பிப்ரவரி 20 – உலக சமூக நீதி தினம்
‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்ற பாடலை ‘கருப்புப் பணம்’ படத்திற்காகக் கவிஞர் கண்ணதாசன் எழுதினார்.
அறுபதாண்டுகள் ஆன பிறகும் அந்த வரிகளுக்கான தேவை உயிர்ப்போடு இருந்து வருவதை என்னவென்று சொல்வது? அந்த நிலை உருவாக இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்று எண்ணுவதா அல்லது அதை நோக்கிய பயணத்திலேயே இத்தனை காலம் உருண்டோடியிருக்கிறது என்பதா?
ஒரு சமூகத்தில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க, அனைவரும் சமதளத்தில் இருக்க வேண்டும், இயங்க வேண்டும்.
அதற்குச் சக மனிதரை மேலிருந்து கீழாக நோக்குகிற பார்வையை இல்லாமலாக்க வேண்டும். சக மனிதரை நேர்கோட்டில் வைத்து மதிக்கும், நேசிக்கும் மனப்பாங்கு நிலவ வேண்டும்.
அப்படிப்பட்ட சமூக நீதியைப் படரச் செய்யவே இன்று பெரும் பிரயத்தனப்படுகிறது உலகம்.
சமூக நீதி என்றால்..!
சமூகத்தில் மனிதர்களுக்கிடையே சாதி, மதம், இனம், மொழி உட்பட எவ்வகையிலும் வேறுபாடுகள் இருக்கக் கூடாது. வறுமையின் கோரமும், செழிப்பின் திகட்டலும் ஒரு தளத்தில் இணைந்து நிற்க முடியாது.
அனைவரும் நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வாழ வேண்டும்.
இப்படிப் பலப்பல சொல்லிக் கொண்டே போகலாம்.
அவை சாத்தியப்படாத பொழுதினில் இருந்தே, இங்கு சமூக நீதிக்கான குரல்கள் உரக்க ஒலிக்கத் தொடங்கின என்பதை மட்டும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்..
ஒருவர் ஆதிக்கம் செலுத்த, இன்னொருவர் ஒடுக்கப்படுகிறார் என்றால் பாதிக்கப்பட்டவரின் குரலில் வெளிப்படும் வலியையும் வேதனையும் அதன் பின்னிருக்கும் உண்மையையும் அறியவே நம் மனம் துடிக்க வேண்டும். அவருக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால், ‘வல்லான் வகுத்ததே நீதி’ என்று இருந்துவிடக் கூடாது. இந்த வலியோர், எளியோர் பாகுபாடானது எப்போது வேண்டுமானாலும் இடம் மாறும் என்பதையே ‘வலியார் முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லு மிடத்து’ எனும் குறளில் அடிக்கோடிட்டிருப்பார் திருவள்ளுவர்.
அவர் என்றில்லை, அறம் பாடிச் சென்ற அத்தனை பெரியோரும் அதைத்தான் சொல்லிச் சென்றிருக்கின்றனர்.
உலகத்தின் பார்வை!
‘மனிதர்களுக்கு இடையிலான இடைவெளி அகல வேண்டும்; ஒருவரோடு ஒருவர் கைகோர்க்க வேண்டும்’ என்ற எண்ணம், இன்று உலகம் முழுக்கப் பரப்பப்படுகிறது.
‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்று எப்போதோ நம் மண்ணில் வேரூன்றிய வித்தின் இன்னொரு வடிவமே அது. அப்படியொரு கைகோர்ப்பு நடக்கத்தான் இங்கு எத்தனை தடைகள்.
பாகுபாடுகளும் சமத்துவமின்மையும் மிக எளிதாக அதனைச் சாதித்து விடுகின்றன. அதனைக் கடக்கத் தான் எத்தனை போராட்டங்கள்.
கடந்த நூற்றாண்டில் உலகம் முழுக்க நிகழ்ந்த பல சுதந்திரப் போராட்டங்களில் தேச விடுதலையோடு சமூக நீதியும் சேர்த்தே வலியுறுத்தப்பட்டன.
குழிக்குள்ளும் குன்றிலும் இருக்கும் மனிதர்கள் கைகோர்த்துச் சமதளத்தில் நின்றால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பது நிதர்சனம்.
அப்படியொரு வெற்றியைப் பெற்றபிறகு கைகளின் இறுக்கம் அதிகமாகத்தான் வேண்டுமே தவிர தளர்ந்துவிடக் கூடாது.
நாம் வாழும் ஊர், மாவட்டம், மாநிலம், நாடு என்பதைத் தாண்டி உலகம் முழுக்கவிருக்கும் மனிதர்களிடமும் அதே நேசத்தை வெளிப்படுத்த வேண்டும்.
அந்த நோக்கிலேயே, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 20-ம் தேதியன்று ‘உலக சமூக நீதி தினம்’ கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் சம உரிமைகள், வாய்ப்புகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே இதன் பின்னிருக்கும் நோக்கம்.
பெருகும் தேவைகள்!
1995-ம் ஆண்டு டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடந்த சமூக முன்னேற்றத்திற்கான உச்சிமாநாட்டில் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் மாற்றும் பாகுபாடுகளை ஒழிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2007-ம் ஆண்டு ‘சமூக நீதி தினம்’ கொண்டாட ஐநா முடிவு செய்தது.
உலகமயமாக்கத்தின் பின்னணியில் தொழிலாளர்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் இது முன்னெடுக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, 2009 முதல் சமூக நீதி தினம் உலகம் முழுக்கக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சமூக நீதிக்கான முன்னெடுப்புகளில் முன்னேற்றத்தை அடைவதையும், அதை நோக்கிய பயணத்தில் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டு தீர்வு காண்பதையும் வலியுறுத்தவே இந்த தினம்.
அந்த வகையில், ’இடைவெளிகளை இணைத்து ஒன்றிணைவோம்’ என்பதே இந்தாண்டுக்கான கருப்பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ் மண்ணைப் பொறுத்தவரை சமூகநீதிக்கான செயல்பாடுகள் ஒரு நூற்றாண்டாகத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
அதனை முன்னெடுத்தவர்களில் முதன்மையானவரான பெரியார் பிறந்ததினத்தைக் கொண்டாடும்விதமாக, தமிழ்நாட்டில் செப்டம்பர் 17-ம் தேதியன்று ‘சமூக நீதி நாள்’ கடைப்பிடிக்கப்படுகிறது. 2021-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசினால் அது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சமூக நீதி உயிர்ப்போடு இருக்க, அது குறித்த விவாதங்கள் தொடர்ச்சியாக நடந்தேற வேண்டும்.
அவை நிகழவே முடியாது எனும் சூழல் எக்காலத்திலும் உருவாக அனுமதிக்கக் கூடாது.
எதேச்சதிகாரம் எனும் ஆதிக்க மனோபாவம் இன்று உலகம் முழுக்கக் கிளை விட்டுக் கொண்டிருக்கும் சூழலில், சமூக நீதியைச் செயல்படுத்துவதற்கான தேவைகள் பெருகியுள்ளன.
எந்தவொரு சமூகத்திலும் முதியோர், ஆதரவற்றவர், மூன்றாம் பாலினத்தவர், பிச்சைக்காரர், கடுமையான நோய் தாக்குதலுக்கு உள்ளானவர் என்று பல நிலைகளில் இருப்போர் உண்டு.
அவர்களின் வாழ்க்கை தரத்தைச் சிறப்பானதாக்கிச் சாதாரண மனிதர்களைப் போல உணரச் செய்ய வேண்டும்.
அனைவரையும் உள்ளடக்கியதே இந்த உலகம் என்ற நிறைவை அவர்கள் மனத்தினில் உருவாக்க வேண்டும். ஒவ்வொருவரும் அதனை நேசத்துடன் செயல்படுத்துகையில், சமூக நீதி தானாக எங்கும் நிறைந்து நிற்கும்!
– மாபா