2024 ஜனவரி மாதம் முதல் தேதி நண்பர் மகபூப் பாட்சாவின் அலைபேசியில் இருந்து வந்த குறுஞ்செய்தி இது.
*
“அன்பிற்குரிய தோழர் அவர்களுக்கு, வணக்கம்.
நாளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவமனையில் சொல்லி இருக்கிறார்கள்.
இன்று மதியம் மருத்துவமனையில் சேர அறிவுறுத்தினர். இப்போது மருத்துவமனைக்கு புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கிறேன்.
எனது செயல்பாடுகள், வார்த்தைகள், நடவடிக்கைகள் தங்களைப் பாதித்திருந்தால், காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.”
– நாற்பது ஆண்டுகாலத்திற்கு மேற்பட்ட நண்பர் பாட்சா போனிலும் இதே விதமாகப் பேசினார்.
நெகிழ்வு கூடியிருந்தது அவருடைய பேச்சில்.
மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை முடிந்தபோது உற்சாகமான குறுஞ்செய்திகளை அனுப்பினார்.
ஐ.சி.யூ.விலிருந்து தனிவார்டுக்கு மாற்றப்பட்டபோது குழந்தைத்தனமான உற்சாகம் அவரிடம். போனில் பழைய துடிப்புடன் பேசினார்.
பொங்கல் அன்று சமத்துவ உணர்வுடன் வாழ்த்தைப் பகிர்ந்திருந்தார். சீக்கிரம் மதுரைக்குப் போக வேண்டும் என்பதைக் குதூகலத்துடன் சொன்னார்.
சட்டென்று அவருடைய மனைவி மறுபடியும் பாட்சா ஐ.சி.யூ.வுக்கு மாற்றப்பட்டிருப்பதைத் தெரிவித்தபோது மனது கலவரப்பட்டது. திரும்பவும் ஒரு அறுவை சிகிச்சை. ரத்தமும் ஏற்றப்பட்டது.
சில நாட்களுக்கு முன் நண்பர் பாலு அவர்களுடன் மருத்துவமனைக்குச் சென்றபோது அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.
உறவினர்களிடம் நம்பிக்கை தொனிக்கப் பேசிவிட்டு வந்த சில நாட்களில் டயாலிசிஸ் சிகிச்சை. உடலில் வலி கூடிக் கொண்டிருந்தது.
நேற்று காலை பாட்சா சட்டென்று சீரியசான நிலையில் இருப்பதாகத் தகவல் கிடைத்து மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். உறவினர்களிடம் பதற்றம் தொற்றி இருந்தது.
மருத்துவர்கள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதை நாசூக்காகச் சொன்னார்கள்.
நண்பர் ‘மின்னம்பலம்’ காமராஜ் மருத்துவமனைக்கு வந்த பிறகு அவருடன் மூன்றாவது தளத்தில் இருந்த ஐ.சி.யூ. வார்டில் கடைசி அறையில் பாட்சாவைப் பார்த்தபோது, உடம்பில் டியூப்கள் ஊடுருவியிருக்கப்படுத்திருந்தார்.
வெண்டிலேசன் உதவியுடன் மெல்லிய சுவாசம் இருந்தது. பெயரைச் சொல்லி அழைத்தபோது எந்த எதிர் அசைவும் இன்றி இருந்தார். அவர் படுக்கையில் கிடந்த கோலம் கனக்க வைத்தது.
மாலை மறுபடியும் போன் அழைப்பு.
போனபோது நேற்று இரவு பத்து மணியளவில் வெள்ளை போர்த்திய அவருடைய உடலைக் கீழிறக்கிக் கொண்டு வந்தார்கள்.
தொடர் வலியிலிந்து அவரை விடுவித்திருந்தது காலம்.
ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு மதுரைக்கு நகர்ந்தபோது, “இப்படியா அவர் விரும்பிய மதுரைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்” என்று ஒரு கணம் தோன்றியபோது மனம் வலித்தது.
அந்தக் கடைசி நேரத்திய முகத்தை விட, புன்னகை இழையோடும் பாட்சாவின் புன்னகையும், அவரது தார்மீகக் கோபமும் நினைவில் பதிந்திருக்கும்.
நினைவில் நீங்கள் விடைபெற மாட்டீர்கள் பாட்சா!
*
– மணா
#பாட்சா #நண்பர்_மகபூப்_பாட்சா #மகபூப்_பாட்சா #mahaboob-batcha #Human_Rights_activist_and_advocate_A_Mahaboob_Batcha