ஒரு முக்கியமான திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் ‘பிடித்தது’ ‘பிடிக்கவில்லை’ என்று தன்னிச்சையாக இரண்டு குரூப்கள் சமூக வலைத்தளங்களில் உற்பத்தியாகின்றன.
‘படம் ஏன் உனக்கு பிடித்தது, பிடிக்கவில்லை’ என்று இரண்டிற்கும் இடையே மோதல்கள் கூட நடக்கின்றன.
ஓகே.. இரண்டுமே ஒருவகையில் நார்மல்தான். ஒருவர் காசு கொடுத்து திரையரங்கிற்குச் சென்று படம் பார்க்கிறார். அது பிடித்தது, பிடிக்கவில்லை என்று சொல்ல அவருக்கு முழு உரிமையும் உண்டு. அது அவரின் சுதந்திரம்.
ஆனால், இதில் மூன்றாவதாக ஒரு க்ரூப் இருக்கிறது. இதுதான் என்னைப் பொறுத்தவரையில் வில்லங்கமானது.
‘ப்ரோ.. என் நேரத்தை மிச்சப்படுத்திட்டீங்க.. ‘பாஸ் உங்களால எனக்கு ரூ.200 மிச்சம்..’ என்று ‘படம் பிடிக்கவில்லை’ என்றெழுதுபவர்களின் பதிவுகளில் சென்று பின்னூட்டம் போடுவார்கள்.
அப்படி நேரத்தை மிச்சப்படுத்தி இவர்கள் என்ன அணுகுண்டு ஆராய்ச்சியிலா ஈடுபடப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
இதே சமூகவலைத்தளத்தில்தானே நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கப் போகிறார்கள்?
திரைப்படம் உள்ளிட்ட கலையை நுகர்வதென்பது ஒரு அந்தரங்கமான அனுபவம். மற்றவர்களின் நுகர்வுகளையொட்டியா அதைத் தீர்மானிப்பது?
இதை விடவும் கொடுமையான க்ரூப் ஒன்றிருக்கிறது. ‘தல.. உங்களால எனக்கு இரண்டு ஜி.பி.மிச்சமாச்சு’ என்று இணையப் பயன்பாட்டினை அளவுகோலாக வைத்து அலட்டிக் கொள்வார்கள்.
ஒரு திரைப்படத்தை இணையத்தில் தரவிறக்கிப் பார்ப்பதே அநியாயம். அதையும் ‘எனக்கு மிச்சம்’ என்று சவடாலாகச் சொல்வதற்கு நிறைய கல்லுளி மங்கத்தனம் வேண்டும்.
‘படம் பிடித்தது, பிடிக்கவில்லை’ என்று எழுதும் க்ரூப்புகளில் எப்படியோ சில செயற்கைத்தனங்கள் உள்ளே புகுந்து விடும். தான் பார்த்த படம் அடுத்தவருக்கும் பிடிக்க வேண்டும் என்பதற்காக உற்சாகத்துடன் மிகையாகப் புகழ்ந்து எழுதுவார்கள்.
இந்த வகையில் நானும் கூட சமயங்களில் செயலாற்றியிருக்கிறேன். அப்படியாவது மற்றவர்கள் சென்று அந்த ‘நல்ல’ படத்தைப் பார்க்கட்டும் என்கிற நல்லெண்ணம்தான் அதற்கு காரணம்.
ஆனால் இதை விடவும் ‘படம் பிடிக்கவில்லை’ என்பதை கர்ண கொடூரமாக திட்டுபவர்களின் பக்கத்தில்தான் கூட்டம் அதிகமிருக்கும். ‘சபாஷ் மாப்ள…. அப்படிப் போடு’ என்று துள்ளிக்குதிப்பவர்கள் பின்னூட்டங்களில் அதிகமிருப்பார்கள்.
ஒரு விஷயத்தை திட்டுவதில்தான் நம்முடைய மனம் தன்னிச்சையாக அதிகம் சந்தோஷப்படுகிறதோ? இந்தப் பதிவுகளுக்குத்தான் அதிகமான வரவேற்பு இருக்கும். ஆக்குவதை விடவும் அழிப்பதில்தான் நமக்கு விருப்பம் அதிகம்.
ஒருவருக்கு படம் பிடிக்கவில்லை’ என்பதை பொதுவில் சொல்வதற்கு அவருக்கான உரிமை இருக்கிறது என்று சொன்னேன்.
ஆனால் ‘திரைப்பட விமர்சகர்களாலும் ஆர்வலர்களாலும் ‘நல்ல படைப்பு’ என்று சிலாகிக்கப்படுகிற படங்களைக் கூட இவர்கள் தூக்கிப் போட்டு மிதிப்பதும் கருத்து சுதந்திரம் என்கிற வகையில் சேருமா?
இந்த இடத்தில்தான் நமக்கான முதிர்ச்சி மற்றும் பயிற்சிக்கான அவசியம் தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன்.
விமர்சகர்களால் புகழப்படுகிற சில திரைப்படங்களை நான் கூட முதலில் பார்த்துவிட்டு ‘ச்சைக்.. சாவடிச்சிட்டான்யா. கருமம்.. என்ன படமிது’ என்று பொதுவில் மிதப்பாக எழுதியிருக்கிறேன்.
ஆனால், ஒரு சிறந்த விமர்சகன் என்ன செய்கிறான் என்றால் ‘அந்தத் திரைப்படத்தை எவ்வாறு அணுகுவது என்பதற்கான சாவிகளை நமக்குத் தருகிறான். அதன் மூலம் படத்திற்குள் இருக்கிற நுட்பமான பூட்டுக்களைத் திறந்து காட்டுகிறான்.
‘அடடே!.. இந்தக் கோணத்தில் நாம் அறியத் தவறி விட்டோமே’ என்று பல சமயங்களில் நான் மனம் வருந்தியிருக்கிறேன். அவசரப்பட்டு எதையெதையோ உளறி விட்டோமே என்று வெட்கியிருக்கிறேன்.
திரைப்பட ரசனையாளர்களால் கொண்டாடப்படும் படங்களை அணுகுவதற்கு நமக்கும் சற்று பொறுமை தேவைப்படுகிறது.
வழக்கமான ‘டெம்ப்ளேட்’ படங்களின் சுவாரசியத்தையும் அதையும் ஒன்றாக நிறுத்தி “என்னப்பா போரடிக்குது?” என்று சலித்துக் கொள்வதைப் போல ஓர் அநியாயம் இருக்க முடியாது.
வருகிற பார்வையாளனை வெறுப்பேற்றி வெளியே அனுப்ப வேண்டும் என்று எந்தவொரு நல்ல படைப்பாளியும் முன்கூட்டியே திட்டமிட மாட்டான்.
அவன் ஏதோவொரு பிரத்யேகமான உலகத்தை சிருஷ்டிக்க முயற்சிக்கிறான். அதை அவனுடைய மொழியில் சொல்வதற்காக நிறைய மெனக்கெடுகிறான்.
அதற்காக பல்வேறு நுட்பங்களை கையாள்கிறான். அவற்றைச் சாத்தியப்படுத்துவற்காக ஒரு குழுவே பல வருடங்கள் அதற்காக உழைக்கிறது.
இத்தனை விஷயங்களையும் முடித்து நம் முன்னால் பிரசாதம் போல் தரும்போது பார்வையாளனும் சற்று முன்னால் நகர்ந்து அதைப் புரிந்து கொள்வதற்கான சிறு உழைப்பை தருவது நியாயமா இல்லையா?
இந்த ஆட்டத்தில் பார்வையாளனையும் மதித்து அவனையும் ஒரு பங்குதாரரராக தன்னுடைய படைப்பாட்டத்தில் இணைத்துக் கொள்ளும் கலைஞனை நீங்கள் மதிக்க வேண்டுமா, இல்லையா?
அப்படி இருவரும் இணைந்து ஆடும் ஆட்டத்தில்தானே சுவாரசியம் இருக்கிறது?! அந்தக் கலைதானே ஒருவகையில் முழுமையை நோக்கி நகர்கிறது?!
ஒரு நவீன கவிதையை வாசிக்கிறோம். சிறந்த கவிதை என்று சொல்கிறார்கள். ஆனால் நமக்குப் புரியவில்லை.
‘ச்சை. என்னதிது.. டுபாக்கூர் கவிதை’ என்று முகச்சுளிப்புடன் விலகினால் ‘நாம் ஒரு முட்டாள்’ என்று நாமே நம்மை அறிவித்துக் கொள்கிறோம் என்றுதானே பொருள்?!
திரைப்படம் உள்ளிட்ட கலைகளுக்கும் இது பொருந்தாதா?
“ஹலோ… பிரதர்.. அப்படில்லாம் மண்டையை உடைச்சுக்கிட்டு, ஆராய்ஞ்சு படம் பார்க்க நாங்க வரலை. வந்தமா.. இரண்டரை மணி நேரம் ஜாலியா இருந்தமான்னு இருக்கணும்” என்று நீங்கள் நினைத்தால் அது நியாயம்.
அது உங்கள் உரிமையெனில் இயக்குநரால் மெனக்கெட்டு எடுக்கிற படங்கள் நமக்கானதல்ல என்கிற எளிய புரிதலாவது இருக்க வேண்டும்.
மாறாக அதையும் சென்று வீம்புடன் பார்த்துவிட்டு ‘ச்சைக்’ என்று இகழ்ந்து பொதுவில் சொல்வதன் மூலம் நம்முடைய முட்டாள்தனத்தை நாமே பொதுவில் பறைசாற்றிக் கொள்கிறோம் என்றுதானே பொருள்?!
– நன்றி: சுரேஷ் கண்ணன் முகநூல் பதிவு
#திரைப்படம் #திரையரங்கு #சமூக_வலைதளம் #விமர்சகன் #திரைப்பட_விமர்சனம் #ரசனை #பார்வையாளர்கள் #இயக்குநர்கள் #directors #movies reviews #viewers #theatre #social_media #movie_reviews #cinema_movies #விமர்சனம்