டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 500-வது விக்கெட்டை தட்டித் தூக்கியிருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். இதன்மூலம் மிகக் குறைந்த போட்டிகளில் (98) 500 விக்கெட்களை வீழ்த்திய 2-வது வீரர் (முதல் இடம் முரளிதரன்) என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் அஸ்வின்.
அஸ்வினின் இந்த சாதனைக்காக சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் அஸ்வினை பாராட்டி வருகிறார்கள்.
கிரிக்கெட் உலகில் முத்தையா முரளிதரனுக்கு பிறகு விக்கெட் சாதனை புரிந்த தமிழரான அஸ்வினைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
அஸ்வினின் அப்பா ரவிச்சந்திரன் ஒரு கிரிக்கெட் வீரர். தெற்கு ரயில்வேயில் பணியாற்றிய அவர் எக்மோர் எக்சல்சியர்ஸ் என்ற அணிக்காக ஆடியுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரனால் தேசிய அணிக்காக ஆடும் நிலைக்கு உயர முடியவில்லை. அதனால் தன் மகனை இந்திய அணிக்காக ஆடவைக்க விரும்பினார். சிறு வயதிலேயே அவருக்குப் பயிற்சி கொடுத்தார்.
ஆரம்பத்தில் அஸ்வினுக்கு சுழற்பந்து வீச்சில் ஆர்வம் அதிகம் இல்லை. ஒரு பேட்ஸ்மேனாகத்தான் விரும்பியுள்ளார். கூடவே அப்பாவைப் போல வேகப்பந்து வீச்சிலும் பயிற்சி செய்தார். பள்ளிக்கூட அளவில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் அணியின் தொடக்க ஆட்டக்காரராகவும், மித வேகப் பந்து வீச்சாளராகவும் அஸ்வின் இருந்துள்ளார்.
இந்தச் சூழலில் அவரது பயிற்சியாளரான சி.கே.விஜய்தான் அஸ்வினின் உடல்வாகு ஒரு சுழற்பந்து வீச்சாளருக்கானது என்று கண்டுபிடித்துள்ளார். அதை அஸ்வினுக்கு சொல்லி, அவரை சுழற்பந்து வீச்சாளராக மாற்றியுள்ளார்.
அஸ்வினுக்கு 14 வயதாக இருக்கும்போது அவருக்கு பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் சில மாதங்கள் அவர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஒதுங்கியுள்ளார். வேகப்பந்து வீச்சாளராக இருந்த அஸ்வின் சுழற்பந்து வீச்சாளராக மாற இதுவும் ஒரு காரணம்.
2006-07ம் ஆண்டில் தமிழக அணிக்காக ஆடத் தொடங்கிய அஸ்வின், 2010-ம் ஆண்டில் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடினார். அதன் பிறகுதான் தேசிய தேர்வாளர்களின் கவனத்தைக் கவர்ந்தார்.
இந்தத் தொடரில் அவர் 13 விக்கெட்களை வீழ்த்த, இந்தியாவின் ஒருநாள் போட்டிக்கான அணியிலும், டி20 போட்டிக்கான அணியிலும் அஸ்வின் இடம்பெற்றார்.
2011-ம் ஆண்டில் உலகக் கோப்பைக்கான ஒருநாள் போட்டித் தொடரில் அஸ்வின் சேர்க்கப்பட்டாலும், அவர் அதிக அளவிலான போட்டிகளில் ஆடவில்லை. இதில் 2 போட்டிகளில் மட்டுமே அவர் ஆடினார்.
2011-ம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடந்த போட்டிதான் அஸ்வினின் முதல் டெஸ்ட். இந்த டெஸ்ட்டில் 9 விக்கெட்களை எடுத்த அஸ்வின், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
அஸ்வினுடையது காதல் திருமணம். மனைவியின் பெயர் பிரீத்தி நாராயணன். இவர் அஸ்வினின் சிறுவயது தோழி. இருவரும் 6-ம் வகுப்பில் இருந்து ஒன்றாக படித்தவர்கள். 2011-ம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக முதல் டெஸ்ட் தொடரில் ஆடி முடித்த பிறகு பிரீத்தியை மணமுடித்தார் அஸ்வின்.
கிரிக்கெட்டுக்காக படிப்பை விடக் கூடாது என்பது அஸ்வினுக்கு அவரது பெற்றோர் விதித்த கட்டளையாக இருந்தது. அதை தட்டாத அஸ்வின் பெற்றோர் விருப்பத்துக்காக பட்டப்படிப்பை முடித்தார். அவர் ஒரு பி.டெக் பட்டதாரி. சென்னையில் உள்ள எஸ்.எஸ்.என் கல்லூரியில் அவர் தனது கல்லூரிப் படிப்பை முடித்தார்.
- ரெஜினா சாமுவேல்
#Ravichandran_Ashwin #500_Test_Wicket #International_Test_Cricket #IND_Vs_ENG_Test_Series #விக்கெட் #R_Ashwin #ரவிச்சந்திரன்_ அஸ்வின் #முத்தையா_முரளிதரன் #சச்சின்_டெண்டுல்கர் #டெஸ்ட்_கிரிக்கெட்_போட்டி
#Ravichandran #Ashwin