சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி. வயது 45.
விலங்குகளைப் படம் எடுப்பதற்காக, தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சலப் பிரதேசத்துக்குச் சென்றார்.
கடந்த 4-ம் தேதி கசாங்நளா பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை ஒட்டியிருந்த சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்தது.
எதிர்பாராத இந்த விபத்தில் கார் ஓட்டுநர் தன்ஜின் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கோபிநாத், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே வெற்றியின் நிலை தெரியாமல் இருந்தது. ஒன்பது நாட்களாக வெற்றி துரைசாமியின் உடல் தேடப்பட்டு வந்த நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில், அவரது உடல் நேற்று முன் தினம் மீட்கப்பட்டது.
வெற்றி துரைசாமியின் உடல் நேற்று தனி விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது.
தாம்பரம் அருகே ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வெற்றியின் உடல் வைக்கப்பட்டது.
வெற்றியின் நெருங்கிய நண்பர் நடிகர் அஜித். இருவரும் பைக் ரேஸ்களில் பங்கேற்றுள்ளனர்.
அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் வெற்றி துரைசாமியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
வெற்றியின் உடல் பின்னர் சிஐடி நகரில் உள்ள சைதை துரைசாமி வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
அவரது உடலுக்கு ஆளுநர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வைகோ, அண்ணாமலை, தொல்.திருமாவளவன், ஜி.கே.வாசன், அன்புமணி, சீமான், வி.கே.சசிகலா, ஐசரி வேலன், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
வெற்றி துரைசாமியிடன் உடல் தி.நகர் கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
வெற்றியின் இறுதிச் சடங்கு முடிந்ததும் சைதை துரைசாமி உருக்கமாகப் பேசினார்.
“எனக்கு ஆறுதல் சொன்ன அனைத்தும் நல் உள்ளங்களுக்கும் நன்றி. நான் மனம் கலங்க மாட்டேன்.
சேவையைப் பிரதானப்படுத்தி வாழ்க்கையை அமைத்துக் கொள்வேன் என இந்த நாளில் சூளுரை கொள்கிறேன்.
ஒரு மகன் போனாலும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவிகளில் இருக்கும் மகன்கள், மகள்கள் இருக்கின்றனர்.
இங்குள்ள அனைத்து சமூகத்தினரைச் சார்ந்தவர்களையும் அரசுப் பணியில் சேர்க்க முயற்சிப்பேன். இதனை இந்த நேரத்தில் உறுதியாக எடுத்துக் கொள்கிறேன்” என்றார்.
– பி.எம்.எம்.