மான்ஸ்டர் – நத்தையாக நகரும் திரைக்கதை!

உலக சினிமா என்று சொல்லப்படும் படங்களில் திரைமொழி தனித்துவமானதாக இருக்கும். கதையின் வேர் எதை நோக்கிப் பயணிக்கிறது என்று கண்டறியும் முன்னரே திரைக்கதை முடிவு பெற்றுவிடும்.

அதன் பிறகு வீடு திரும்பும் வழியில், நாமாக மனதுக்குள் அந்தக் கதையை ஓட்டிப் பார்த்து, அதில் நிகழ்ந்த மாற்றங்களை மீண்டும் உணர்ந்தபிறகு, அந்த திரைப்படத்தின் முழு பரிமாணமும் பரவத் தொடங்கும்.

அந்த வகையறாவைச் சேர்ந்ததே ஹிரோகஸு கோரே – எடாவின் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜப்பானியப் படமான ‘மான்ஸ்டர்’.

2023-ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான பரிசைப் பெற்ற படமிது. இதில் எழுத்தாக்கத்தினைக் கையாண்டவர் யூஜி சகமட்டோ.

சரி, இந்த படம் எப்படிப்பட்ட காட்சியனுபவத்தை நமக்குத் தருகிறது?

இரண்டு சிறுவர்களின் கதை!

தொலைதூரத்தில் ஒரு மதுபான விடுதி தீப்பிடித்து எரிவதில் இருந்து, ‘மான்ஸ்டர்’ படம் திரையில் ஓடத் தொடங்குகிறது.

அப்போது, சாலையொன்றில் ஓடிவரும் சிறுவன் யோரி ‘லைட்டர்’ ஒன்றைத் தவறவிடுகிறான்.

அவன் படிக்கும் பள்ளியின் முதல்வர் அதனை நேரில் காண்கிறார். தொலைவில் எரியும் கட்டடத்தையும் பார்க்கிறார்.

அந்த கட்டடம் எரிவதைத் தனது வீட்டில் இருந்து பார்க்கிறார் சயோரி முகினோ என்ற பெண்மணி. அவரது மகன் மினோடோ அந்தக் காட்சியைப் பார்த்து துணுக்குறுகிறான். ‘இதனைச் செய்தது யோரிதான்’ என்கிறான்.

ஏற்கனவே மகன் மினோடோவின் செயல்பாடுகளால் குழப்பமுறும் சயோரிக்கு அது ‘அப்நார்மல்’ ஆக தென்படுகிறது.

ஒற்றை ஷுவை வீட்டுக்கு எடுத்து வருவது, நீளமான தலைமுடியைத் தானாக வெட்டிக் கொண்டது உட்பட மினோடோவின் சமீபகாலச் செய்கைகள் அனைத்தும் அவருக்கு வினோதமாகத் தெரிகிறது.

அப்போதுதான், வகுப்பாசிரியர் ஹோரி தன்னைத் தாக்கியதாகச் சொல்கிறான் மினோடோ. உடனே, அது பற்றி பள்ளி முதல்வரிடம் புகார் தெரிவிக்கிறார் சயோரி. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.

ஆனால், ஹோரியோ தான் அவ்வாறு மினோடோவிடம் நடக்கவில்லை என்ற நிலையில் உறுதியாக இருக்கிறார். அதன்பிறகும் தொடர்ந்து மினோடோ புகார் தெரிவிக்க, ஹோரி பள்ளியில் இருந்து நீக்கப்படுகிறார்.

ஒருநாள் பலத்த மழையினால் நிலச்சரிவில் ஊரே சிக்கிய நிலையில், அச்சிறுவனின் வீட்டுக்கு வந்து ‘மினோடோ உன் மேல எந்த தப்பும் இல்ல’ என்று கத்துகிறார் ஹோரி. அப்போதுதான், வீட்டில் மினோடோ இல்லாததை உணர்கிறார் சயோரி.

ஹோரியும் சயோரியும் சேர்ந்து ஊருக்கு வெளியே இருக்கும் ரயில் பெட்டியொன்றை நோக்கி விரைகின்றனர். பேரிடர் தடுப்பு பணியாளர்கள் அங்கு மலைச்சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி அவர்களைத் தடுக்கின்றனர்.

அதை மீறி, இருவரும் சிதைந்து கிடக்கும் அந்த ரயில் பெட்டியின் மேற்பகுதியைத் திறந்து பார்க்கின்றனர். அங்கு, மினோடோவின் மேலாடை மட்டுமே இருக்கிறது.

அப்பெட்டியின் கீழ்பகுதி திறந்து கிடக்கிறது. அதனடியில் உள்ள கால்வாயில் நீர் ஓடிக் கொண்டிருப்பது தெரிகிறது.

இந்தக் கதையானது ஆசிரியர் ஹோரியின் பார்வையிலும், சிறுவன் மினோடோ பார்வையிலும் மீண்டும் மீண்டும் விரிகிறது.

அப்போது மினோடோவின் நண்பனாக யோரி பற்றி முழுமையாகத் தெரிய வருகிறது.

தாயை இழந்து தந்தையிடம் வளர்கிறார் சிறுவன் யோரி. பெண் தன்மை அவனிடம் மிளிர்வதைச் சக மாணவர்கள் கிண்டலடிக்கின்றனர். அப்போது, யோரிக்குத் துணையாக நிற்க முயற்சிக்கிறான் மினோடோ.

போலவே, பள்ளி ஆசிரியரான ஹோரி மதுபான விடுதியில் வேலை செய்யும் ஒரு பெண்ணுடன் காதல் கொண்டிருக்கிறார்.

அதனை சயோரி உட்பட உள்ளூர் பெண்கள் அவ்வப்போது கிண்டலடித்து விவாதிக்கின்றனர். அவர்களது பேச்சில் இருந்து ஹோரியின் சமூக மதிப்பு சரிவது நமக்குப் பிடிபடுகிறது.

இப்படி ஜப்பானின் ஒரு சிறு நகரமொன்றில் உள்ள மக்களின் வாழ்வையும், அவர்களின் கருத்தியலால் இரண்டு சிறுவர்களின் இயல்பு வாழ்க்கை சிதைவுக்கு உள்ளாவதையும் பேசுகிறது ‘மான்ஸ்டர்’.

இந்தக் கதையின் முடிவில் ‘யார் மான்ஸ்டர்’ என்பதைத் தெரிந்து கொள்வது நமது பொறுப்பு.

அதுவே, இந்த படத்தினை மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. கூடவே, அதுவரை திரையில் தென்பட்ட எளிமையான காட்சித்துண்டுகளை மனதுக்குள் ஒன்றாகக் கோர்த்து முழுக்கதையையும் நாமே யூகிக்கத் தூண்டுகிறது.

அசத்தும் திரைக்கதை!

‘மான்ஸ்டர்’ படத்தில் ஒரே காட்சியானது வெவ்வேறு பாத்திரங்களின் பார்வையில் காட்டப்படுகிறது; ஒவ்வொன்றும் வெவ்வேறுவிதமான உணர்வுகளை ஊட்டுகிறது. அதன் வழியே, கதை இன்னொரு திசையில் நகர்கிறது.

ஒரு ‘த்ரில்லர்’ போன்று காட்சிகள் நகர்ந்தாலும், அதனூடே மாபெரும் ‘ட்ராமா’ ஒன்று தானாக விரிகிறது. அதில் மறைந்து கிடக்கும் சில தகவல்கள், இந்த சமூகத்தில் நிகழும் அவலங்களையும் மக்களின் மனவோட்டங்களையும் உணர்த்துகிறது.

கூடவே, இச்சமூகம் வகுத்து வைத்திருக்கிற சில கோட்பாடுகள் இளைய தலைமுறையிடத்தில் உருவாக்கியிருக்கிற கருத்துகளும், அதனால் இரண்டு சிறுவர்கள் எதிர்கொள்ளும் மன பாதிப்புகளும் சொல்லப்படுகிறது.

ஜப்பானிய மொழியில் மட்டுமல்லாமல் ஆங்கிலம், கொரியன் மொழிகளிலும் படங்கள் இயக்கியிருக்கும் ஹிரோகஸு கோரே – இடா, ஒரு திரைக்கதையாசிரியரும் கூட.

ஆனால், இதில் அவர் யூஜி சகமோடோவின் எழுத்தாக்கத்திற்குத் திரை உருவம் தந்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ரியோடோ கொண்டோவின் காட்சிப் பதிவுகள், ஜப்பானிய சிறுநகரமொன்றில் அழகைத் திரையில் காட்டுகிறது.

துண்டு துண்டாகக் காட்சியளிக்கும் ஷாட்கள் முதலில் ‘அனர்த்தமாக’ தெரிந்தாலும், மெல்ல வெவ்வேறு கதாபாத்திரங்களின் பார்வையில் அந்த ஷாட்களின் தொடர்ச்சி காட்டப்படும்போது மனது நிறைவை நோக்கி நகர்கிறது.

இதில் படத்தொகுப்பாளராகவும் இயக்குனர் ஹிரோகஸுவே பணியாற்றியுள்ளார். அதனால், ஒரு காட்சி எந்தப் பாத்திரத்தின் பார்வையில் சொல்லப்படுகிறது என்பதை மிகத்துல்லியமாகத் திரையில் காட்டியிருக்கிறார்.

ருயிச்சி சகமோடோ இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரும்பாலான இடங்களில் மௌனமே நிறைந்திருக்கிறது.

அதையும் மீறித் திரையில் புதிய கதவுகள் திறக்கப்படும் இடங்களில் அவரது இசை வெளிப்படுகிறது. முக்கியமாக, கிளைமேக்ஸ் காட்சியில் மழையுடன் இணைந்து அவரது பின்னணி இசை அற்புதமாக வெளிப்பட்டுள்ளது.

மினோடோ மற்றும் யோரி எனும் இரு சிறுவர்கள், அவர்களது தாய் மற்றும் தந்தையாக நடித்தவர்கள், பள்ளி ஆசிரியராக வருபவர், தலைமையாசிரியர், சக ஆசிரியர்கள், சக மாணவர்கள், நகரவாசிகள் என்று இரண்டு டஜன் பேர் வரை திரையில் வலம் வருகின்றனர். அவர்களே ஒட்டுமொத்த நகரத்தின் பிரதிபலிப்பாகவும் தெரிகின்றனர்.

‘எது உண்மை’ என்ற தேடலை நமக்குள் விதைப்பதாக உள்ளது ‘மான்ஸ்டர்’ திரைக்கதை.

அதில் இருந்து நாம் உணர்ந்துகொள்ளும் கதையும், கதாபாத்திரங்களின் முடிவும், நமது அடிப்படை மனநிலையையே அதிகம் பிரதிபலிக்கும். அதற்கான அத்தனை வாய்ப்புகளையும் தருகிறது யூஜி சகமோடோ மற்றும் ஹிரோகஸு கோரே – இடா கூட்டணி.

அந்த மாயாஜாலத்தை உணர விரும்புபவர்கள் இந்த ‘மான்ஸ்டர்’ திரைப்படத்தைக் காணலாம்.

வழக்கமான த்ரில்லர் படத்தைப் பார்க்க விரும்புபவர்கள் இதனைக் கண்டால் ஏமாற்றம் அடையக்கூடும்.

அதனைக் கடந்து நல்லதொரு திரைப்படம் பார்க்கும் பயணத்தை மேற்கொண்டால், நத்தையைப் போல் நகரும் காட்சிகளையும் மீறி நம் மனதில் பெரும்புயலை உருவாக்கும் இப்படம்.

கூட்டுக்குள் இருக்கும் அந்த உயிரினத்தை நேரில் காண்பது எத்தகைய அனுபவமோ, அது போன்றதொரு சித்திரத்தை நமக்குக் காட்டத்தக்கது இந்த ‘மான்ஸ்டர்’.

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment