ்வில் முன்னேறி, தங்களுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தகுதி பெறும் வரை, பிரிட்டிஷ் ஆட்சி செய்து நியாயத் தராசை சமமாக பிடிக்கும் நிலை நீடிக்க வேண்டும்!

இல்லாவிட்டால், மேல் ஜாதி எனக் கூறிடும் பார்ப்பனர்களின் தயவில் வாழ வேண்டிய கெட்ட நிலை நீடிக்கும்”.
 
பின்னர் இதை எப்போதும் வலியுறுத்தியவர் பெரியார்.

* 1920ம் ஆண்டு நீதிக்கட்சி சென்னை மாகாணத்திற்கு ஆட்சிக்கு வந்தது. அது 1937 வரை பலரின் தலைமையில் ஆட்சி செய்தது. ஏ.‌சுப்பராயலு செட்டியார் தலைமையில் 15.12.1920ல் நீதிக்கட்சி முதன்முறையாக பதவிக்கு வந்தது.

* நீதிக்கட்சியின் மிகப்பெரிய இரண்டு சாதனைகளாக அறியப்பட வேண்டியவை:

1) சமூக நீதியைப் பாதுகாக்கும் சட்டம்:
அரசுப் பணிகளில் பார்ப்பனரல்லாத வகுப்புகளுக்கு இடம் அளிக்கும் வகையில் ‘இட ஒதுக்கீடு’ அளித்திட வகை செய்யும் சட்டம் 1921 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. (அரசாணைகள் – 16.09.1921 மற்றும் 15.08.1922 )

2) கோயில் சொத்துக்களைப் பாதுகாக்கும் சட்டம் :
இந்து அறநிலையப் பாதுகாப்பு சட்டம் என்பது இந்து மதக் கோயில்களிலும் மடங்களிலும் நிலவி வந்த ஊழலை, சட்ட விரோத நடவடிக்கைகளை, சாதி சர்வாதிகாரத்தை ஒழித்துக் கட்ட 1925ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

* நீதிக்கட்சியின் சாதனைகள் இவைகள் மட்டும் அல்ல, எல்லோருக்கும் கட்டாய கல்வி;

1920ம் ஆண்டே சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச காலை உணவு;

1921ம் ஆண்டிலேயே மகளிருக்கு வாக்குரிமை; 1924ம் ஆண்டு பணியாளர் தேர்வு வாரியம் (Public Service Commission). இவ்வாறு பல்வேறு முன்னோடித் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

* நூறாண்டுகளுக்கு முன்பு பார்ப்பனரல்லாத மக்களை ஒன்று சேர்த்து, அவர்களுக்கான அரசியல் தளமாக நீதிக் கட்சியை அமைத்து, அவர்களின் உரிமைகளை பாதுகாக்க ‘சமூக நீதி’ கொள்கையை தொடர்ந்து செயல்படுத்தி வரும் இன்றைய தமிழ் நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு எவையெல்லாம் காரணம், யாரெல்லாம் காரணம் என அறிந்துகொள்ள இந்த நூல் மிகவும் உதவியாக இருக்கிறது.

நூலாசிரியர் க. அறிவுக்கரசு அய்யா அவர்கட்கு வீரவணக்கம்!

நீதிக்கட்சி – சமூக நீதியை அறிமுகப்படுத்தத் துவக்கப்பட்டது!

சுயமரியாதை இயக்கம் – சமூக நீதியைப் பரவலாக்கத் துவக்கப்பட்டது!

திராவிடர் கழகம் – சமூக நீதியைப் பாதுகாக்கத் துவக்கப்பட்டது!

திராவிட அரசியல் – சமூக நீதியை செயல்படுத்தத் துவக்கப்பட்டது!

*****

நீதிக் கட்சியும் சமூக நீதியும்!
ஆசிரியர்: க. அறிவுக்கரசு
திராவிடர் கழக வெளியீடு
முதல் பதிப்பு 2024
பக்கங்கள் 104
நன்கொடை: ரூ.100/-

பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர். 
 

Comments (0)
Add Comment