குழந்தைகள், பெண்கள், பெரியோர்களுக்குப் பிடித்தமான தமிழ் சினிமா நட்சத்திரமாகத் திகழ்வது மிகப்பெரிய சவால். அந்த வரவேற்பைத் தக்க வைப்பதற்கு நிறையவே மெனக்கெட வேண்டும். ஒவ்வொரு படத்தின் உள்ளடக்கத்தையும் பார்த்துப் பார்த்துச் செதுக்க வேண்டும். பாடல்கள், சண்டைக்காட்சிகள், நகைச்சுவை தொடங்கி ஒவ்வொரு காட்சியிலும் தான் திரையில் எவ்வாறு வெளிப்படுகிறோம் என்பதை அளந்து பார்த்து வடிவமைக்க வேண்டும்.
அதற்கென்று சில விதிமுறைகளை வகுத்துக்கொண்டு, அதனைச் சிரமேற்கொண்டு செயல்படுத்துவதன் மூலமாக, ‘குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி’ எனும் சிறப்பை ஒவ்வொரு படத்திலும் அடையலாம்.
தமிழில் அப்படியொரு நட்சத்திரமாகத் திகழ்பவர் சிவகார்த்திகேயன். அவரது 21-வது படமான ‘அமரன்’ பட டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. பார்த்து முடித்ததும், அவரது முந்தைய படங்கள் தாங்கி நின்ற சிறப்பம்சங்கள் இதிலுண்டா என்ற கேள்வி நமக்குள் எழுகிறது.
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி!
சினிமா நிகழ்ச்சிகளில் சிலர் சிவகார்த்திகேயனை வானாளவப் புகழ்வதாலோ, ஊடகங்களில் அப்படியொரு பிம்பத்தை உருவாக்க முயல்வதாலோ மட்டும் அதனை நிகழ்த்திவிட முடியாது. உண்மையிலேயே, அவர் நடிக்கும் படங்களின் உள்ளடக்கமும் அதற்கு ஏற்றாற் போலிருக்க வேண்டும். மெரினா, மனம்கொத்திப் பறவை, 3 முதல் இப்போது வரை சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் அதனைப் பூர்த்தி செய்து வருகின்றன.
சிவகார்த்திகேயன் படங்களைக் குடும்பத்தோடு சேர்ந்து கண்டு ரசிக்கலாம் என்று கருதுவதற்கான முக்கிய அம்சம், அவற்றில் பெரும்பாலானவை ‘யு’ சான்றிதழ் பெற்றவை. அதாவது, அந்த படங்களில் முகம் சுளிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகள், வசனங்கள் இடம்பெறாது. பாடல் காட்சிகளில் பெரிதாக ஆபாசமோ, விரசமோ இருக்காது.
கதாநாயகி முதல் இதர பெண் பாத்திரங்கள் வரை அனைத்தும் கண்ணியமாகக் காட்டப்படும். மிக முக்கியமாக, வீடியோகேம் விளையாடுவது போன்று சண்டைக்காட்சிகளில் ’பைட்டர்கள்’ துன்புறுத்தப்பட மாட்டார்கள். அவரது படங்களின் பாடல்களைப் பொது நிகழ்ச்சிகளில் பாடுவதோ, ஆடுவதோ பதின்பருவத்தினருக்குக் கூச்சத்தை ஏற்படுத்தாது. அந்த அளவுக்கு அவை கண்ணியமான காட்சியாக்கத்தைக் கொண்டிருக்கும்.
டாக்டர், மாவீரன் போன்ற படங்களே இந்த வரிசையில் இருந்து விலகி நின்றவை. அவற்றிலும் கூட, அவரது பாத்திரம் இதர நாயக நடிகர்களின் படங்களைப் போலிருக்காது. கதைக்குத் தேவை என்றபோதிலும் கூட, நடிகைகளின் கவர்ச்சியையும் சண்டைக்காட்சிகளில் வன்முறையையும் முடிந்தவரை தவிர்க்க முயற்சிப்பது அசாதாரணமானது.
சிவகார்த்திகேயன் தவிர்த்தவை!
ஆரம்பகாலப் படங்களில் மதுபானம் அருந்துவது போன்று திரையில் தோன்றியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’வில் அதுவொரு நகைச்சுவைக்கான கச்சாப்பொருளாகவே காட்டப்பட்டிருக்கும். மான் கராத்தே, ரஜினி முருகன் போன்ற படங்களிலும் மதுபோதையைப் பின்னணியாகக் கொண்டு பாடல்கள் கூட உண்டு.
ஒருகட்டத்தில் அது போன்ற நகைச்சுவை இளைய தலைமுறையைத் தவறான வழியில் திருப்புவதாக விமர்சிக்கப்பட, அவற்றைத் தன் படங்களில் தவிர்க்கத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக, சிகரெட் புகைப்பது போன்ற ஷாட்கள் இடம்பெறுவது கூட அரிதாகிப் போனது.
உருவக் கேலி செய்வதாக அவர் மீது ஒரு விமர்சனம் வைக்கப்பட, அதையும் தன் படங்களில் குறைக்கத் தொடங்கினார். பெண்களைத் தரக்குறைவாகச் சித்தரிப்பதையும் தவிர்த்து வருகிறார் என்றே சொல்ல வேண்டும்.
இன்று, ‘இதெல்லாம் சகஜம்’ என்று எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் காலச் சூழலே உள்ளது; அப்போதும், இவற்றைத் தவிர்த்தாக வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுவது பாராட்டுக்குரியது. சில மோசமான தோல்விப் படங்களைத் தந்தபிறகும் கூட அவரது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.
’அமரன்’ தரும் ஷாக்!
‘டாக்டர்’ படத்தில் வில்லனின் கையாள் தேடி வர, அவரது கை விரலை சிவகார்த்திகேயன் வெட்டுவது போன்று ஒரு காட்சி உண்டு. அந்த ஷாட்டை மங்கலாக்கிக் காட்டாமல் இருந்ததே பேரிடியாக இருந்தது. அதனைப் பார்க்கும் குழந்தைகள் துணுக்குற மாட்டார்களா என்ற கேள்வி எழுந்தது. ‘மாவீரன்’ படத்திலும் சண்டைக்காட்சிகளில் வன்முறை தெறித்தது. ஆனால், அவரது சமகால நடிகர்களின் படங்களைக் காட்டிலும் அவை குறைவு என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
இது போன்ற சங்கடங்களை ‘அமரன்’னில் எதிர்கொள்ள வாய்ப்புகள் அதிகம். காரணம், 2014-ல் காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வை மையப்படுத்துகிறது இப்படம். தினசரிகளிலேயே அவரது தியாகம் எப்பேர்ப்பட்டது என்று விளக்கிச் செய்திகள் வெளியானது; ஆதலால், நிச்சயம் அவரது ‘பயோபிக்’ நம்மை ரொம்பவே வசீகரிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
ஆனால், அது குழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கும் ஏற்றதாக இருக்குமா என்பதற்குப் பதில் சொல்ல இயலாது. அதீத வன்முறை இல்லாமல், ரத்த வாடை பெரிதாகத் தென்படாமல் இப்படத்தில் சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கலாம். முடிந்தவரை, திரையில் ரத்தக்கறை துடைக்கப்பட்டிருக்கலாம்.
அப்படியில்லாத பட்சத்தில், எல்லையில் நிகழும் தாக்குதல்களை மையப்படுத்தி இதுவரை வெளிவந்த கமர்ஷியல் படங்களின் நீட்சியாகவே ‘அமரன்’னும் கருதப்படும்.
இப்படத்தின் ட்ரெய்லரில் ‘நாம் யார்’ என்று சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து கேட்கும் இடங்களில், ’44 ராஷ்டிரிய ரைபிள்ஸ்’ என்று எதிரில் இருக்கும் வீரர்கள் பதிலளிக்கின்றனர். அப்போது, மிகச்சிறிய அளவில் ஒரு வசவு வார்த்தை ஒலிக்கிறது. இதுவரையிலான சிவகார்த்திகேயன் படங்களில் தென்படாத ஒன்று அது.
படத்தில் அது போன்று மேலும் பல வசனங்கள் இருக்கலாம்; சண்டைக்காட்சிகளில் கோரம் வெளிப்படலாம். நிச்சயமாக, அப்படம் எடுத்துக்கொண்ட கதைக்கு அது நியாயம் சேர்ப்பதாகவே அமையும். ஆனால், அவரது தீவிர ரசிகப் பெருமக்களுக்கு அது கொஞ்சம் உவப்பற்றது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
இந்த விஷயத்தை முன்கூட்டியே சிவகார்த்திகேயனும் கணித்திருப்பார், அது பற்றிச் சிந்தித்து விவாதித்திருப்பார். அதனால், இப்படமும் கூட ‘யு’ அல்லது ‘யுஏ’ சான்றிதழ் பெறவே வாய்ப்புகள் அதிகம். அது நடைபெறாமல் போனால், ’இது வழக்கமான சிவகார்த்திகேயன் படம் அல்ல’ என்ற எண்ணத்தோடு படத்தைக் கண்டு களிக்க வேண்டியதுதான் அப்போது, ‘என்ன சிவகார்த்திகேயன் இப்படி இறங்கிட்டாரு’ என்ற கேள்விகள் பெருகலாம். எவர் கண்டார்?
அந்த விமர்சனங்களில் தேவையானதை மட்டும் கைக்கொண்டு முன்னே தொடர்ந்து பயணிக்க, அவருக்கு நமது பிறந்தநாள் வாழ்த்துகள்!
- மாபா
#அமரன் #சிவ_கார்த்திகேயன் #கேடி_பில்லா_கில்லாடி_ரங்கா #மான்_கராத்தே #ரஜினி_முருகன் #டாக்டர் #மாவீரன் #மெரினா #மனம்_கொத்திப்_பறவை #siva_karthikeyan_bday_special #சிவகார்த்திகேயன் #amaran #kedibilla_killadi_ranga #maan_karate #rajini_murugan #doctor #maaveeran #merina #manam_kothi_paravai