ஊரு பேரு பைரவகோனா – பயமுறுத்துகிற ‘பேண்டஸி’ கதையா இது?

சந்தீப் கிஷன். ‘யாருடா மகேஷ்’ மூலமாகத் தமிழில் அறிமுகமாகி ‘மாநகரம்’, ‘மாயவன்’ படங்கள் வழியே நம் கவனம் ஈர்த்தவர். தெலுங்கில் தொடர்ந்து இவர் வெற்றிப் படங்கள் தந்துவரும் ஒரு நடிகர். கடந்த ஆண்டு வெளியான ‘மைக்கேல்’ படத்தில் காதலிலும் ஆக்‌ஷனிலும் கலக்கிய இவர், தனுஷ் உடன் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் கௌரவத் தோற்றத்தில் தலைகாட்டியிருந்தார். தற்போது, அவர் நடித்துள்ள ‘ஊரு பேரு பைரவகோனா’ தெலுங்கில் வெளியாகியுள்ளது. இது ஒரு பேண்டஸி வகைமை திரைப்படம்.

தனது ஒவ்வொரு படமும் வெவ்வேறு விதமான காட்சியனுபவத்தை வழங்க வேண்டுமென்பதற்காக, ஸ்கிரிப்ட் தேர்வில் அதிகக் கவனம் செலுத்தும் கலைஞர்களில் ஒருவராகவே சந்தீப் அறியப்படுகிறார். அந்த வகையில் இந்தப் படம் எப்படிப்பட்ட அனுபவத்தை அளிக்கிறது?

பைரவகோனா எங்கிருக்கிறது!?

ஒரு கல்யாண வீட்டுக்குள் புகுந்து மணப்பெண்ணின் நகைகளை ‘அபேஸ்’ செய்கிறார் பசவா (சந்தீப் கிஷன்). ஆனால், அங்கிருந்து அவரால் வெளியேற முடியவில்லை. காரணம், விஷயம் தெரிந்து அங்கிருப்பவர்கள் அறைக்கதவைப் பூட்டியிருக்கின்றனர். கதவை உடைத்துவிட்டு வந்தாலும் வெளியே இருப்பவர்கள் இறுகப் பிடித்துக்கொள்வார்கள் என்பதே நிலைமை.

அதனைச் சமாளிக்கும் வகையில், அனைத்து நகைகளையும் எடுக்கிறார் பசவா; மேற்புறம் தீப்பிடித்தாலும் அடிப்புறத்தில் அதன் பாதிப்பு தெரியாத வகையிலான உடையொன்றை மேலே அணிந்து கொள்கிறார்; கெரசினை ஊற்றி தன் மீது தீ வைத்தவாறே வெளியே வருகிறார். அவ்வளவுதான். கூட்டம் தெறித்து ஓடுகிறது. அவர்களைத் தாண்டி வரும் பசவா, ஒரு நீர்நிலையில் குதிக்கிறார். கரையைத் தொட்டதும் அந்த உடையைக் களைந்துவிட்டு, வேறு உடையை அணிந்துகொண்டு, காரில் காத்திருக்கும் நண்பன் ஜான் (ஹர்ஷா) உடன் கிளம்புகிறார்.

என்ன, இதுவரையிலான காட்சிகளைப் பார்த்தால் நம்ப முடியாமல் இருக்கிறதா? அதைவிடப் பெரிதான பேண்டஸி உலகை அடுத்துக் காட்டுவதற்கான முன்னோட்டமே அக்காட்சிகள்.

திருடிய நகைகளை ஜானும் பசவாவும் எடுத்துச் செல்கையில், ஒரு பெண் விபத்தில் சிக்கி அடிபட்டது போன்று நடிக்கிறார். அவரது பெயர் கீதா (காவ்யா தாபர்). ஒரு மருத்துவமனையில் விட்டுவிடலாம் என்று அவரைக் காரில் ஏற்றுகின்றனர். ஆனால், வழியில் போலீசார் துரத்த வேறு வழியில்லாமல் காட்டு வழியே பயணிக்கின்றனர்.

பைரவகோனா எனும் ஊரைப் பார்த்ததும், அங்கு நுழைகின்றனர். திருவிழாக் கொண்டாட்டத்துடன் இருக்கும் அந்த ஊரைப் பார்க்கவே வினோதமாக இருக்கிறது. அதையும் தாண்டி, ஒரு மருத்துவரிடம் (வெண்ணிலா கிஷோர்) கீதாவை அழைத்துச் செல்கின்றனர்.

ஆனால், அவர்களை ஏமாற்றிவிட்டு காரைத் திருடிச் செல்கிறார் கீதா. போகும் வழியில், அவரை ஏமாற்றி காரை பிடுங்கிச் செல்கிறது ஒரு கும்பல்.

கீதாவைத் தேடியலையும்போது, பெத்தம்மா (வடிவுக்கரசி) எனும் முதிய பெண்மணியைப் பார்க்கிறார் பசவா. அப்போது, ‘சொல்லு பசவலிங்கம்’ என்று முதல் பார்வையிலேயே அவரது பெயரைச் சொல்லி அழைக்கிறார் அந்தப் பெண்மணி. கூடவே, ‘காதலுக்காக நீ என்னவெல்லாம் செய்யத் துணிகிறாய்’ என்றும் கூறுகிறார். ’இங்கு நீ வர வேண்டுமென்று விதி இருக்கும்போது யாரால் அதனை மாற்ற முடியும்’ என்கிறார்.

அதனைக் கேட்டதும் துணுக்குறுகிறார் பசவா. உள்ளுக்குள் பிரமிப்பும் பயமும் எழுந்தாலும், எதையும் காட்டிக்கொள்ளாமல் காரைத் தேடிச் செல்கிறார். அது, ராஜப்பா என்பவரிடத்தில் இருக்கிறது என்பதையும் அறிகிறார்.

ராஜப்பா வீட்டில் பசவாவுக்கு வினோதமான அனுபவங்கள் கிடைக்கின்றன. அந்த நகைகள் தனது கார்த்தியாயினிக்காகத் தான் வாங்கிய நகைகள் என்று ஒவ்வொன்றாகப் பட்டியலிடுகிறார் ராஜப்பா. ஆனால், அது தன்னுடையது என்று பிடிவாதம் பிடிக்கிறார் பசவா. அப்போதுதான், ராஜப்பா உட்பட அந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவருமே பேய்கள் என்று தெரிய வருகிறது.

அவர்களுடனான பசவாவின் மோதல் முடிவுக்கு வரும்போது, அடுத்த நாள் காலை பிறக்கிறது. அந்தக் கணத்தில், பைரவகோனாவில் இருக்கும் அனைவருமே மாயமாக மறைகின்றனர்.

இது எப்படிச் சாத்தியம் என்று பசவா, ஜான், கீதா யோசிக்கின்றனர். அப்போதுதான், பைரவகோனாவின் ரகசியம் அவர்களுக்குத் தெரிய வருகிறது. அதன்பிறகும், திருடிய நகைகளை அங்கிருந்து எடுத்துச் செல்வதில் பசவா உறுதியாக நின்றாரா? அந்த நகைகளுக்கும் அவரது காதலுக்கும் என்ன சம்பந்தம் என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

கருடபுராணத்தில் பைரவகோனா பற்றிக் கூறப்பட்டுள்ளது என்ற விளக்கத்தினை, திரைக்கதையின் நடுவே ‘கிராஃபிக் நாவல்’ பாணியில் அனிமேஷன் வடிவில் தந்திருக்கிறது இப்படம். அதனை நம்பத் தயாராக இருந்தால், இப்படத்தைப் பார்த்துவிடலாம்.

மிரட்சியடைய வைக்கும்!

சந்தீப்பின் தோற்றமும் நடிப்பும் அவர் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தோடு பொருந்தி நிற்கிறது. நாயகன் என்றபோதும், அவரை மட்டுமே கதை முன்னிறுத்தவில்லை. ஒரு கமர்ஷியல் படத்தில் இந்தளவுக்குச் சக நடிகர் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கிடைப்பது அரிதான ஒன்று.

‘கொஞ்சம் குண்டுதான்’ என்று சொல்லும்படியாகப் படத்தில் வந்து போயிருக்கிறார் வர்ஷா பொல்லம்மா. அறிமுகக் காட்சி, கிளைமேக்ஸ் தவிர்த்து பெரிதாகக் காட்ட முடியாத அளவுக்கே அப்பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர்.

காவ்யா தாபரின் பாத்திரம் நிச்சயம் புதிதல்ல. பின்பாதியில் வரும் ஒரு காமெடி ப்ளஸ் ஆக்‌ஷன் காட்சிக்காக அவர் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

பெத்தம்மாவாக வரும் வடிவுக்கரசி, ராஜப்பாவாக வரும் ரவிஷங்கர், மருத்துவராக வரும் வெண்ணிலா கிஷோர், சைக்கிள் திருடர்களாக வருபவர்கள் உட்படப் பலர் பைரவகோனா சம்பந்தப்பட்ட பாத்திரங்களில் பொருந்தியிருக்கின்றனர்.

ஹர்ஷாவின் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைக்கிறது; மிகச்சில இடங்களில் இரட்டை அர்த்தத்தைக் கொணர்கிறது. ஜெயபிரகாஷ், பிரம்மாஜி, மைக் கோபி உள்ளிட்டோருக்கு இரண்டொரு காட்சிகளோடு ‘கும்பிடு’ போட்டிருக்கிறது திரைக்கதை.

பேண்டஸி திரைப்படம் என்பதால், இதில் இருக்கும் லாஜிக் மீறல்களைப் புறந்தள்ளிவிடலாம். அதையும் மீறி நாயகன், நாயகியின் பின்னணி, வாழ்க்கை முறை, அவர்களைச் சார்ந்தவர்களை விலாவாரியாகக் காட்டாமல் தவிர்த்திருக்கிறது திரைக்கதை. அதனால், கிளைமேக்ஸில் நாம் பெற வேண்டிய தாக்கம் முழுமையானதாக இல்லை.

அதேநேரத்தில், பைரவகோனா எனும் ஊரைப் பார்த்து மிரட்சியடைவதற்கான விஷயங்களைப் பார்த்து பார்த்துச் சேர்த்திருக்கிறது இயக்குனரின் குழு.

பானு பொகவரப்பின் கதை மற்றும் நந்து சவிரிகனாவின் வசனங்களுடன் பைரவகோனா எனும் ஊரின் சித்திரத்தை நம் மனதில் வரைந்திருக்கிறார் இயக்குனர் வி ஆனந்த். திரைக்கதை இன்னும் கொஞ்சம் புத்துணர்வூட்டியிருந்தால் இப்படம் தொட்டிருக்கும் உயரம் வேறாக இருந்திருக்கும்.

மற்றபடி சோட்டா பிரசாத்தின் படத்தொகுப்பு, ராஜ் தோட்டாவின் ஒளிப்பதிவு, ஒப்பனை, ஒலிப்பதிவு, கலை வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, டிஐ விஎஃப் எக்ஸ் உட்படப் பல நுட்பங்கள் மிக நேர்த்தியாக அமைந்து நல்லதொரு ‘கமர்ஷியல் பட’ அனுபவத்தைத் தருகின்றன.

குறிப்பாக, சேகர் சந்திராவின் இசையில் ‘நிஜமே நீ செபுதுன்னா’, ‘ஹம்மா ஹம்மா’ பாடல்கள் எளிதில் நம்மை ஈர்க்கின்றன. பின்னணி இசையும் மிரட்டும் ரகத்தில் உள்ளது.

பார்க்கலாமா?

படத்தின் பட்ஜெட்டை முடிவு செய்துவிட்டுக் களமிறங்கியிருப்பதால், தேவையற்ற செலவு என்று இதில் ஒரு பிரேமை கூட காட்ட முடிவதில்லை. ஒரு பிரமாண்டமான பேண்டஸி படம் பார்த்த திருப்தியையும் இது தரவில்லை. அதேநேரத்தில், பைரவகோனா எனும் ஊர் எப்படிப்பட்டது என்பதை உணருமிடத்தில் மெய் சிலிர்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் வி ஆனந்த்.

அவரது முந்தைய படங்களான ‘ஒக்க ஷணம்’, ‘டிஸ்கோ ராஜா’ உள்ளிட்ட படங்களும் கூட, இதே போன்று நம்ப முடியாத சில நிகழ்வுகளின், பாத்திரங்களின் மீதே கட்டமைக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் இதுவும் நம் மனம் கவர்கிறது.

கிட்டத்தட்ட ‘ஹாரர்’ போன்று தோற்றமளிக்கும் கதையில், நெஞ்சைத் தொடும் காதல் ஏன் காட்டப்படுகிறது? அக்கேள்விக்குப் படத்தின் இறுதியில் பதிலளிக்கிறார் இயக்குனர். அது நாம் எதிர்பார்த்ததுதான் என்றபோதும், அதையும் மீறி நம் மனம் கனக்கிறது. நம்ப முடியாத்தன்மை கொண்ட ஒரு ஊரின் வரைபடத்தோடு எந்த வகையில் நாயகி மீதான நாயகனின் ‘வெளிப்படுத்தாக் காதல்’ இணைகிறது என்பது மிக முக்கியமானது. இன்னும் நேர்த்தியாகச் சில விஷயங்களை இழைத்திருந்தால் ரசிகர்களைக் கண்ணீர் கடலில் ஆழ்த்துவதற்கான அத்தனை சாத்தியங்களையும் இயக்குனருக்கு அளிக்கக்கூடியது இப்படம்.

அது நிகழவில்லை என்பதைத் தவிர, ‘ஊரு பேரு பைரவகோனா’வில் வேறெந்த அம்சமும் துருத்தலாகத் தெரியவில்லை. அந்த வகையில் தமிழ் தயாரிப்பாளர்கள், நடிகர்களால் கவனிக்கப்படும் படமாக இது அமைந்துள்ளது. அவர்களைக் காட்டிலும், நல்ல படங்களுக்கு அபாரமான வரவேற்பு தருபவர்கள் ரசிகர்கள் என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை.

– உதய் பாடகலிங்கம்

#ஊரு_பேரு_பைரவகோனா_விமர்சனம் #சந்தீப்_கிஷன் #ஹர்ஷா #காவ்யா #தாபர் #வெண்ணிலா #கிஷோர் #வடிவுக்கரசி #Ooru_Peru_Bhairavakona #Ooru_Peru_Bhairavakona_Review #Sundeep_Kishan #Varsha #வர்ஷா பொல்லம்மா #இயக்குனர்_வி_ஆனந்த் #varsa_bollamma #director_v_ananth

Comments (0)
Add Comment