பட்ஜெட்  உரையில் எம்.ஜி.ஆரை நினைவு கூர்ந்த தென்னரசு!

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

இந்த நிலையில், தமிழக அரசின் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார்.

காலை 10 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கி, பகல் 12.07 மணிக்கு நிறைவு செய்தார்.

நிதித்துறை பொறுப்பை ஏற்ற பிறகு, தங்கம் தென்னரசு முதல்முறையாக தாக்கல் செய்த பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்:

இந்த ஆண்டில் 1 லட்சம் வீடுகள்:

 * குடிசை இல்லாத தமிழகம் என்ற இலக்கை அடையும் வகையில் 2030 ஆம் ஆண்டுக்குள் கிராமப்புற பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

இதில் முதல் கட்டமாக, வரும் நிதி ஆண்டில் தலா ரூ.3.50 லட்சம் செலவில் ஒரு லட்சம் புதிய வீடுகள் உருவாக்கப்படும். ‘கலைஞரின் கனவு இல்லம்’ என்று பெயரிடப்பட்ட இத்திட்டத்துக்கு 3,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* தலைசிறந்த அறிவியல் நிறுவனங்களின் வழிகாட்டுதலில், மக்கள் பங்களிப்புடன் 5 ஆயிரம் நீர்நிலைகளை சீரமைக்கும் திட்டம் ரூ.500 கோடியில் செயல்படுத்தப்படும்.

* தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 2.2 சதவீதம் பேரில் மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக் குடும்பத்துக்கு அரசின் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வழங்கி, அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் வகையில், ‘முதல்வரின் தாயுமானவர் திட்டம்’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

* 1.15 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்கு ரூ.13,720 கோடி ஒதுக்கப்படும்.

நீலகிரி, கொடைக்கானல், வால்பாறை போன்ற பகுதிகளுக்கும் பெண்கள் இலவசப் பேருந்து பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

* மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம், வரும் கல்வி ஆண்டு முதல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு, ரூ.370 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமப்பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மேலும் 2.50 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும்.

உயர்கல்வியைத் தொடர விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்வி, விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும்.

புதுமைப்பெண் திட்டம்போல, அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றவும், உயர்கல்வி சேர்க்கையை உயர்த்தவும் ‘தமிழ்ப் புதல்வன்’ என்ற மாபெரும் திட்டம் வரும் நிதி ஆண்டில் அறிமுகம் செய்யப்படும்.

* அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் 3 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 அவர்களது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். இத்திட்டத்துக்கு ரூ.360 கோடி ஒதுக்கப்படும்.

ஒரு லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு வங்கிகள் மூலம் ரூ.2,500 கோடி கல்விக் கடன் வழங்கப்படும்.

* நகரங்களை ஒட்டிய கிராமப்புறங்களில் சிற்றுந்து சேவை நீட்டிக்கப்படும்.

எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டம்:

பட்ஜெட் உரையை வாசித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, முக்கிய திட்டங்களை செயல்படுத்திய தலைவர்கள் பெயர்களை நினைவு படுத்தினார்.

1922 ஆம் ஆண்டு சென்னை மாநராட்சி மன்ற தலைவராக இருந்த சர்.பிடி. தியாகராயர் காலத்தில் ஒரு மாணவருக்கு ஒரு அணா செலவில் மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிற்காலத்தில் அது, காமராஜரால் விரிவுபடுத்தப்பட்டது. 1970 ஆம் ஆண்டு கலைஞர் குடிசை மாற்று வாரியத்தை துவக்கினார்.

எம்.ஜி.ஆரால் அறிமுகப்பட்டு பின்னாளில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்துக்கு 1982-83 பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது – என தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.

 ‘தமிழில் இரட்டை காப்பியங்கள்’ என்று அழைக்கப்படும் சிலப்பதிகாரம் – மணிமேகலை ஆகிய நூல்களை 25 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட 2 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பையும் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.

-பி.எம்.எம்.

Comments (0)
Add Comment