இந்தியப் பதிப்பாளர்கள் கூட்டமைப்புடன் இணைந்து வாருங்கள் வாசிப்போம் அமைப்பும் சென்னைப் புத்தகக் குழுவும் சேர்ந்து, எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தன.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற இந்த ஒரு நாள் முழு கருத்தரங்கிற்கு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் முனைவர் ஔவை அருள் தலைமை தாங்கினார்.
எழுத்தாளரும் பதிப்பாளருமான கோ.ஒளிவண்ணன் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அவரே வரவேற்புரையும் ஆற்றினார்.
இந்த கருத்தரங்கில் கவிஞர் மனுஷ்யபுத்திரன், செயற்கை நுண்ணறிவு ஆய்வாளர் செல்வகுமார், இந்தியப் பதிப்பாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் சேஷாத்திரி, பேஜ்மேஜிக் தலைமை நிர்வாக அதிகாரி அசோக் கிரி,
கிஸ்ஃப்ளோ நிறுவனரும் கனவு தமிழ்நாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சுரேஷ் சம்பந்தம், தமிழ் மரபு அறக்கட்டளைத் தலைவர் முனைவர் சுபாஷினி, டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனர் வேடியப்பன்,
இயக்குநரும் எழுத்தாளருமான ராசி அழகப்பன், எழுத்தாளர் பிருந்தா சாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்பாளர்களாக கலந்து கொண்டு கருத்தரங்கை சிறப்பித்தனர்.
தலைமை உரையாற்றிய முனைவர் ஔவை அருள், தமிழை இன்னும் செம்மைப்படுத்தி, கணினிப் பயன்பாட்டுக்கு ஏதுவாக, எளிதாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தமிழ்ப் படைப்புகளை மற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வதற்கு The grammerly, சொல் திருத்தி, நீச்சல்காரன் உள்ளிட்ட சிறந்த இணையப் பக்கங்களையும் அவர் பரிந்துரைத்தார்.
அதோடு தமிழை எல்லா மொழிகளோடும் இணைப்பதற்கான கோரிக்கையையும் அவர் முன் வைத்தார்.
அதைத் தொடர்ந்து டிஜிட்டல் தூரிகை என்ற தலைப்பில் பேசிய ஐ.எஸ்.ஆர் செல்வகுமார், செயற்கை நுண்ணறிவு என்று சொல்லக்கூடிய ஏ.ஐ தொழில்நுட்பம் (AI Artificial Intelligence) கணினி யுகத்தை எந்த அளவுக்கு மாற்றி இருக்கிறது என்பதைப் பற்றிக் கூறினார்.
மனிதனைப் போல யோசிக்கும் கணினிகளும் மனிதனைப் போல செயல்படும் கணினிகளும் எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டு இருக்கின்றன என்பதைப் பற்றியும் அதுமட்டுமல்லாமல், எதிர்காலத்தை ஆளப்போவது இந்த ஏ.ஐ தொழில்நுட்பம் தான் என்றும் கூறினார்.
புத்தக விற்பனைக்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது எப்படி என்ற தலைப்பில் பேசிய கவிஞர் மனுஷ்யபுத்திரன்,
சமூக வலைதளங்களைப் பயன்படுத்திப் புத்தகங்களின் விற்பனை அதிகரிக்கலாம் என்றும் கூறியதோடு, அந்த புதுயுக்தியைப் பயன்படுத்தி அதில் வெற்றி கண்டதையும் குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து பேசிய சுரேஷ் சம்பந்தம் 30 பில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக நம் நாடு மாறப்போகிறது என்றும் அதற்கு ஏ.ஐ தொழில் நுட்பம் மிக முக்கியமான காரணமாக இருக்கும் என்றும் கூறினார்.
அதோடு தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்பதைப் பற்றியும் அவர் சுட்டிக்காட்டிப் பேசினார்.
பிற்பகலுக்குப் பிறகு பேசத் தொடங்கிய சுபாஷினி, ஐரோப்பிய நாடுகளில் புத்தக விற்பனையை அதிகரிப்பது எப்படி என்ற வழிமுறைகளை எடுத்துரைத்தார்.
அதோடு மற்ற நாடுகளுக்கும் எந்தெந்த வகைகளில் நூல்களைக் கொண்டு சென்று அங்குள்ள தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டிப் பேசினார்.
நிகழ்ச்சியின் இறுதியாக டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனர் வேடியப்பன், புத்தகக் கடைகள் மூடப்படுவதில்லை என்றும் அதற்கு மாறாக புதுப்பொலிவுடன் வெவ்வேறு தளங்களில் மக்களிடம் சென்று சேர்வதாக குறிப்பிட்டார்.
மிகச் செறிவாக நடைபெற்ற இந்த கருத்தரங்கம், பதிப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மிகப்பெரிய உந்துதலாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.